திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

0 27

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

சம்பளத்தை உயர்த்தி வழங்க கோரி, திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் குப்பைகள் தேங்கி கிடந்தது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளர்கள் 75 பேர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ரெயில் நிலையம் மற்றும் வளாக பகுதியில் தூய்மை பணி மேற்கொள்ளுதல், குப்பைகளை அள்ளுதல், கழிப்பறைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ரெயில் நிலையத்தில் சுழற்சி முறையில் துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ள அரசாணைப்படி ரெயில்வே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினமும் சம்பளம் ரூ.437 வழங்கப்படுவதில்லை. இதனை குறைத்து பழைய சம்பளமான ரூ.369 வழங்குகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய போது அதற்கான நிலுவை தொகையை ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் நிலுவை தொகை வழங்கப் படவில்லை. அதனால் சம்பளத்தை உயர்த்தியும், நிலுவை தொகை வழங்க கோரியும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டம் தொடரும்” என்றனர்.

துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் ரெயில் நிலையத்தில் குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும் தண்டவாளத்தில் பயணிகள் வீசிய குப்பைகள் ஆங்காங்கே அப்படியே கிடக்கின்றன. குப்பை தொட்டிகளில் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. சுகாதாரமாக காணப்பட்ட திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் நேற்று நடைபெறாததால் சுகாதாரமற்று காணப்பட்டது. இதனை கண்டு பயணிகள் முகம் சுளித்த படி சென்றனர். துப்புரவு தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். இதனால் வேலை நிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. நேற்று மாலை ரெயில் நிலையத்தில் 2-வது நடைமேடையில் துப்புரவு தொழிலாளர்கள் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.