திருச்சி கூடிய RTI ஆர்வலர்கள் ! தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சந்தேகமா ? இவர்களிடம் பேசுங்கள் !

0 71

திருச்சி RTI ஆர்வலர்கள் குழுமம்

முதல் கலந்தாய்வுக் கூட்டம் – தீர்மானங்கள்

இன்று 15.04.2017, காலை திருச்சி,RTI ஆர்வலர்கள் குழுமத்தின்  முதல் கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி ஜங்சன், ஹோட்டல் ராஜா கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் அய்யாரப்பா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். ஒருங்கிணைப்பாளர் / வழக்கறிஞர் அ.கமருதீன் அவர்கள் அறிமுகவுரை ஆற்றினார். ஒருங்கிணைப்பாளர்கள் – வழக்கறிஞர் ஜோ.கென்னடி, வீ.மகேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில் அமிர்தம் டிரஸ்ட் யோகா விஜயகுமார், மக்கள் சக்தி இயக்க மாநகர செயலாளர் அ.ரெ.செல்லக்குட்டி, தண்ணீர் இயக்கம் தன்வீர் ஷாஜஹான், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஜெ.வின்சென்ட் ஜெயக்குமார், விடுதலை சிறுகதைகள் கட்சி அ.அம்பேத், வழக்குரைஞர்கள் கே.ஜி.தேசிகன், கே.ரமேஷ், எம்.முஹம்மது சதாம், மக்கள் உரிமை மீட்பு இயக்க நிர்வாகிகள் பஷீர் அஹமது, ரம்ஜான், வசீர் அஹமது, பொறிஞர்.ந.அரங்கராசன், Dr.எராநிமஸ், பஞ்சாட்சரம், DEW கே.சந்திரசேகர், சமூக ஆர்வலர்.S.சம்சுதீன், A.ஜான் பீட்டர், கல்வியாளர் அரவிந்தன், தீனுல் இஸ்லாம் டிரஸ்ட் A.K.சுலைமான், அமைப்புச் சாரா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜபாண்டியன், விடுதலை மன்னன், மண்ணை மாணிக்கம், சமூக ஆர்வலர்கள் பி.ஹேமநாதன், சகாய மரியநாதன், வி.சுரேஷ், நவநீதன், துரைச்சாமி, பாகனூர் பாலு உடையார், தெய்வக்குமார்,A.H.பசுலூர் ரஹ்மான், ஷைனி, வீரமுருகன், பெரம்பலூர் கே.சாதிக் அலி, கே.எஸ்.மணவாளன், பொன்.இளங்கோ, சந்திரபோஸ், எஸ்.பி.மோகன், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் மத்திய அரசு தகவல் பெறும் உரிமைச்சட்ட விதிகளில் தற்போது செய்ய உத்தேசித்துள்ள தவறான திருத்தங்கள், அதனால் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்துக்கள் குறித்து பேசினார்கள்.

 மேலும் தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தகவல் கேட்டு விண்ணப்பிப்பதில் உள்ள பிரச்சனைகள், தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தவறான, சட்ட விரோதமான, எதேச்சதிகாரப் போக்குகள், அரசு அதிகாரிகளுக்கு ஆதரவான போக்குகள் பற்றி பலர் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து பேசினார்கள்.

அதன் அடிப்படையில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசு புகுத்த உத்தேசித்துள்ள விதிமுறைகள் திருத்தம் குறித்த மத்திய அரசுக்கும், உரிய அலுவலர்களுக்கும் பின்வருமாறு RTI ஆர்வலர்கள் குழுமத்தின் ஆட்சேபனைகளை உடனடியாக இமெயில் மூலம் அனுப்பிவைப்பது என முடிவு செய்யப்பட்டு அனைவரிடமும் கையெழுத்துக்கள் பெறப்பட்டது.

1.  தகவல் கேட்கும் விண்ணப்பங்கள் ஐநூறு வார்த்தைகளுக்குள் இருக்கவேண்டும் என்பது தவறானது. தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு எதிரானது. இது பல விண்ணப்பங்கள் போடவும் இதனால் விண்ணப்பதாரர் மட்டுமல்லாது பொதுத் தகவல் அலுவலர்களுக்கும் ஆணையத்திற்கும் பெறும் இன்னலாக முடியும் என்பதாலும் விண்ணப்பங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வார்த்தைகலுக்குள் மட்டுமே இருக்கவேண்டும் என்ற விதிமுறையை உருவாக்க வேண்டாம்.

