திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் !

0 42

திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் – பயணிகள் வாக்குவாதம் !

மலேசியா விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் திருச்சி விமானநிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு தினசரி காலை 9.45 மணிக்கு தனியார் விமானம் வரும். பின்னர் அந்த விமானம் மீண்டும் காலை 10.35 மணிக்கு பயணிகளை ஏற்றி கொண்டு மலேசியா புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் இந்த விமானத்தில் செல்வதற்காக திருச்சி விமானநிலையத்தில் 162 பயணிகள் காத்து இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்கு விமானம் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை கேட்ட பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விமானநிலையத்தில் இருந்த டிக்கெட் கவுண்ட்டர் அருகே திரண்டு சென்று அங்கு பணியில் இருந்த ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்அறிவிப்பின்றி திடீரென்று விமானத்தை ரத்து செய்தால் நாங்கள் எப்படி செல்வது என்று கூறி கூச்சலிட்டனர்.

உடனே விமானநிலைய மேலாளர் சென் அங்கு வந்து பயணிகளை தனது அறைக்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த விமானம் மலேசியாவிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும், வருகிற 28-ந் தேதி வரை அனைத்து விமானத்திலும் டிக்கெட் தீர்ந்து விட்டதாகவும் கூறினார்.

மேலும், மலேசியா செல்ல விரும்பும் பயணிகள் வரும் 28-ந் தேதிக்கு பிறகு செல்வதற்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாகவும், அப்படி செல்ல விரும்பாதவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு பயணிகள் சமாதானம் அடைந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று காலை திருச்சி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.