சிறுமியிடம் ஓடும் ரயிலில் சில்மிஷம்..

0 14

தமிழகத்தில் குடிப் பழக்கத்தால் ஏற்படும் குற்றச் செயல்களுக்கு அளவே இல்லை. நாளுக்கு நாள் குடிகாரர்களாலும், குடிப் பழக்கத்தாலும் ஏற்படும் குற்றச் செயல்களைப் பட்டியலிட தனியாக ஒரு செய்தி இணையதளமே தொடங்கலாம். அந்த அளவுக்கு அட்காசம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நேற்று குடிப் பழக்கத்தால் நடந்த 3 குற்றச் செயல்களின் தொகுப்புதான் இது. இது வெறும் சாம்பிள்தான். வெளியில் தெரியாமலேயே போகும் குடி போதை தொடர்பான குற்றச் செயல்கள் எத்தனையோ, எத்தனையோ.

ரயிலில் பயணித்த 15 வயது சிறுமியிடம் நள்ளிரவில் குடிபோதையில் செக்ஸ் சில்மிஷம் செய்து ஒரு நபர் சிக்கியுள்ளார். போதையில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்துக் கைதாகியுள்ளார். குடிபோதையால் ஒரு கொலையும் விழுந்துள்ளது

சென்னையிலிருந்து பழனிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது மகன், 15 வயது மகள் ஆகியோருடன் 2ம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் நள்ளிரவு வாக்கில் சேலம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது சிறுமி திடீரென அலறியுள்ளார்.

41 வயது நபரின் அசிங்கச் செயல்

இதையடுத்து பெட்டியில் தூங்கிக் கொண்டிருந்தோர் பதறியடித்து எழுந்தனர். லைட்டுகளைப் போட்டுப் பார்த்தபோது 41 வயதான மயிலாப்பூரைச் சேரந்த நரேந்திரன் என்பவர் அந்த சிறுமியிடம் சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து சிலர் அந்த நபரைப் பிடித்து ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். அந்த நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இன்ஸ்பெக்டரின் மகள்

சேலம் ரயில் நிலையம் வந்ததும் அந்த நபரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பழனியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருப்பது பின்னர் தெரிய வந்தது.

இன்ஸ்பெக்டருக்கு வந்த சோகத்தைப் பாருங்க!

இதேபோல சேலம் மாவட்டம் ஓமலூரில் போக்குவரத்துக் காவல் இன்ஸ்பெக்டரை இரு குடிகார இளைஞர்கள் கன்னத்தில் அடித்த பரபரப்பான காட்சியை மக்கள் பார்த்து அதிர்ந்தனர். ஓமலூர் போக்குவரத்துக் காவல் இன்ஸ்பெக்டர் சக்திவேல். இவர் பஸ் நிலையப் பகுதியில் வாகனத் தணிக்கையில் காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது நான்கு லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். நான்கு லாரிகளின் டிரைவர்களும் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

டூவீலரில் வந்த ஏழரை!

அந்த சமயத்தில் டூவீலரில் வந்த இரண்டு பேர் வேன் டிரைவர் ஒருவருடன் சண்டை பிடித்தனர். இதைப் பார்த்த சக்திவேல், பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி வருமாறு அவர்களிடம் கூறினார். ஆனால் இறங்கி வந்த அந்த இரு இளைஞர்களும் சக்திவேலை பளார் பளார் என அறைந்துள்ளனர். இதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த இருவரையும் மடக்கிப் பிடித்தனர். இன்ஸ்பெக்டரையும் மீட்டனர். அதன் பிறகு இருவரும் குடிபோதையில் இருந்ததால் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி கைது செய்தநர். இவர்கள் திருப்பதி, முருகன் என்று தெரிய வந்தது.

போதையில் தகராறு.. தட்டிக் கேட்டவர் கொலை

இதற்கிடையே, திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள சங்கோதிபாளையம் காந்தி நகர் ஏ.டி.காலனியில் வசித்து வந்தவர் முருகன் (35). இவரது மனைவி ஸ்டெல்லா (32). இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முருகன் நெசவுத்தொழிலாளியாக வேலை செய்துவந்தார். வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிய முருகன், வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த செந்தில் (37) என்பவர் மது போதையில் தகாத வார்த்தைகளால் சப்தம் போட்டுள்ளார். இதைத் தட்டிக் கேட்டார் முருகன் இதனால் கோபமடைந்த செந்தில், அரிவாளை எடுத்து முருகனை வெட்டி விட்டார். இதில் படுகாயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார் முருகன்.

 

Leave A Reply

Your email address will not be published.