அமைச்சர் விஜயபாஸ்கரை காட்டி கொடுத்த பாசக்கார நண்பன் ! ரெய்டின் சுவாரஸ்யம் !

0 42

நண்பனை மாட்டிவிட்ட நண்பன்!

அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அவரது உறவினர் களின் வீடுகள் உள்ளிட்ட 35 இடங்களில் நடந்த வருமானவரி சோதனையில், ரூ.4½ கோடி ரொக்கம், ரூ.86 கோடிக்கு முறைகேடு நடந்ததற்கான ஆதாரம் கிடைத்தது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் 12-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. நேற்று வரை இதுதொடர்பாக சுமார் 300 புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளன.

அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதாக அந்த புகார் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கர் தரப்பில் இருந்துதான் பணப்பட்டுவாடாவுக்கான மொத்த பணமும் வழங்கப்படுவதாக ரகசிய தகவல் வருமானவரித்துறைக்கு கிடைத்தது.

அதன் அடிப்படையில், நேற்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் உள்பட அவரது ஆதரவாளர்கள், உறவினர் கள், தொழில் நிறுவனங்கள் என மொத்தம் 35 இடங்களில் வருமானவரித்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை கமிஷனர் ஜெயராகவன் தலைமையில் தமிழகம் முழுவதும் நடந்த அதிரடி சோதனையில் 200 அதிகாரிகள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையில் கோடிக்கணக்கான அளவில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா நடத்த திட்டமிட்டிருப்பதற்கான முக்கிய ஆவணம் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியது.

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கிய இந்த சோதனை குறித்து, வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் பேசும் போது….

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என தமிழகம் முழுவதும் 35 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நயினார் என்பவரிடம் இருந்து ரூ.2.97 கோடி பணம் சிக்கி உள்ளது. அவருக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரிடம் இருந்து ரூ.1.1 கோடி கைப்பற்றப்பட்டு உள்ளது. இது தவிர புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரூ.30 லட்சம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

ஒட்டு மொத்தமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.86 கோடி அளவில் பண பரிமாற்றம் நடந்ததற்கான ஆவணங்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடக்கும் சூழ்நிலையில் அத்தொகுதியின் வாக்காளர் பட்டியல் எம்.எல்.ஏ. விடுதியில் சிக்கியுள்ளது. இது முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. அதில் பெரும்பாலானோரின் பெயர்களில் குறியிடப்பட்டு (டிக்) உள்ளது. இதன் மூலம் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டு உள்ளது என்று தெரிகிறது.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தபோது, ‘எனது குழந்தையை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பக்கூட வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. பலமுறை அனுமதி கேட்டும் உறுதியாக மறுத்துவிட்டனர்’ என்று அவர் புகாராக கூறியிருக்கிறார். இது முற்றிலும் தவறான தகவல் ஆகும்.

வருமான வரி சோதனை நடந்த சமயத்தில் அவரது மகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப நாங்கள் அனுமதி வழங்கினோம். ஆனால் வீட்டின் வெளியே கூடியிருந்த கூட்டத்தை பார்த்து தனது மகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப அவர் விரும்பவில்லை. அதனால் அவர் தனது மகளை வீட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டார். அவரது மகளும் ஒரு பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக கூறினாள். ஆனால் நாங்கள் அனுமதி வழங்கியும், அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை ஏற்கவில்லை. இது தான் உண்மை.

பண பரிமாற்றம் நடந்தது என்று வந்த தகவலின் எதிரொலியாக அதேபோல நடிகர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சோதனையின்போது ஆர்.கே.நகர் தொகுதிக்கு அ.தி.மு.க. (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து பிரசாரத்துக்கு செல்லவேண்டும் என்று சரத்குமார் எங்களிடம் கேட்டார். நாங்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

அந்த சமயத்தில் தமிழக அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர் திடீரென்று சரத்குமார் வீட்டுக்கு வந்தனர். சரத்குமாரை வலுக்கட்டாயமாக பிரசாரத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். சுற்றி நின்று சரத்குமாரை அவரது வீட்டிலிருந்து பிரசாரத்துக்கு அழைத்து சென்றுவிட்டனர். அவரும் எங்களிடம் அனுமதி பெறாமலேயே சென்றுவிட்டார். வருமான வரி சோதனை நடக்கும் சமயத்தில் சம்பந்தப்பட்டவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. ஆனால் அதையெல்லாம் மீறி சரத்குமாரை அழைத்து சென்றுவிட்டனர். இது சட்டவிரோதமான செயல் ஆகும்.

தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 200 அதிகாரிகள் ஈடுபட்டனர். சென்னையில் 20 இடங்கள், புதுக்கோட்டையில் 15 இடங்கள் என தமிழகம் முழுவதும் 35 இடங்களில் அதிகாலை 4 மணி முதலே வருமான வரித்துறை சோதனை தொடங்கியது.

