ஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி ! அதிர்ச்சியில் அரசியல்வாதிகள்

0 3

ஜல்லிக்கட்டு இளைஞர்கள் துவங்கிய புதிய அரசியல் கட்சி

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் அரசியலில் குதித்தனர். ‘என் தேசம் என் உரிமை’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்காக அரசியல் கட்சி தலைவர்கள் 2 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்கள் கூட்டம் ஜல்லிக்கட்டை ஒரே மாதத்தில் மீட்டெடுத்து, உலகத்தின் பார்வையை தன் பக்கம் திருப்பியது.

சென்னையில் ஆலோசனை

வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வு தமிழக இளைஞர்களை உலக அரங்கில் தலை நிமிர செய்தது.

இளைஞர்களின் இந்த எழுச்சி தற்போது அரசியல் வடிவிலும் மாற தொடங்கியிருக்கிறது. மக்களின் எண்ணங்களுக்கேற்ப அரசியல் பயணத்தை வகுப்பது தொடர்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் சமூக வலைத் தளங்களில் விவாதித்தனர்.

அதன்படி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கெடுத்த இளைஞர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள் திரண்டு வந்தனர். ஐ.டி. துறையில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரத்துறையில் இருப்பவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிபவர்கள் கலந்துகொண்டனர்.

புதிய கட்சி

கூட்டத்தில் புதிய கட்சியை தொடங்க முடிவு செய்யப்பட்டு, கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்பட்டது. இதனை மாணவர்கள் கைத்தட்டி வரவேற்றனர்.

புதிய அரசியல் கட்சிக்கு “என் தேசம் என் உரிமை” என்று பெயரிட்டுள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபினேசர், சத்யா, பிரவீணா, சுகன்யா, கார்த்தி, சுதந்திர தேவி, பிரகாஷ், பிரசாத் ஆகியோர் கட்சியின் பெயரை அறிவித்தனர். தேசியகொடியின் நிறத்துடன் அமைந்துள்ள கொடியின் நடுவில் இளைஞர் ஒருவர் அடிமை சங்கிலியை உடைத்தது போன்ற படமும் இடம்பெற்றுள்ளது.

 

Youngsters and students participate in a

சமூகத்தை காக்கும் கடமை

புதிய கட்சி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையும் தொடங்கியது. ரூ.10 கட்டணத்தை செலுத்தி பலரும் ஆர்வத்துடன் உறுப்பினராக சேர்ந்தனர். கட்சியின் செயல்பாடு குறித்து எபினேசர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்களால் எப்படி வெற்றி பெற்றது என்பது இன்றைக்கு உலகத்துக்கே தெரியும். இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் நிலவும் வறட்சியை போக்கவும், விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்தவும், தமிழகத்தை உலக அரங்கில் தலை நிமிர செய்யவும் நாங்கள் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறோம். கட்சியில் இணைபவர்களிடம் ஊழல் அற்ற தமிழ்நாட்டை உருவாக்க செய்ய வேண்டிய பணிகள் என்ன? நமது கட்சியை நிலைப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நீங்கள் சொல்லும் 5 வழிகள் என்ன? விவசாயிகள் நலனுக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதிலும், அதிகாரப் பதிவிலும் உங்களது யோசனைகள் என்ன? இளைஞர்களின் வேலை வாய்ப்பை எவ்வாறு அதிகரிப்பது? இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றால் நீங்கள் எந்த சட்டத்தை மாற்றியமைப்பீர்கள்? மேற்கண்ட கேள்விகளை கேட்டு வருகிறோம். அவர்கள் தெரிவிக்கும் பதில்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்கிறோம்.

 

அப்துல்கலாம்

இந்த தகவலின் அடிப்படையில் கட்சியில் பொறுப்பும் வழங்குகிறோம். 3 ஆண்டு களாக அரசியல் கட்சிகளால் தீர்த்து வைக்க முடியாத ஜல்லிக்கட்டு பிரச்சினை இளைஞர்கள் ஒன்று திரண்டு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உடனடியாக முடிவுக்கு வந்தது. இளைஞர்கள் எளிதாக சமூக வலைத்தளங்கள் மூலம் சமூகத்தில் நடக்கும் விஷயங்களை புரிந்துகொள்கிறார்கள். மக்களுக்கும் தெரிவிக்கிறார்கள். இப்படி பல புதுப்புது விஷயங்கள் சமூகத்தில் இழையோடி இருப்பது தெரியவந்தது. இவற்றுக்கெல்லாம் தீர்வு கண்டு சமூகத்தை காக்கும் கடமை இளைஞர்களுக்கு இருப்பதை உணர்ந்தோம்.

