இவங்கள விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா- திகில் கிளப்பும் திருச்சி திருடர்கள் தொடர்-1

0 107

thieves-ramjinakarராம்ஜிநகா் திருடர்கள்  என்று சொன்னால் இந்தியாவின் மூளை முடுக்குகளில் உள்ள காவல்நிலையங்களில் உள்ள போலீஸாருக்கும் தெரியும்.  அந்தளவுக்கு பொதுமக்களை மட்டுமல்ல, போலீசாரையும் கதிகலங்க வைப்பதில் கில்லாடியான இவர்கள்,

சத்தமில்லாமல் எதிராளியின் கவனத்தை திசைதிருப்பி  சாமர்த்தியமாக கொள்ளையடிப்பதில் கில்லாடிகள். இவர்களின் திருட்டுக்காக  தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இருந்து டெல்லி வரை அனைத்து காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது

வீட்டுல வைக்கிற கிண்ணிய கூடு விடமாட்டாங்க- அதிரடி பஞ்சாயத்து தீர்ப்பு

ராம்ஜி நகர் திருடர்களை திருத்துவதற்கு திருச்சி போலீஸார் ஆண்டுகணக்கில்  மூளையை கசக்கி பல திட்டங்களை வகுத்து இவர்களை தொழில் மாற்றிவிட எண்ணினாலும், போலீஸார் வாங்கிக்கொடுத்த கறவை மாட்டையும், பெட்டிக்கடையையும் சிலமாதங்கள் நடத்திய கையோடு அதை விற்றுவிட்டு காசு பார்த்த கையோடு  வல்லடைக்கு சென்ற திருடர்கள் இவர்கள் என்றால் தெரிந்துகொள்ளுங்கள். திருச்சிதான் இவர்களுக்கு சொந்த ஊர் என கெத்து காட்டும் இவர்களுக்கு ஆந்திராதான் பூர்வீகம்.

ராம்ஜிநகா் ஆந்திராவில் ‘கேப்மாரிகள்’ என்றொரு இனம் உண்டு.  நாடோடிகளான இவர்களின் குலத்தொழில் திருட்டு! சுதந்திரத்துக்கு முன், இவர்களில் சிலர் தொழில் அபிவிருத்திக்காக  கரூர் அருகே இடையபட்டியில் வந்து டெண்ட் அடித்தார்கள். பிழைக்க வந்த இடத்தில் அடுத்தவர் வீட்டில் இருக்கும் மாட்டை திருடுவது, நகைகளை திருடுவது என இவர்கள் கைவரிசை காட்ட,

என்ன செய்வது என தெரியாமல் தவித்த இடையாப்பட்டி மக்கள், இவர்களின் திருட்டு தொல்லை  தங்களின் நிம்மதிக்கு வேட்டு வைத்ததால், எட்டுப்பட்டி பஞ்சாயத்து கூட்டினார்கள்,.

‘இனியும் இவங்கள இங்க விட்டு வைச்சா வீடுகள்ல வச்ச கிண்ணியைக்கூட விட்டு வைக்கமாட்டாங்கய்யா,  அதுக்கு முன்னால நாமே இவங்கள இங்கிருந்து அடிச்சு வெரட்டி விட்டிரணும்’ என்று தீர்ப்பு வாசித்தார்கள்  எட்டுப்பட்டி பஞ்சாயத்துகாரர்கள்.

மிரண்டு போன கேப்மாரிகள், ‘ஐயாக்கமாரு  எங்களை அடிச்சு துரத்தப் பாக்குறாங்க, நீங்கதான் எசமான் எங்களுக்கு  வாழ வழிய காட்டணும்’ என்று  அப்போதைய திருச்சி மாவட்ட ஆட்சியர் ஹிரிபாஸ்கா் காலில் விழுந்து கதறினார்கள்.

இதைகண்டு இரக்கப்பட்ட கலெக்டர், இவர்களுக்காக திருச்சி திண்டுக்கல் சாலையில் 6வது கிலோமீட்டரில், கேப்மாரிகளுக்கு  குடும்பத்துக்கு ஐந்து சென்ட் நிலத்தை இனாமாகக் கொடுத்து அவர்கள் வாழ ஏற்பாடுகள் செய்த கையோடு, அங்கு இயங்கி வந்த ‘மூல்ஜி ராம்ஜி காட்டன் மில்ஸ்’ மில்லில்  கேப்மாரிகளுக்கு   திருடர்கள் திருந்துவதற்கு வேலையும் வாங்கிக் கொடுத்தார் ஆட்சியர்.  அப்படி கேப்மாரிகள் செட்டிலான ஏரியாதான் இப்போது ராம்ஜிநகர்!

வல்லடைக்கு போனால் வசதியாய் வாழலாம்.

ஆந்திரா கேப்மாரிகள் திருச்சிக்கு மாரியதும் ராம்ஜி நகர் திருடர்கள் ஆனார்கள்,  அவா்கள் பாசையில் திருட்டு தொழிலுக்கு போவதை வல்லடை அல்லது பயணம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பேசும் இவர்கள், தமிழ்நாட்டுகாரர்கள் போல் இல்லாமல் மீசை எல்லாம் மழித்துவிட்டு வடஇந்தியர்களைபோல் ஜாகுவான தோற்றத்துடன் இருப்பார்கள்.

அடுத்தவங்க வீடு புகுந்து திருடுவதோ, பிறர் பார்த்துக் கொண்டிருக்கும்போது  அவர்களின் பொருட்களை பறித்துக் கொண்டு ஓடுவதோ கேப்மாரிகளின் ஸ்டைல் இல்லை.

