கார் மீது மோதி லாரிக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீ பிடித்து

0 2

திண்டிவனம் அருகே கார் மீது மோதி லாரிக்கு அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்தது. இதில் மாணவர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார்.

அரசு கல்லூரி மாணவர்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா தேவனந்தல் அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பழனி. இவரது மகன் ராஜதுரை(வயது 19). இவர் நாகப்பாடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி மகன் மணிகண்டன்(20) சென்னை– வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லிப்ட் இயக்குபவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜதுரை நண்பர் மணிகண்டனை பார்ப்பதற்காக சென்னை சென்றார். பின்னர் இருவரும் ஒரு மோட்டார் சைக்களில் நேற்று காலை சென்னையில் இருந்து ஊருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை மணிகண்டன் ஓட்டி வந்தார்.

கார் மீது மோதி விபத்து

காலை 8 மணிக்கு திண்டிவனம் அருகே சலவாதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற காரின் பின் பகுதியில் திடீரென மோட்டார்சைக்கிள் மோதியது. இதனால் மணிகண்டன் மோட்டார் சைக்கிளில் இருந்து கிழே விழுந்தார். பின்னால் இருந்த ராஜதுரை மோட்டார் சைக்கிளுடன் நிலை தடுமாறி முன்னால் சென்ற லாரியின் அடிப்பகுதியில் சிக்கினார்.

இதில் லாரியில் அவரது மோட்டார் சைக்கிள் சிக்கியதால், சுமார் 30 அடிதூரம் வரை இழுத்து சென்றது. அப்போது மோட்டார்சைக்கிளின் டேங்கில் இருந்து பெட்ரோல் வெளியேறியதால், திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. மேலும் தீ மளமளவென பரவி லாரியில் பற்றி எரிந்தது. இதற்கிடையே லாரிக்கு அடியில் சிக்கிய ராஜதுரையின் மீது பற்றி எரிய தொடங்கியது. லாரியில் தீ பற்றியதை அறிந்த டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்தார்.

தீயில் கருகி மாணவர் சாவு

இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் லாரியின் நடுப்பகுதியும், லாரியின் அடிப்பகுதியில் சிக்கிய மோட்டார்சைக்கிளும் தீயில் கருகின. மேலும் ராஜதுரையும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே தகவலறிந்து விரைந்து சென்ற ரோஷணை போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல்இருதயராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் படுகாயம் அடைந்த மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணிகண்டன் சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் தீயில் கருகி இறந்த மாணவர் ராஜதுரை உடலையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்து காரணமாக சென்னை–விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து லாரியை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் 1½ மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது.

போலீஸ் விசாரணையில் தீப்பிடித்து எரிந்த லாரி சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு குளிர்பானம் கொண்டு சென்றதும், இதை தஞ்சாவூரை சேர்ந்த டிரைவர் சண்முகநாதன்(46) என்பவர் ஓட்டி சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.