எனவேதான் அன்று மாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று நாட்டுக்காக போராட கட்சியை தொடங்கி இருக்கிறோம். எங்களுக்குள் தலைவர் யார்? முதல்-அமைச்சர் யார்? பிரதமர் யார் என்ற உணர்வுகள் கிடையாது. உருப்படியாக நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும். அது மட்டும்தான் குறிக்கோள். அப்துல்கலாம் நிறைய கண்டுபிடித்தார். எல்லாவற்றையும் விட முக்கியமாக இளைஞர்களை கண்டு பிடித்தார். அவர்களால்தான் இந்த தேசத்தை உயர்த்த முடியும் என்று நம்பினார். அவரது நம்பிக்கையின் அடிப்படையில் எங்களது சேவையை தொடருகிறோம்.

 

நம் தேசம் நம் உரிமை அரசியல் கட்சியின் கொடி

தமிழர்களின் மனசாட்சி

எங்கள் கட்சியின் கொள்கைகள் லஞ்சம், ஊழல் அற்ற தமிழகத்தை உருவாக்குவது. சாதி, மதசார்பற்ற நாட்டை உருவாக்குவது, மதுவை அறவே ஒழிப்பது. உலகத்தரத்துடன் அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை வழங்குவது. கட்சியிலும், ஆட்சியிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவது. 60 வயது முடிந்தவர்களுக்கு தேர்தலில் நிற்க அனுமதி கிடையாது. அவர்கள் ஆலோசகர்களாக செயல்படலாம். சாதி, மத அடிப்படையில் பதவி வழங்க மாட்டோம். குற்றப்பின்னணி கொண்டவர்கள் கட்சியில் அடிப்படை உறுப்பினராகவும் இருக்க முடியாது.

பணபலம் அல்லது புகழை மையமாக வைத்து தனிப்பட்ட யாருக்கும் பதவி வழங்க மாட்டோம். நேர்மையும், திறமையும் உள்ள அனைவருக்கும் வாய்ப்பு உண்டு. எங்களைப் பொறுத்தவரை தலைவர் என்பவர் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார் என்பதுதான். எங்கள் கட்சி தமிழர்களின் மனசாட்சியாக செயல்படும்.

 

தேர்தலில் போட்டி

இளைஞர்கள், பொதுமக்களின் எண்ணங்களில் மாற்றம் வரவேண்டும். நிர்வாகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். எனவே தேர்தலில் எங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். உள்ளாட்சி தேர்தலிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் கண்டிப்பாக போட்டியிடுவோம். அப்போது இளைஞர் சக்தியையும், மாணவர் சக்தியையும் வெளியே கொண்டு வருவோம். போராட்டக்களத்தில் மட்டும் தான் நாடு எங்களை திரும்பி பார்த்தது. வரும் காலத்தில் அரசியல் களத்திலும் திரும்பிப்பார்க்க வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ். சகாயம், பொன்ராஜ், சினிமா நடிகர் ராகவா லாரன்ஸ், ஹிப்ஆப் தமிழா என அரசியலுக்கு இவர்ளை வரவழைக்க வேண்டும் என்று  குழுவாக இளைஞர்கள் அழைத்துக்கொண்டு இருந்த நிலையில் இவர்கள் யாருடைய பின்னணியும் இல்லாமல் புதிய எண்ண அலைகள் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒருங்கிணைத்து வருகிறார்கள். இவகள் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை   உளவுத்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் உள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி இளைஞர்கள் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதை மக்களை விட இப்போது உள்ள அரசியல்வாதிகளே அதிர்ச்சியுடன் கண்காணிக்க துவங்கியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.