தமிழகம் முழுவதும் நடந்த வருமான வரித்துறை நடத்திய சோதனை தொடர்பான அறிக்கையை தேர்தல் கமிஷன் எங்களிடம் கேட்டிருக்கிறது. எனவே அதுதொடர்பான விரிவான அறிக்கையை தேர்தல் கமிஷன் மற்றும் எங்கள் துறை உயர் அதிகாரிகளுக்கும் நாங்கள் தாக்கல் செய்துவிட்டோம். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து இடங்களிலும் காலை 6 மணியளவிலேயே புகுந்து வருமானவரித்துறையினர் சோதனையிட தொடங்கினர். அவர்களது பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவ படையினர் துப்பாக்கியுடன் வந்திருந்தனர்.

சென்னையில் 25 இடங்களிலும், புதுக்கோட்டை, நாமக் கல் உள்ளிட்ட வெளியூர்களில் 15 இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள காவிரி அரசு பங்களாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை 6 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் வீட்டுக்குள் நுழைந்து சோதனையை தொடங்கினர். அவர்களின் பாதுகாப்புக்கு மத்திய துணை ராணுவ படையினர் 10 பேரும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் உள்பகுதியில் ஆங்காங்கே பாதுகாப்புக்கு நின்றுகொண்டிருந்தனர். வீட்டுக்குள் இருந்து யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல், யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவும் இல்லை.

சோதனையின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் துருவி துருவி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை மேற்கொண்டனர். குப்பை தொட்டியைக்கூட சோதனையின்போது அதிகாரிகள் விட்டுவைக்கவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் வீட்டின் எதிரே உள்ள அலுவலகம், தங்கும் விடுதி, வீட்டின் அருகே உள்ள தோட்டம், இலுப்பூர் அருகே மேட்டுசாலையில் உள்ள மதர்தெரசா கல்வி நிறுவனங்கள், திருவேங்கைவாசலில் உள்ள கல்குவாரி, திருமயம் அருகே நச்சாந்துபட்டியில் உள்ள அமைச்சரின் உறவினர் ஒருவரின் வீடு ஆகிய 7 இடங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும் நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

சென்னை எழும்பூர் ‘கென்னட் லேன்’ சாலையில் உள்ள நியூலட்சுமி லாட்ஜில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் சரவணன் தங்கியிருந்த அறையிலும், எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் அறையிலும் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 5 பேரின் அறையிலும் சோதனை நடந்தது.

மயிலாப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் இல்லத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமியின் இல்லம் விருகம்பாக்கத்தில் உள்ளது. அந்த இல்லத்திலும், பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது அலுவலக அறையிலும் அதிரடி சோதனை நடந்தது.

சிட்லபாக்கத்தில் உள்ள முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனின் வீட்டிலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

மேலும், டி.டி.வி.தினகரனுக்கு நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்த அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வசித்து வரும் கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலும் நேற்று காலை 5.30 மணிக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 8 பேர் நுழைந்து சோதனையை தொடங்கினர்.

அப்போது வீட்டில் சரத்குமார் அவரது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்தினர் இருந்தனர்.

நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள ஆசிரியர் காலனியில் வசித்து வரும் அரசு காண்டிராக்டர் சுப்பிரமணியின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

வருமான வரி சோதனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர், நிருபர்களிடம் கூறும்போது, ‘எனது வீட்டில் இதுவரை நடந்த சோதனையில் 10 ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. ஏ.டி.எம்.மில் இருந்தும் ரூ.10 ஆயிரம் கூட நான் எடுக்கவில்லை. அதற்கான ஆதாரமும் என்னிடம் உள்ளது. சோதனை என்ற பெயரில், எனது வீட்டில் உள்ள கழிவறையை உடைத்துவிட்டனர். எனது குழந்தைகள் கூட பள்ளிக்கு செல்லமுடியவில்லை. ஆர்.கே.நகர் தொகுதிக்கு நான் பிரசாரம் செய்ய செல்வதை தடுக்கும் நோக்கத்திலேயே இந்த சோதனை நடைபெற்றுள்ளது’ என்றார்.

பொதுவாக இதுபோன்ற வருமானவரித்துறை சோதனை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பேட்டி அளிக்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், அதையும் தாண்டி, அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை நோக்கி அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தனர். சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ மற்றும் விஜிலா சத்தியானந்த் எம்.பி. ஆகியோரும் அங்கு வந்தனர்.

அதே நேரத்தில் போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். வருமானவரித்துறையின் தென்மண்டல துணை இயக்குனர் பவன்குமார் தலைமையில் மேலும் சில வருமானவரித்துறை அதிகாரிகளும், விஜயபாஸ்கர் வீட்டுக்குள் சென்றனர். அதன்பிறகு வருமானவரித்துறை சோதனை மீண்டும் தொடங்கியது.

திருவல்லிக்கேணியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் நைனார் முகமது வீடு, எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் அறை, ஓட்டல் தாஸப்பிரகாஷ் அருகே கெங்குரெட்டி தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரி வீடு ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறையினர் நேற்று சோதனை போட்டனர்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வீட்டில் இருந்து பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வரலாற்றிலேயே அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்துவது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க விஜயபாஸ்கரை காட்டிக்கொடுத்து அவருடைய நண்பன் என்றால் நம்ப முடிகிறதா?

