தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் எவ்வளவு? பதிலளிக்க  உயர்நீதிமன்றம் உத்தரவு

0 15

தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளன, மருத்துவ உபகரணங்கள் போதுமானதாக உள்ளனவா என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 139 டாக்டர் பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 99 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதனால் நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே டாக்டர்கள் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றம் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது“ என்று தெரிவித்தார்.

 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், செவிலியர் பணியிடங்கள் எத்தனை, இதில் காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை, டயாலிசிஸ் எந்திரம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களும், எந்திரங்களும் போதுமான அளவு உள்ளனவா, அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் வருகிற 14–ந்தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.