கொள்ளிடத்தில் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளையர்களின் லாரிகளை சிறை பிடித்த திருச்சி பொதுமக்கள்

0 20

மணல் கொள்ளையர்களின் லாரிகளை சிறை பிடித்த திருச்சி பொதுமக்கள்

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் விதிகளை மீறி மணல் அள்ளிய லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்

 

.

 

திருச்சி திருவானைக்காவல் கொண்டையம்பேட்டை பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரி உள்ளது. இதற்கு அருகிலேயே 2-ம் கட்ட மணல் விற்பனை செய்யும் ஸ்டாக் பாயிண்ட் உள்ளது. இங்கிருந்து மணல் லாரிகள் மூலம் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு மணல் எடுத்து செல்லப்படுகிறது.

உள்ளூர் லாரிகள் பொதுப்பணித் துறையினரிடம் பணம் கட்டி ரசீது பெற்று கொள்ளிடம் ஆற்றுக்குள் சென்று குவாரிகளில் மணல் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் உள்ளூர் லாரிகள் ஒருநாள் விட்டு ஒருநாள் தான் அரசு மணல் குவாரிகளில் மணல் எடுத்து செல்ல முடிகிறது. ஆனால் இந்த இரண்டாவது கட்ட மணல் விற்பனை நிலையத்தில் 24 மணிநேரமும் மணலை கூடுதல் விலைக்கு எடுத்து செல்லப்படுகிறது.

2-ம் கட்ட மணல் விற்பனை நிலையத்தில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதாகவும், அரசு விடுமுறை நாட்களில் கூட மணல் விற்பனை நடைபெறுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக பொதுமக்கள் புகார் கூறிவந்தனர். கடந்த 18-ந் தேதி விதிமுறைகளை மீறி அப்பகுதியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்த லாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு இங்கு மணல் அள்ளக்கூடாது என போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீசார் 19-ந் தேதி தாலுகா அலுவலகத்தில்் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கொண்டையம்பேட்டை பகுதி அரசு குவாரியில் இருந்து 2-ம் கட்ட விற்பனைக்காக அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற 4 டிப்பர் லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

தகலறிந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரி 4 லாரிகளையும் பறிமுதல் செய்து ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தோழர் நல்லக்கண்ணு காவிரி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க மாணவர்கள் திரண்டு வர வேண்டும் என்று கோரிக்கையை அடுத்து தான் இங்கு உள்ள பொதுமக்கள் துணிச்சலோடு கொள்ளிடத்தில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களை தடுக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.