நிவாரண தொகை கேட்டு திருச்சி மாநகராட்சி மீது காவல்நிலையத்தில் புகார் !

0 25

திருச்சி மாநகராட்சி அதிகாரி மீது பொதுஜனம் புகார் !

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஏராளமான புகார்கள் திருச்சி மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நேற்று காலை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ரெங்கராஜன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் அமைந்துள்ள கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பொக்ளின் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி பணியாளர்கள் அகற்றினர். அப்போது வியாபாரிகள் தங்களது கடைகள் முன்பிருந்த பொருட்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் கோட்டை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் திருச்சி தில்லை நகர் 1-வது குறுக்குத்தெரு பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரின் ஆவின் கடையும் அகற்றப்பட்டது. இது தொடர்பாக ஜெயபால் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், நான் நெடுஞ்சாலைத்துறை அனுமதியுடன் சத்திரம் பஸ் நிலைய பகுதியில் ஆவின் கடை வைத்து நடத்தி வந்தேன். ஆனால் எந்தவொரு முன் அறிவிப்பு இன்றி எனது கடையை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு என்று கூறி அகற்றி விட்டனர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையை அகற்றியதற்கு எனக்கு மாநகராட்சி சார்பில் நிவாரணம் தொகை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.