முழித்துக் கொண்டிருக்கும்போதே முழியைப் பறிப்பதுதான் இவர்களின் ஸ்டைல்.  வங்கிகளில் இருந்து பணம் எடுத்து வருபவர்களை பின்தொடர்ந்து வந்து, அவர்கள் பார்வையில் படும்படி ரூபாய் நோட்டுகளை சிதறவிடுதும், கையில் லட்சங்களை வைத்திருக்கும் அந்த நபர், கீழே சிதறிக் கிடக்கும் சில நூறுகளை பார்த்ததும் சபலப்படுவார்கள். அதுதான் தங்களுக்கான சந்தர்ப்பம், சட்டென அந்த நொடிப்பொழுதில் அவர்களிடம் இருக்கும் லம்பான தொகையை ஆட்டையைப் போட்டு விட்டு ஜூட் விடுவார்கள்.

ஒரு குழுவாகச் கிளம்பிச் சென்று பணப் புழக்கம் அதிகமுள்ள வங்கி, நகைகடை, அடகுக் கடை, ஏ.டி.எம் சென்டர் போன்ற இடத்தை அடைவதற்கு முன்பே பிரிந்து நின்றுகொள்வார்கள். ஒருவர் அதிகம் பணம் வைத்துள்ளவரை அடையாளம் கண்டு குழுவிலுள்ள மற்றவர்களுக்கு சைகை அல்லது கண் ஜாடை மூலம் சிக்னல் கொடுப்பார். இன்னொருவர் பணம் வைத்துள்ள நபர் அருகே சென்று சில ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டுவிட்டு ‘சார் உங்க பணம் கீழே விழுந்துடிச்சு’ என சொல்வார். கீழேகிடக்கும் சில ரூபாய் நோட்டுக்களை எடுக்கச் செல்லும் அந்த சில நொடி இடைவெளியில் பணம், பொருள்கள் உள்ள பையை இன்னொருவர் எடுத்துக்கொண்டு ஓடி தலைமறைவாகி விடுவார். பணப்பை வேறு சிலர் மூலம் கைமாறி திருச்சிக்கு வந்துவிடும்.

இப்படி என்றால் அடுத்து டிராஃபிக் சிக்னல்களில் கார்கள் நிற்கும்போது முன் சீட்டில் உள்ளவர்களிடம் ஒருவன் பேச்சு கொடுப்பான். இன்னொருவன் பின் சீட்டில் அவர்கள் வைத்திருக்கும் லேப்டாப், சூட்கேஸ் உள்ளிட்டவைகளை சுட்டுக்கொண்டு எஸ்கேப் ஆகி இருப்பான்.  இது இப்படியென்றால் அடுத்து வங்கி கொள்ளைக்கு புதிய ஸ்டைல்.

பிஸ்கட்டை மென்று துப்பி ‘ஆடையில் மலம் ஒட்டியிருக்கு’ எனச் சொல்வது, இரண்டு பேர் சண்டையிட்டுக் கொள்வதுபோல் பணம் வைத்துள்ளவர் மீது மோதும்போது கொள்ளையடிப்பது ஆகிய டெக்னிக்களும் இவர்களது பாணி. தெலுங்கு அல்லது தமிழ் கலந்த தெலுங்கு மொழிகளில் வல்லடைக்குப் போகும்போது பேசிக்கொள்வார்கள்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த இருபது பேர் ஒரு வங்கிக்குள் நுழைவார்கள். அதில் பதினெட்டு பேர் ஒரே நேரத்தில் அங்குள்ள கேஷியர் உள்ளிட்ட அத்தனை பேரிடமும் ஏதாவது சந்தேகம் கேட்டு அவர்களது கவனத்தை சிதறடிப்பார்கள். மீதி இரண்டு பேர்,  மெல்ல மெல்ல கேஷ் கவுன்ட்டருக்குள் சத்தமில்லாமல் அடிபதித்து, கரன்ஸி கட்டுகளை லபக்கிக் கொண்டு சிட்டென பறந்து விடுவார்கள். இப்படி பல வங்கிகளில் இவர்கள் கைவரிசை காட்டி அங்கு திருடிய பணத்தில்  ராம்ஜிநகரின் மாடிவீடுகள் கட்டி வசதி வாய்ப்புகளுடன் உலாவரும் இவர்களை போலிஸார் கூட கைது செய்ய முடியவில்லை. வங்கிகளில்  சிசிடிவி கேமராக்களை வைத்து கண்காணிப்புகளை பலப்படுத்திய பிறகு, இப்பவெல்லாம் பேங்கில் கொள்ளையடிக்கமுடியாது என இவர்கள் பெரும்பாலும் வங்கி வேலைக்கு(?) போவதில்லை என்கிறார்கள்.

ராம்ஜி நகருக்கு வந்த பிறகும் குலத்தொழிலை விடவில்லை கேப்மாரிகள். அப்போதெல்லாம் பர்மா, மலேசியா போன்ற நாடுகளுக்கு சர்வசாதாரணமாகப் போய்வர முடியும். இதை சாதகமாக்கிக் கொண்டு பினாங்கு, ரங்கூன் வரை சென்று  வசதியோடு வாழ்ந்தார்கள். இதைபார்த்துவிட்டு உழைத்துச் கஞ்சிகுடித்த ஒருசிலரும் திருட்டுத் தொழிலுக்கு மாறின கொடுமையும் நடந்தது.

நடிகை முதல்  இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி

வரை பலரிடமும் கைவரிசை காட்டிய திகில் சம்பவங்கள் அடுத்தடுத்த தொடரில் இன்னும் சுவாரஸ்யங்களுடன்…. 

ramjinagar theft 1

Leave A Reply

Your email address will not be published.