திருச்சியில் பாலைவனமான 34 குளங்கள் ! தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் ! ( படங்கள் )

0 24

திருச்சியில் பாலைவனமான 34 குளங்கள் !  தண்ணீர் பஞ்சத்தில் மக்கள் !

 

திருவெறும்பூர் பகுதியில் தண்ணீர் இல்லாமல் 34 குளங்கள் வறண்டன. குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

திருவரம்பூர் குளம்

இந்தியாவில் உள்ள நவரத்னா அந்தஸ்து பெற்ற நிறுவனங்களில் ஒன்றான திருச்சி பாய்லர் ஆலை(பெல்) காமராஜர் தமிழக முதல்- அமைச்சராக இருந்த கால கட்டத்தில் உருவானது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு பெரிய தொழிற்சாலை அமைய வேண்டுமானால் அதற்கான தண்ணீர் வசதி தமிழகத்தில் இல்லை என்று கூறப்பட்டபோது, காமராஜர் தனது தொலைநோக்கு பார்வையால் திருவெறும்பூர் பகுதியை தேர்வு செய்து தொழிற்சாலையை அமைக்க உத்தரவிட்டார். தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி பாய்லர் தொழிற்சாலை கேரள மாநிலத்திற்கு செல்ல இருந்ததையும் தடுத்து நிறுத்தினார்.

வையம்பட்டியில் குடி நீர் கேட்டு சாலை மறியல்

பாய்லர் தொழிற்சாலை திருவெறும்பூர் பகுதியில் அமைந்ததற்கு அந்த பகுதியில் இருந்த தண்ணீர் வசதி தான் முக்கிய காரணமாகும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால்கள் மற்றும் வாய்க்கால் தண்ணீர் மூலம் நிரம்பும் குளங்கள் எல்லாம் தான் இந்த பகுதியை செழுமையாக வைத்து இருந்தன. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை திருவெறும்பூர் தாலுகா ஏரி, குளங்கள் நிறைந்த பகுதி என்று கூட சொல்லலாம்.

10 ஆயிரம் ஏக்கர் பாசனம்

காவிரியின் கிளை வாய்க்கால்களில் ஒன்றான உய்யகொண்டானின் நேரடி பாசனம் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர், உய்யகொண்டானில் தண்ணீர் பெறுவதன் மூலம் நிரம்பும் 19 குளங்கள் வாயிலாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வந்தது. இந்த ஆண்டு தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி உய்யகொண்டான் வாய்க்காலையும் விட்டு வைக்கவில்லை. அந்த வாய்க் காலில் தண்ணீர் இல்லாததால் திருவெறும்பூர் பெரியகுளம், கிருஷ்ணசமுத்திரம் குளம், தொண்டமான்பட்டி குளம், கொட்டாரப்பட்டி குளம், நெருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை குளம், தேவராயனேரி குளம், பத்தாளப்பேட்டை கீழ குளம், பத்தாளபேட்டை மேலகுளம், கூத்தைப்பார் செவந்தாகுளம், நவாப் குளம், அய்யம்பட்டி குளம், தட்டான்குளம், மாங்காவனம் குளம், சொரக்குடிபட்டி குளம், கிளியூர் குளம், நெடுங்குளம், விளாங்குளம், திருவெறும்பூர் செங்குளம் ஆகிய 19 குளங்களிலும் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய் உள்ளன.

மணப்பாறையில் குடிநீருக்கா ரோட்டில்

கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. ஒரு சில குளங்களில், வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் மட்டும் தான் தேங்கி கிடக்கிறது.

வறண்ட குளங்கள்

இதேபோல் திருவெறும்பூர் தாலுகாவின் இன்னொரு பகுதியான நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை பகுதிகளில் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் நிரம்பும் குண்டூர் குளம், நவல்பட்டு குளம், பழங்கனாங்குடி பெரிய குளம், பழங்காநத்தம் பழந்திண்ணி குளம், புறளி குளம், தேனீர்பட்டி குளம், அரவாக்குறிச்சி குளம், அசூர் பெரிய குளம், வேங்கை குளம், வேலா குளம், புறந்தா குளம், பொய்கை குடி குளம் உள்ளிட்ட 15 குளங்களும் தண்ணீர் இன்றி வறண்டு போய் உள்ளன.

 

வறட்சி நிவாரணம் கேட்டு விவசாயிகள் காவிரி ஆற்றுக்குள் போராட்டம்

கடந்த 1999 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு அதிகம் பாதிக்கப்பட்டது திருவெறும்பூர் பகுதி தான். மழைக்காலங்களில் பெரும்பாலான குளங்கள் நிரம்பி விடும். இவற்றின் மூலம் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு குளத்து நீரை நம்பி எந்த பாசனமும் நடைபெறவில்லை. இதுபோன்ற ஒரு வறட்சி சுமார் 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் ஏற்பட்டது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.

மந்தமான அதிகாரிகள்

இந்த குளங்களுக்கு வரும் வரத்து வாய்க்கால்களில் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. சில குளங்களில் வீட்டுமனைகள் உருவாகி உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை எல்லாம் அகற்றி தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு 34 வாய்க்கால்களையும் தூர்வாருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.

இப்போது தூர்வாரினால் தான் மழைக்காலத்தில் காவிரி தண்ணீர் அல்லது மழைநீரை சேமித்து வைக்க முடியும். அத்துடன் வருடா வருடம் பகுதி பகுதியாக தூர் எடுப்பதால் உய்யகொண்டான் வாய்க்காலில் சரியான வாட்டம் இன்றி குளங்களுக்கு தண்ணீர் சரியாக வந்து சேருவதில்லை. எனவே அரியமங்கலத்தில் இருந்து பத்தாளப்பேட்டை வரை உய்யகொண்டான் வாய்க்காலை ஒரே நேரத்தில் மழைக்காலத்திற்கு முன்பாக தூர்வார வேண்டும்.

உப்பிலியாபுரத்தில் குடி நீருக்கா காத்திருக்கும் பெண்கள்.

தவிக்கும் விவசாயிகள் 

 

குடி நீருக்கா சாலை மறியலில் பொதுமக்கள்

திருவெறும்பூர் பகுதி விவசாயத்தில் உய்யகொண்டான் வாய்க்காலுக்கு முக்கிய பங்கு உண்டு. மேட்டூர் அணையில் நீர் குறைவாக இருக்கும் நிலையிலும் கூட அணையில் இருந்து வெளியேறும் கசிவு நீர் மூலமாக உய்யகொண்டான் வாய்க்கால் பாசனம் நடைபெற்று விடும் என்கிற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எனவே ஒரு காலத்தில் வளமான பகுதியாக இருந்ததற்கு காரணமான 34 குளங்களையும் தூர்வார மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

 

இதை எல்லாம் அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து தூர் வாரியிருந்தாலே தண்ணீர் பஞ்ச நாட்களான தற்போது சமாளித்திருக்க முடியும். கணக்கு மட்டும் தூர்வாரியதாக இருக்கு… தண்ணீர் ?

 

Leave A Reply

Your email address will not be published.