அப்பாவி பள்ளி மாணவர்களை முழுங்கிய பாழடைந்த கிணறு !

0 28

அப்பாவி பள்ளி மாணவர்களை முழுங்கிய பாழடைந்த கிணறு !

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள வாலையூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சரவணன்(வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பூபதி, மகன் இளஞ்செழியன்(6). கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பூபதி, சரவணனை பிரிந்து இளஞ்செழியனுடன் வாழ்ந்து வந்தார். இளஞ்செழியன் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பி.கே. அகரத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

 

இதே போல் அதே தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான பெருமாள் என்பவர் மகன் நிசாந்த்(10). இவன் வாலையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.  காலை இளஞ்செழியனும், நிசாந்தும் இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சுமார் 50 அடி ஆழம் கொண்ட கிணற்றின் அருகே சென்றபோது, கிணற்றின் சுற்றுச்சுவர் பகுதியில் கொட்டப்பட்டிருந்த மண் சறுக்கியதில் இளஞ்செழியனும், நிசாந்தும் தவறி கிணற்றுக்குள் விழுந்தனர்.

நீச்சல் தெரியாததால் கிணற்றில் சுமார் 5 அடி ஆழத்தில் இருந்த தண்ணீரில் தத்தளித்த 2 பேரும், சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கினர். வெளியே சென்ற தங்கள் மகன்கள் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த இருவரின் பெற்றோர்களும் அந்த பகுதியில் தேடிய போது கிணற்று தண்ணீரில் மாணவர்களின் செருப்புகள் மிதந்ததை கண்டு கூச்சலிட்டனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு வந்த தேசிய தென்னியந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் பூபாலன் மற்றும் பொதுமக்கள் கிணற்றில் இருந்து 2 பேரையும் மீட்டு கார் மூலம் இருங்களுரில் உள்ள தனியார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் 2 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார், மாணவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே தெருவை சேர்ந்த 2 மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.