ஆக்சன் காவல்துறை… திருச்சி போலீஸாருக்கு ராயல் சல்யூட்.

0 15

தொடர் திருட்டை அம்பலப்படுத்திய நம்ம திருச்சி இதழ்.. ஆக்சன் காவல்துறை…

திருச்சி போலீஸாருக்கு  ராயல் சல்யூட்.

திருச்சியில் அடுத்தடுத்து அரங்கேறியவரும் தொடர் திருட்டு மற்றும் தாலிச்செயின் பறிப்புகள் குறித்து நம்ம திருச்சி  இதழில் கடந்த மூன்று இதழ்களில் மிக விரிவாக வெளியிட்டிருந்தோம். நாம் எழுதியதைபோலவே, ஆடம்பர வாழ்க்கைக்காக கல்லூரி மாணவர்கள் தாலி செயின் பறிப்புகளில் ஈடுபட்டதும், அவர்களின் தலைவனான துரை கைது செய்யப்பட்டுள்ளான். இந்த கும்பலிடமிருந்து சுமார் 300 பவுன் மற்றும் எடை எடையாக நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் மீனுக்காக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய  பைக், செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்தபடும் பைக்குகள் எனவும், ஆற்றுக்குள்  பைக்களை மறைந்து வைத்து, தேவையானபோது அதை வெளியில் எடுத்துப் பயன்படுத்தி திருடுவதையும் இந்த திருட்டுக்கு கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாக நாம் எழுதி இருந்தோம்.அந்த இதழ் வெளியான  அடுத்த சில தினங்களில் திருச்சி போலீஸார், இளைஞர் ஒருவரை கைது செய்தனர், அவர்  ஆடம்பர வாழ்வுக்காக செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது அம்பலமானது.

அடுத்து வெளியான நம்ம திருச்சி இதழில் திக் திக் திகில் திருச்சி எனும் தலைப்பில் திருச்சியில் நடக்கும் கொள்ளை செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவர்கள் குறித்தும், இந்த சம்பவங்களில் இளைஞர்கள் படித்துக்கொண்டே, ஆடம்பர செலவுக்காக நண்பர்களுடன்,ரேஸ் பெட்டிங் வைக்க திருடுவது என உள்ளதை உள்ளபடியே திருச்சி மக்களின் நலன்கருதி  வெளியிட்டோம். இந்தக் கட்டுரைகள் காவல்துறையிலும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன்பிறகு திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதா அவர்கள், திருச்சி முழுவதும், காலை 5மணி முதல் 8 மணி வரை ஒவ்வொரு பகுதிகளிலும் இருசக்கர வாகன சோதனை நடத்தவும், ரவுண்ட்ஸ் போகவும் உத்தரவிட்டார். கடந்த சிலவாரங்களாக திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே காவல்துறையினர் இரவு பகலாக வாகன சோதனை நடத்துகிறார்கள்.

இந்நிலையில் திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவர் வாகன சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.

இதுகுறித்து காவல்துறை வட்டாரம், “கடந்த 18ம் தேதி ஓலையூர் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்ட திருச்சி கே.கே.நகர் போலீசார், அந்த வழியாக வந்த ஒரு கருப்பு கலர் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது காரில் வந்த துரை (எ) துரைசாமியையும்,தென்றல் நகரைச் சேர்ந்த அபிலாஷ் எனும் கல்லூரி மாணவரையும் கைது செய்தோம், அவர்களிடம் விசாரித்ததில்,  தென்றல் நகரைச் சேர்ந்த அபிலாஷ், சண்முகாநகரை சேர்ந்த ஹரிஹரன், திருவெறும்பூரை சேர்ந்த ஆல்பின் ஜெரோம் ஆகியோர் கல்லூரி மாணவர்களுடன் கூட்டு சேர்த்து துரை தலைமையில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் காரில் சென்று பூட்டியிருக்கும் வீடுகளில்  கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 93 பவுன் நகைகள், ரூ. 1லட்சத்து 20ஆயிரம் மதிப்புள்ள 3கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.18 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரையும் கைப்பற்றி உள்ளோம். இப்போது சிறையில் இருக்கும் இவர்களை மீண்டும் விசாரணைக்கு எடுத்து மேலும் விசாரிக்க உள்ளோம்” என்றார்கள்.

துரைசாமி எப்போதும், தன்னுடன் கல்லூரி படிக்கும் மாணவர்களை தன்னோடு வைத்துக்கொண்டிருப்பார். பட்டப்பகலில் பூட்டியிருக்கும் வீடுகளில் கைவரிசை காண்பிப்பதுதான் துரைசாமியின் ஸ்டைல். இதுவரை 30 வீடுகளுக்கு மேல் இவன் கைவரிசை காட்டியுள்ளார். அதில் திருடிய பொருட்களை கை மாற்றவும், இடமாற்றவும் கல்லூரி மாணவர்களை துரை பயன்படுத்தியுள்ளான். காலப்போக்கில் கல்லூரி மாணவர்களே, தொழில்முறை திருடர்களாக மாறியிருப்பது அதிர்ச்சியாக இருந்தது என பதறிய போலீஸார்.  இப்போது திருச்சி மாநகரம் மற்றும் மாவட்ட காவல்துறை முழுக்க  செயின் திருட்டு உள்ளிட்ட முக்கிய சம்பவங்களுக்காக இயங்க ஆரமித்துள்ளது என்றார்கள்.

 இந்த ஆப்ரேசனில் சிட்டிக் கமிஷனர் மஞ்சுநாதா உத்தரவின் பேரில் மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மயில்வாகனன் அவர்களின் நேரடி பார்வையில் இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் தலைமையிலான தனிப்படை சாதித்துள்ளது. இப்போது போலீஸ் அதிகாரிகள் கையில் திருச்சி மாநகரில் அதிவேகமாக ஓட்டும் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களின் பட்டியல் கையில் வைத்துள்ளார்கள். அதைவைத்து போலீஸார், தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபடுகிறார்கள்.

