திருச்சியில் நம்பர் 1 கல்லூரியாக இருந்தால் மட்டும் போதுமா ? குடிகார டிரைவர் பண்ணின அட்டகாசம் !

0 41
திருச்சியில் மாணவ- மாணவிகள் இருந்த கல்லூரி பஸ்சை மது போதையில் தாறுமாறாக ஓட்டிய டிரைவரால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பஸ்சை வழி மறித்த பொதுமக்கள் டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள கே.ராமகிருஷ்ணன்   பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் நேற்று காலை திருச்சி மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து, அந்தக்கல்லூரியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு உறையூர் நாச்சியார் கோவில் அருகே வந்தது. அப்போது அந்த கல்லூரி பஸ் பயணியுடன் சென்ற ஒரு ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

உடனடியாக ஆட்டோ டிரைவர் அந்த கல்லூரி பஸ்சை பின்னால் விரட்டி சென்றார். அப்போது அந்த கல்லூரி பஸ் சாலையில் தாறுமாறாக ஓடியதை கண்டு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் உறையூர் சாலைரோட்டில் உள்ள ருக்மணி சினிமா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் சென்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சை பொதுமக்கள் வழிமறித்தனர்.

மது போதையில் பஸ்சை ஓட்டிய டிரைவர்

பின்னர் அவர்கள் கல்லூரி பஸ்சில் ஏறி டிரைவரை பிடித்து ஏன் இவ்வாறு பஸ்சை தாறுமாறாக ஓட்டுகிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது டிரைவர் மது அருந்தி விட்டு போதையில் கல்லூரி பஸ்சை ஓட்டியது தெரியவந்தது. இதனால் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம், பொதுமக்கள் பஸ் டிரைவரை ஒப்படைத்தனர். பின்னர் டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திருச்சி அல்லூரை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 43) என்பதும், அவர் மது அருந்தி விட்டு பஸ்சை ஓட்டியதும் தெரியவந்தது.

இது தொடர்பாக திருநாவுக்கரசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு பாதுகாப்பாக செல்வதற்காக அவர்களின் பெற்றோர்கள் கல்லூரி பஸ்சில் அனுப்புகின்றனர். ஆனால் கல்லூரி பஸ்சின் டிரைவரோ மது அருந்தி விட்டு ஓட்டுவதால் மாணவ-மாணவிகளை கல்லூரி பஸ்சில் அனுப்புவதற்கு தற்போது பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மது போதையில் கல்லூரி பஸ்சை டிரைவர் ஓட்டிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியில் நெம்பர் ஒன் கல்லூரி என்று பெயர் எடுத்தால் மட்டும் போதுமா ? ஒழுக்கமான டிரைவர்களை வைத்திருக்க வேண்டாமா?  கல்லூரியை நம்பி மாணவிகளை அனுப்பினால் கல்லூரி நிர்வாகம் இப்படி தான் நடந்து கொள்ளுமா ? என்று கேள்வி தற்போது எல்லோர் மனதிலும் எழுகிறது.

Leave A Reply

Your email address will not be published.