போலிஸ் வாடா, வாங்க சார்…தி.மு.க. கே.என்.நேரு போராட்ட வியுகம் !

0 48

போலிஸ் வாடா, வாங்க சார்… கே.என்.நேரு போராட்ட வியுகம் !

திருச்சி மாவட்டத்தில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என்று அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மு்ன்னால் அமைச்சர் கே.என். நேரு எம்.எல்.ஏ. கூறினார்.

கூட்டம் 9.30 க்கு என்று அறிவிக்கப்பட்டுயிருந்தாலும் மிக சீக்கிரமே வந்தவர்.. சரியான நேரத்திற்கு கூட்டத்தை  ஆரம்பித்தார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று சென்னையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த போராட்டத்தை திருச்சி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்துவது பற்றிய அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார்.

அவர் பேசும் போது….

கிட்ட தட்ட 10 வருடங்களுக்கு பிறகு புருஷனிடம் கோபித்துக்கொண்டு சென்ற மனைவி போல திரும்ப வந்திருக்கிறீர்கள்- எங்களுக்கு ரொம்ப சந்தோஷம் என்று ஆரம்பித்தவர் நேரடியாக போராட்டம் குறித்து பேசினார்.

வருகிற 25-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் பஸ்கள் ஓடக்கூடாது. கடைகளை திறக்க விடக்கூடாது. அரசு சார்பில் பஸ்களை ஓட்டுவதற்கும், கடைகளை திறப்பதற்கும் முயற்சி செய்வார்கள். அதற்கு நாம் அடிபணிந்து விடக்கூடாது. நமது போராட்டம் அறவழியில் தான் இருக்கவேண்டுமே தவிர வன்முறையாக மாறிவிடக்கூடாது. அனைத்து கட்சியினரும் அதிக அளவில் பங்கேற்று முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி அடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

போராட்டத்தில் 10 பேர் இருந்தோம்னா போலிஸ்காரன் வாடா ன்னு கூப்பிடுவாங்க, ஆயிர கணக்கில் வந்த வாங்க சார் ன்னு… கூப்பிடுவாங்க, அதனால் நம்மை போலிஸ் எப்படி கூப்பிடுவாங்க என்பது நாம் திரட்டும் கூட்டத்தில் தான் இருக்கிறது.

இந்த ஆட்சி உடனே கலைக்க மாட்டார்கள். எப்படியும் 6 மாதம் கழித்து கலைச்சுட்டு அப்படியே 6 மாதம் அவுங்க கட்டுபாட்டில் வைத்து எம்.பி. தேர்தலோடு சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் சேர்த்து தான் நடத்துவார்கள்.

இந்த அனைத்து கட்சி போராட்டம் கூட்டணிக்கான போராட்டம் இல்லை என்று எங்கள் செயல் தலைவர் சொல்லிவிட்டார். இருந்தாலும் இப்போது உள்ள பி.ஜே.பி அரசு எப்படியாவது தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்று பல வகையில் துடிக்கிறார்கள்.

பி.ஜே.பி. திராவிட அரசியல் கட்சிகளை சி.பி.ஐ., அமலாக்கபிரிவு அதிகாரிகளை வைத்து ரைடு… என்று எல்லாம் மிரட்டுகிறார்கள். இந்த மாதிரி எல்லாம் முன்பு இருந்த காங்கிரஸ் கட்சி செய்தது கிடையாது. அப்படி செய்திருந்தால் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்திருப்பார்கள்.

தேர்தல் வரும் வரை காத்திருக்காமல் மக்களிடம் இப்போதே மத்திய மாநில ஆளும் கட்சிகளின் நிலை எடுத்து சொல்ல இந்த போராட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்டம் முழுவதும் வருகிற 25-ந்தேதி ஒன்றிய, நகர பகுதிகள் அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். திருச்சி ஜங்ஷன் பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ரெயில் மறியலும் நடைபெறும். ஸ்ரீரங்கத்தில் மட்டும் அன்றைய தினம் ரெங்கநாதர் கோவில் தேரோட்டம் என்பதால் அங்கு ஆர்ப்பாட்டம் கிடையாது. வியாபாரிகள் கடைகளை அடைக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்வோம்.  என்று பேசினார்.

கூட்டத்தில், தமிழக விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய அனைத்து பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் சவுந்தரபாண்டியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஸ்டாலின் குமார், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜெரோம் ஆரோக்கியராஜ் (மாநகர்), ஆர்.சி.பாபு (தெற்கு), ஜெயப்பிரகாஷ் (வடக்கு), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அருள், தமிழாதன்,  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மாவட்ட செயலாளர் ஹபிபுர் ரகுமான், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் உதுமான் அலி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், விவசாய தொழிலாளர்கள் சங்க தலைவர் அயிலை சிவசூரியன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் வெங்கடேசன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் செல்வகுமார் உள்பட அனைத்து கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.