டாஸ்மார்க் ஊழியர்கள் மாற்று பணி கேட்டு 20,000 பேர் சாலை மறியல் !
திருச்சி டாஸ்மார்க் ஊழியர்கள் மாற்று பணி கேட்டு சாலை மறியல் !
கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த டாஸ்மாக் பணியாளர்கள் மாற்று அரசு பணி வழங்க கோரி திருச்சியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் வைக்கப்பட்டு இருந்த சுமார் 3,500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டு விட்டன. இதனால் இந்த கடைகளில் வேலை செய்த மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். அவர்களை தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள அரசு பணியிடங்களில் அவரவர் கல்வி தகுதி மற்றும் பணி மூப்பின் அடிப்படையில் நியமிக்க உத்தரவிடவேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஏப்ரல் 13- ந் தேதி மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவித்து இருந்தனர்.
திருச்சியில் சாலை மறியல்
இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், சேலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று காலை வந்து குவிந்தனர். சங்கத்தின் மாநில துணை தலைவர் சரவணன் தலைமையில் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது, கடைகள் மூடப்பட்டதால் வேலை இழந்த டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் மாற்று அரசு பணி வழங்க வேண்டும் என கோரி கோஷம் போட்டனர். மாநில துணை பொதுச்செயலாளர் முத்துக்குமரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
200 பேர் கைது
அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் முத்துக்குமரன், மாநில பொருளாளர் ஜெய்கணேஷ், திருச்சி மாவட்ட தலைவர் முருகானந்தம், செயலாளர் பெருமாள், பொருளாளர் கண்ணன், நிர்வாகிகள் வேல்முருகன், அன்பழகன் உள்பட 168 பேரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து கரூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இருந்து வந்த டாஸ்மாக் பணியாளர்களும் அணி அணியாக போராட்டம் நடத்தினார்கள். அப்போது 32 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் கே.கே.நகரில் உள்ள மாநகர காவல் ஆயுத படை திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.