திருச்சியில் கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் போர்க்குரல்

0 29

திருச்சி: சட்டமன்றத்தின் தற்போதைய நிலையை மாற்ற உள்ளாட்சி தேர்தலில் நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திருச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நேற்று மாலை கண்டன பொதுக்கூட்டம்  நடந்தது.MK

கொட்டும் மழையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: `சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும்பாடு’ என்ற தலைப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வராக இருக்கக்கூடியவர் சகிப்புத்தன்மை, விமர்சனங்களை தாங்கிக்கொள்பவராக இருக்க வேண்டும் என  ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அறிவுரை கூறி உள்ளது.ஜெயலலிதாவை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக தி.மு.க. எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர். சபாநாயகர் தனபால் நடுநிலையுடன் செயல்படவில்லை.

சட்டமன்றம்  பஜனைபாடும், ஆராதனை செய்யும், ஜால்ரா அடிக்கும் மடமாக உள்ளது. சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள் என சர்வாதிகார அறிக்கையை படிக்கிறார். திமுக தலைவர் கருணாநிதியை இழித்தும், பழித்தும் பேசுகின்றனர். இப்படி பேசலாமா? இது தவறு என வாதிடுகிறேம். போராடுகிறோம். அதிமுக எம்எல்ஏ ஒருவர், திமுக எம்எல்ஏக்கள் 89 பேரை வயக்காட்டு பொம்மைகள் என்று பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க மறுக்கின்றனர். ‘கொத்தடிமைகள், சோற்றில் அடித்த பிண்டங்கள்’ என்று அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி உள்ளனர்.

பேரவை விவாதத்தின்போது, திடீரென சபாநாயகர் ‘திமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுங்கள்’ என சபைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறார். 2 முறை எச்சரித்த பிறகுதான் எம்எல்ஏக்களை வெளியேற்ற வேண்டும். சபைக்காவலர்கள் 30 பேர் தான் இருப்பர். அன்று 250 பேர் இருந்தனர். என்னை தூக்கிக்கொண்டு போவோம் என்றனர். நான் வெயிட் கிடையாது. துரைமுருகனை தூக்க முடியவில்லை. பத்திரிக்கையாளர் இடத்துக்கு தூக்கி செல்லுங்கள் என்றேன். காவலர்களில் ஒருவர் எனது காதருகே ‘இது எனக்கு கிடைத்த பாக்கியம்’ என்றார். வலது பக்கம் இருந்தவரா, இடது பக்கம் இருந்தவரா என நான் சொல்ல மாட்டேன். சொன்னால் அவரது வேலை காலியாகி விடும்.

திமுகவினரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அமைச்சர்கள் திணறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஐசியு வார்டில், கோமா நிலையில் உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 277 கூட்டுக்கொள்ளைகள், 5,918 கொள்ளைகள், 33,115 திருட்டுகள், 5,400 கொலைகள் நடந்துள்ளதாக கோரிக்கை கொள்கை விளக்கப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கொலை, கொள்ளை நடந்தும், தமிழகம் அமைதிப்பூங்காவாக இருக்கிறது என ஜெயலலிதா பேசுகிறார். ரயில் மேற்கூரையை உடைத்து கொள்ளை, பெண் நீதிபதி வீட்டில் 450 பவுன் கொள்ளை என தமிழகத்தில் கொள்ளைகள் நாள்தோறும் அரங்கேறும் நிலையில், ‘தமிழகம் அமைதிப்பூங்காவாக உள்ளது’ என தைரியமாக ஜெயலலிதா கூறுகிறார். பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.தேர்தல் நேரத்தில் கன்டெய்னரில் பிடிபட்ட ரூ.570 கோடி வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏன் இந்த கூட்டத்துக்கு தலைமையேற்று நடத்தும் திமுக திருச்சி மாவட்ட செயலாளர்  நேருவின் தம்பி ராமஜெயம் கொலை நடந்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன.

இதுவரை குற்றவாளிகளை  நெருங்கினார்களா?. இந்த வழக்கில் முறையாக விசாரிக்க யோக்கியதை உள்ளதா? வீடுகளில் புகுந்து கொள்ளை, ரயில் கொள்ளையை தாண்டி இந்த அதிமுக ஆட்சியில் பறக்கும் விமானத்தை உடைத்து கொள்ளை நடந்தது என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.சாத்தான் வேதம் ஓதுவதை போல சட்டசபையில் ஜெயலலிதா அறிக்கை வாசித்துக்கொண்டிருக்கிறார். இந்த அவல நிலையை மாற்ற நமக்கு சரியான களம் உள்ளாட்சித்தேர்தல் தான். அதில் சிறப்பாக பணியாற்றி நாம் யார் என்பதை நிரூபிக்க வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.