2. மேல் முறையீடுகளை ஆணையத்தின் அனுமதியுடன் வாபஸ் பெற்றுக் கொல்லலாம் மற்றும் மேல் முறையீட்டாளர் இறந்துவிட்டால் அந்த விண்ணப்பங்களை ஆணையம் முடித்து வைத்துவிடலாம் என்ற விதிமுறை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்துபவர்கள் மீதான அரசின் அச்சுறுத்தல் என்பதாகவே தெரியவருகிறது. கடந்த சில ஆண்டுகளில் 57 க்கும் மேலான தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்கள் சமூக விரோதிகளால் தகவல் கேட்டதற்காக கொல்லப்பட்டனர் என்ற தகவல்கள் வரும் நிலையில் அரசு  தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள அந்த விதிமுறைகளை கைவிட கேட்டுக்கொள்கிறோம். மேலும் நாடாளும்மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தகவல் அளிப்பவர் பாதுகாப்புச் சட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்தி தகவல் பெறும் உரிமைச்சட்ட ஆர்வலர்களை பாதுகாக்க அரசை கேட்டுக்கொள்கிறோம்.

3.பிளாப்பி தற்போது வழக்கொழிந்து விட்ட நிலையில், பிளாப்பியை நீக்கிவிட்டு DVD யை விதிமுறைகளில் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறோம்.

4. மத்திய தகவல் ஆணையத்திற்கு மேல்முறையீடு விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் அனைத்தையும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் மட்டுமே மொழிபெயர்த்து மேல் முறைஈடுகள் செய்ய வேண்டும் என்ற விதிமுறை தகவல் பெறும் உரிமைச் சட்டத்திற்கு எதிரானது. எனவே அதனை கைவிட வேண்டும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய தகவல் ஆணையத்தில் மொழி பெயர்ப்பாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

5. உயிர் மற்றும் சுதந்திர சம்பத்தப்பட்ட தகவல்களை 48 மணி நேரத்திற்குள் தரவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. பொதுத் தகவல் அலுவலர் தகவல் தர மறுக்கும்போது மேல்முறையீடுகளில் காலக் கேடு ஏதும் இல்லாமல் இருக்கிறது. எனவே உயிர் சுதந்திரம் சம்பந்தப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீட்டு விண்ணப்பங்களையும் முடிவு செய்ய காலக் கேடு நிர்ணயம் செய்ய விதிமுறைகளை இயற்ற மத்திய அரசை கேட்டுக்கொள்கிறோம்.

6.   தகவல்களை அனுப்ப ஐம்பது ரூபாய்க்கு மேல் விண்ணப்பதாரர் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தவறானது. அதற்கு பதிலாக இந்திய தபால் துறையில் RTI தகவல் அனுப்ப கட்டணத்தை இரத்து செய்ய வேண்டும் என்று விதிமுறைகளை இயற்ற கேட்டுக்கொள்கிறோம்.

7. விண்ணப்பதாரார் இமெயில் மூலமாக தகவல் அனுப்ப கேட்டிருந்தால் அந்த தகவல்களை இமெயில் மூலமாக மட்டுமே அனுப்பி வைக்க கேட்டுக்கொள்கிறோம்.

8. ஆணையத்தின் முன்புள்ள இரண்டாம் மேல்முறையீடுகளிலும் தீர்வு செய்ய காலக் கேடு நிர்ணயம் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

9. மேல்முறையீடுகளில் பொதுத் தகவல் அலுவலர், முதல் மேல் முறையீட்டு அலுவலர்களிடம் எழுத்துமூலமாக பதிலுரை தாக்கல் செய்யும் நடைமுறையை வரவேற்கிறோம். இது விண்ணப்பத்தாரருக்கும், இரண்டாம் மேல் முறையீட்டு ஆணையத்திற்கும் வேலைபளுவைக் குறைக்கும்.

தமிழ்நாடு மாநில தகவல் ஆணைய பிரச்சனைகள் குறித்து கீழ்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டது.

1.       தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பங்களை பெற்றதும் விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச் சீட்டு எந்த தமிழக அரசு அலுவலகத்திலும் கொடுக்கப்படுவதில்லை. எனவே அனைத்து பொதுத் தகவல் அலுவலரும் விண்ணப்பதாரருக்கு ஒப்புகைச்சீட்டு அளிப்பதை ஆணையமும், தமிழக அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.

