அருப்புக்கோட்டை அருகே வேன் விபத்து

0 3

அருப்புக்கோட்டை அருகே வேன் மரத்தில் மோதிய விபத்தில் தலைமை ஆசிரியை உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

தலைமை ஆசிரியை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றுபவர் தங்கப்பாண்டியன் (வயது 50). இவரது மனைவி சரளாதேவி (48). இவர் கமுதி அருகே பூமாவிலங்கை பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். பள்ளி விடுமுறையையொட்டி சரளாதேவி தனது உறவினர்களுடன் குற்றாலம் செல்ல முடிவு செய்தார். அதன்படி தனது தாயார் முத்துநாச்சியார்(64), மகாலிங்கம் என்பவரது மனைவி காசியம்மாள்(60) உள்பட 19 பேருடன் ஒரு வேனில் குற்றாலம் சென்றார். இந்த வேனை கமுதியைச் சேர்ந்த முகமது அப்துல்சமது ஓட்டிச்சென்றார். அவர்கள் குற்றாலம் சென்று விட்டு நள்ளிரவு ஊருக்கு புறப்பட்டனர். அருவியில் குளித்த களைப்பில் அனைவரும் வேனுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எம்.ரெட்டியபட்டி அருகே ஒத்தக்கடை பகுதியில் வந்துகொண்டிருந்தபோது வேன் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் வேன் பலத்த சேதம் அடைந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கி அனைவரும் அபயக்குரல் எழுப்பினர்.

3 பேர் பலி

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் போலீசாரும் அக்கம் பக்கத்தினரும் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விபத்தில் தலைமை ஆசிரியை சரளாதேவியும் அவரது தாயார் முத்துநாச்சியாரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். வேன் டிரைவர் உள்பட 11 பேர் காயம் அடைந்து அருப்புக்கோட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு காசியம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

மேலும் விபத்தில் காயம் அடைந்த வாழவந்தான்(75), குருபிரசாத்(25), செல்வக்குமார்(37), வசந்தி(52), அன்புச்செல்வன்(54), சிவராமநாதன்(35), வேன்டிரைவர் முகமதுஅப்துல்சமது(30), சாந்தா(64), விகாஸ்சாய்சிவா(8), வைணவி(3) ஆகியோருக்கு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.