நம்ம திருச்சி இதழில் வெளியிட்ட செய்திக்கு பிறகு ரியல் ஆக்ஸனில் இறங்கி 6 மாவட்டங்களை உலுக்கிய திருடனையும், அவனுக்கு துணையாக இருந்த கல்லூரி மாணவர்களையும் கைது செய்த திருச்சி மாநகர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள், தொடர்ச்சியாக வாகன சோதனையிலும் ஈடுபட்டுள்ளார். நம்ம திருச்சி ஆசிரியர் குழு சார்பில் ராயல் சல்யூட்.

 போட்டிபோட்டுக்கொண்டு இயங்கும் காவல்துறை

 கடந்த மூன்றுவருடங்களாக திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் திருட்டு விசிடி, லாட்டரி சீட்டுகள், பைக் திருட்டு, பிளாக் மார்க்கெட் மதுபாட்டில் உள்ளிட்டவற்றுக்கு காவல்துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கு பணத்தை கொடுத்துச் சரி செய்து லட்சக்கணக்கில் பணம் பார்த்தார்கள். ஆனால் காவல்துறையிலும் சில நல்ல அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக முன்னாள் கண்டோண்மெண்ட் ஏ.சி அசோக்குமார், திருச்சியில் பணியாற்றியவரை தனது எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் கடுமையாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்துவந்தார். ஆனாலும் திருச்சியின் மற்றபகுதிகளில் பழைய நிலை நீடித்தது.

இதுதொடர்பாக புகார்கள் குவிந்தாலும் கேட்பாரற்று இருந்தது. மேலும் கடந்த சிலவருடங்களாக வருடங்களாக பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறைக்குமான இடைவெளி அதிமானதால்  இதுகுறித்து செய்திகள் வெளியானாலும்  நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது. ஆனால் அவ்வப்போது திருடர்களை பிடித்து கணக்கு மட்டும் காவல்துறை சார்பில் காட்டப்பட்டது.

 இந்நிலையில் கடந்த 6மாதத்திற்கு முன் திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்திற்கு அடுத்தடுத்து காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டார்கள். திருச்சி மாநகர துணை ஆணையர் மயில்வாகன், அடுத்து கமிஷ்னர் மஞ்சுநாதா, டி.ஐ.ஜி அருண், ஐஜி வரதராஜுலு, திருச்சி எஸ்.பி செந்தில்குமார், திருவெறும்பூர் ஏ.டி.எஸ்.பி கலைச்செல்வன் என ஆக்டிவ் அதிகாரிகள் திருச்சிக்கு வந்தார்கள்.

 வந்த வேகத்தில் மாநகர துணை ஆணையர் மயில்வாகன், மாநகரில் நடக்கும் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் தொழில்கள் குறித்த புள்ளி விபரங்களை சேகரித்து அதை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மஞ்சுநாதாவிடம் கொடுத்தார், அதைபார்த்த கமிஷனர் மஞ்சுநாதா, இதுகுறித்து விசாரிக்கவும், சிட்டியில் நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுக்க துணை ஆணையருக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளார்.

அடுத்து துணை ஆணையர் மயில்வாகனன், திருச்சி மாநகரில் உள்ள இன்ஸ்பெக்டர்களுக்கு ஒருவாரம் டைம் கொடுத்து, அவர்கள் லிமிட்டில் நடக்கும் இதுபோன்ற செயல்களை தடுக்க உடனடியாக உத்தரவிட்டார். ஆனாலும் பல இடங்களில் சட்டவிரோத செயல்கள் தொடர்ந்தது. இதை தெரிந்துகொண்ட மாநகர துணை ஆணையர் மயில்வாகனன், தனது டீமுடன் களமிறங்கி அடுத்தடுத்து சீடி, லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து லோக்கல் இன்ஸ்பெக்டர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். மேலும் ஸ்டேசன்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பஞ்சாயத்து செய்வதாக குற்றச்சாட்டு வர, அதை கவனத்தில் எடுத்துக்கொண்ட துணை ஆணையர், இதற்கு முடிவுகட்ட இப்போது களமிறங்கி உள்ளார். இப்போது திருச்சி மாநகரம் முழுக்க காவல்துறையினர் அலர்டாகவே உள்ளார்கள்.

மிகுந்த நம்பிக்கையோடு மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் காத்திருக்கும் பொதுமக்கள்

திருச்சி மண்டலத்தில் காவல்துறையினர் தப்பு பண்ணினாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கிய பெருமை திருச்சி மாவட்ட காவல்துறைக்கு உண்டு, அரியலூரில் ஒரு இன்ஸ்பெக்டர் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக புகார் எழ அவர் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுத்தார் டி.ஐ.ஜி அருண், அதேபோல் கடந்த 21ந்தேதி மணப்பாறை போலீஸார் மற்றும் ஊர்காவல்படையினர் சேர்ந்து கரன்ஸி கும்பலை மிரட்டி 3 லட்சத்திற்கு மேல் பணம் பறித்ததை தெரிந்ததும் அவர்களை கைது செய்ய ஐ.ஜி வரதராஜலு உத்தரவிட்டார். எஸ்.பி செந்தில்குமாரும், சமயபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடந்த சயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட சிலரை கைது செய்துள்ளார்கள். மேலும் தீவிர கண்காணிப்புக்கு தொடர்ந்து உத்தரவிட்டுள்ளார்கள்.

 இது இப்படியிருக்க திருச்சி மாவட்ட காவல்துறை போட்டிபோட்டுக்கொண்டு பணியாற்றுகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.