2.       தகவல் கோரும் விண்ணப்பதாரருக்கு,தகவல் அளிக்கும்போது அந்த தகவலில் திருப்தி இல்லையேல் எந்த அலுவலரிடம் யாருக்கு மேல் முறையீடு செய்யவேண்டும் என்பதையும் சொல்ல வேண்டும். இதனை மத்திய அரசு அலுவலகங்களில் தெளிவாகச் சொல்கிறார்கள். ஆனால்,மாநில அரசு அலுவலகங்களில் விண்ணப்பதாரரை அலைக்கழிக்கும் நோக்கத்தில் தெரிவிப்பதில்லை.மேல்முறையீட்டு அலுவலர் குறித்த தகவல்களை பதிலுடன் இணைத்துக் கொடுக்க தமிழக  பொதுத் தகவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாநில தகவல்  ஆணையமும், தமிழக அரசும் உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டுகிறோம்.

3.       தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீடு செய்த பின்னர் ஆணையம் மீண்டும் பொதுத் தகவல் அலுவலருக்கு கால அவகாசம் கொடுத்து கடிதம் எழுதுகிறது. இது சட்ட விரோதமானது. இதனால்தான் ஆணையத்தின் முன்பாக மேல்முறையீடுகள் குவிகின்றன. எனவே இந்த தவறான சட்ட விரோத நடைமுறையை ஆணையம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.

4.       தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் இரண்டாவது மேல்முறையீடு செய்த பின்னர் பல நேர்வுகளில் ஆணையம் அந்த முறையீடுகளை முதலாவது மேல் முறையீடாக கருதி தீர்த்துவைக்க முதல் மேல் முறையீட்டு அலுவலருக்கு உத்தரவிடுகிறது. இது சட்ட விரோதமானது. இதனால்தான் ஆணையத்தின் முன்பாக மேல்முறையீடுகள் குவிகின்றன. எனவே இந்த தவறான சட்ட விரோத நடைமுறையை ஆணையம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.

5.       இரண்டாம் மேல்முறையீடு விசாரணைக்கு தகவல் தர மறுத்த குற்றம் செய்த அரசு அலுவலர்கள் அரசு செலவில் சென்னைக்கு வருவதும், விண்ணப்பதாரர் தனது சொந்த வேலைகளை விட்டுவிட்டு, சொந்த பணத்தை செலவு செய்து சென்னைக்கு வந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையை போக்க தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்கள் குழுக்களாக பிரிந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்ட தலைநகர்களில் மேல்முறையீடுகளை விசாரணை செய்துவந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம். அல்லது மத்திய தகவல் ஆணையத்தை போல் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறோம்.

6.       தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி,ஒருவருடைய உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கேட்பாராயின்,விண்ணப்பம் பெறப்பட்ட நேரத்திலிருந்து சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் 48மணி நேரத்துக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர்தகவல் அளிக்க மறுக்கும்போது மேல் முறையிடு செய்தால், அவர்கள் குறுகிய காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்ற கால வரையறை சட்டத்தில் இல்லை.எனவே மேல்முறையீடுகளுக்கும்உயிர் மற்றும் சுதந்திரம் சம்பந்தப்பட்ட தகவல்களுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வளிக்க விதிமுறைகளை தமிழக அரசு இயற்ற வேண்டுகிறோம்.

7.        தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டு மாநில தகவல் ஆணையம் அரசுக்கு ஆண்டறிக்கை அளித்து அந்த அறிக்கை சட்டமன்றத்தில் விவாதத்திற்கு வைக்கப்பட்ட வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்த ஆண்டறிக்கையை தகவல் ஆணையமும் சரியானபடி  கொடுப்பதில்லை. 2012ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த அறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் இல்லை. தமிழக அரசும் இதைக் கண்டு கொள்வதில்லை. ஆணையத்தின் இந்த சட்ட விரோதமான போக்கை இந்த குழுமம் வன்மையாக கண்டிக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் இந்த தவறுகள் நிகழாமல் ஆணையமும் தமிழக அரசும் சரியானபடி செயல்பட கேட்டுக்கொள்கிறோம்.

8.       உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில ஆணையங்களுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையே தலைமை ஆணையராக நியமிக்க வேண்டும். தமிழகத்தில் இது அப்பட்டமாக மீறப்பட்டு உள்ளது. எனவே ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளையே தலைமை ஆணையராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.

9.       மத்திய அரசைப் போல் தமிழ்நாடு அரசும் அரசு அலுவலகங்களில் ஆன்லைன் ஆர்.டி.ஐ. முறையை அமல்படுத்த தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை திருச்சி, RTIஆர்வலர்கள் குழுமத்தின் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

 அ.கமருதீன், 9894267688

அய்யாரப்பா, 9626829606

ஜோ.கென்னடி, 9443079552

வீ.மகேஷ்வரன், 9444412442

ஒருங்கிணைப்பாளர்கள்

RTI ஆர்வலர்கள் குழுமம்,

திருச்சி

Leave A Reply

Your email address will not be published.