யார் என்றால் மணல் ராமச்சந்திரன், ஒயின் ஷாப் நடத்திக் கொண்டிருந்தவர். ஆனால், டாஸ்மாக் வந்தபிறகு, ரியல் எஸ்டேட் தொழிலில் அடியெடுத்து வைத்தார். அதோடு, ஜல்லி சப்ளை செய்யும் கிரஷர்களையும் ஆரம்பித்தார். அதே நேரத்தில், ராமச்சந்திரனின் உறவினர் ரத்தினம் என்பவர் திண்டுக்கல்லில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்திக்கொண்டிருந்தார்.

ராமச்சந்திரன் அந்த நேரத்தில், அன்றைய எம்.எல்.ஏ-வும், தற்போதைய சுகாதாரத் துறை அமைச்சருமான விஜய பாஸ்கருக்கு நெருக்கமானார். காரணம், விஜய பாஸ்கருக்கும் ஜல்லி கிரஷர்கள் இருந்தன. அதனால், அவர்கள் நெருக்கமானார்கள். இந்த டீமுடன் சேகர் ரெட்டி இணைந்தார். சேகர் ரெட்டிக்கு ஆரம்ப காலத்தில் வருமானவரித் தாக்கல் செய்வதற்கான வேலைகளில் உதவியவர் ஆடிட்டர் பிரேம். இந்த பிரேம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சின்ன வயதில் இருந்தே நண்பர். இந்த லிங்க் மூலம் சேகர் ரெட்டி விஜயபாஸ்கருக்கு நெருக்கமானார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் சேகர் ரெட்டியை மணல் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் நெருங்கினார்கள். நெட்வொர்க் பலமானது.  விஜயபாஸ்கர் மூலம், இந்த நெட்வொர்க் அரசாங்கத்துக்குள் அடி எடுத்து வைத்தது. அந்தக் காலகட்டத்தில் பொதுப்பணித் துறையை கையில் வைத்திருந்தவர் ஓ.பி.எஸ். நெடுஞ்சாலைத் துறை எடப்பாடி பழனிசாமியிடம் இருந்தது. சேகர் ரெட்டியை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். சேகர் ரெட்டிக்கு பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டுகள் கிடைத்தன.

கமிஷன் தொகை, கச்சிதமாக அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கார்டனுக்குச் சென்றதால், அசைக்க முடியாத சக்தியாக உருவானார் சேகர் ரெட்டி. விஜயபாஸ்கரும், சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகன் டாக்டர் வெங்கடேஷும் நண்பர்கள். அந்த வகையில் வெங்கடேஷ் மூலம் சேகர் ரெட்டி கார்டனுக்குள்ளும் திருப்பதி லட்டுகளை அனுப்ப ஆரம்பித்தார்.

அதன்பிறகு, சேகர் ரெட்டி ஓகோவென்று வளர ஆரம்பித்தார். ஆனாலும், அவருக்கு அரசியல்வாதிகளைவிட அதிகாரிகளின் நட்புதான் முக்கியம். அரசியல்வாதிகள் மாறிக்கொண்டே இருப்பார்கள். அதிகாரிகள் அப்படி அல்ல…!  மணல் குவாரிகளில் ஆறுமுகச்சாமி, படிக்காசுக்கு பதிலாக சேகர் ரெட்டியின் கொடி பறக்க ஆரம்பித்தது. அதற்கு பிரதி உபகாரமாக ராம மோகன ராவ் மகள் திருமணத்தை சேகர் ரெட்டி மிகப் பிரமாண்டமாக நடத்திவைத்தார்.  இந்தக் கூட்டணியின் புதிய கண்டுபிடிப்புதான், டெண்டர் கேட்கவே 10 சதவிகித கமிஷன் என்பது. அதுதான் பின்னாளில் வளர்ந்து, 30 சதவிகித கமிஷனாக இன்று மாறி இருக்கிறது.

ஓ.பி. நண்பனாக மாறி அவருடைய எல்லை விரிவடைந்தது. ஆனால் அரசியல் ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களில் ஓ.பி.எஸ்யை பழி வாங்குவதற்கு சேகர்ரெட்டியை மாட்டிவிட்டனர். விஜயபாஸ்கர் குரூப். இதனால் சேகர் ரெட்டி தற்போது வரை வெளியே வரமுடியாத நிலையில் இருக்கிறார்.

வெளியில் ராஜ வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்த சேகர் ரெட்டி சிறையில் இருப்பதற்கு முக்கிய காரணமான விஜயபாஸ்கர் பற்றின அத்தனை குறுக்கு வழிகளையும் வருமானவரி துறைக்கு பாடம் எடுத்தார். அதன் விளைவு – நண்பன் இருக்கும் இடத்தை நோக்கி நண்பனும் செல்கிறார்…

என்ன ஒரு பாசக்கார நண்பர்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.