நிபந்தனைற்ற மன்னிப்பு கேட்ட புழல் ஜெயில் அதிகாரிகள் !

0 36

 ‘பரோல்’ வழங்காத புழல் ஜெயில் அதிகாரிகள் இருவரும் ஐகோர்ட்டில் நிபந்தனைற்ற மன்னிப்பு கேட்டனர்.

புழல் ஜெயில் அதிகாரிகள் ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டனர்

சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயலில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை திறக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த கட்சியின் நிர்வாகி பிரசன்னா உட்பட 21 பேரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், பிரசன்னாவின் தாயார் இறந்து விட்டதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவருக்கு ‘பரோல்’ வழங்கவேண்டும் என்றும் சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு அதிகாரியிடம் இருந்து எந்த பதிலும் வராததால், சென்னை ஐகோர்ட்டில் பிரசன்னா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களுடன் கைது செய்யப்பட்டவர்களும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களை எல்லாம் பின்னர் விசாரிப்பதாக கூறிய நீதிபதிகள், பிரசன்னாவுக்கும் மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அவரை மாலை 6 மணிக்குள் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘இந்த ஐகோர்ட்டு மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டும், அவரை சிறை அதிகாரிகள் விடுவிக்கவில்லை. அதனால், அவரது தாயார் உடல் இறுதி சடங்கு செய்யப்படாமல் உள்ளது’ என்று கூறினார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தால், போலீசார் அதை மதிப்பதே இல்லை. மாலை 6 மணிக்குள் பிரசன்னாவை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டோம். சென்னை புழல் சிறை கண்காணிப்பாளர் அவரை விடுதலை செய்யவில்லை. ஐகோர்ட்டையும், அரசு வக்கீல்களையும் மதிக்காமல் அவர் செயல்படுகிறாரா? ஐகோர்ட்டு உத்தரவை மதிக்காத சிறை கண்காணிப்பாளர், அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர்.

காலை 11.30 மணிக்குள் பிரசன்னா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறு விடுவிக்கவில்லை என்றால், புழல் சிறை கண்காணிப்பாளர் இந்த ஐகோர்ட்டில் பிற்பகலில் நேரில் ஆஜராக வேண்டும்.

அவரும் நேரில் ஆஜராகவில்லை என்றால், தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை தலைவர் (டி.ஜி.பி.) ஆகியோரை நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டியது வரும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பிரசன்னா உட்பட 21 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த உத்தரவில், ‘டாஸ்மாக் கடைக்கு முன்பு, ‘மதுபானக்கடை’ என்ற ரூ.1000 மதிப்புள்ள விளம்பர பலகையை உடைத்ததாக கூறி, 21 பேர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை ரத்து செய்கிறோம். மனுதாரர்கள் தமிழ்நாடு சட்டப்பணி ஆணைக் குழுவுக்கு ரூ.1000 வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், பார்த்தின் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை கண்காணிப்பாளர் முருகேசன், கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நேரில் ஆஜரானார்.

அப்போது இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, பிரசன்னாவை 5ந் தேதி (நேற்று) காலை 11.30 மணிக்கு முன்பாகவே விடுவித்து விட்டதாகவும், இந்த காலதாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அரசு வக்கீல் ராஜரத்தினம் ஆஜராகி, ‘சிறை விதிகளின்படி கோர்ட்டு உத்தரவு விவரம் தெரியாமல், கைதிகளை விடுவிக்க முடியாது. ஐகோர்ட்டு உத்தரவு கிடைக்காததால், பிரசன்னாவை விடுவிக்க கால தாமதமாகி விட்டது. இதற்கு சிறை அதிகாரிகள் இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பை கோரியுள்ளனர்’ என்றார்.

அதற்கு நீதிபதிகள், ‘இந்த ஐகோர்ட்டும், அரசு வக்கீலும் உத்தரவிட்டும், சிறை அதிகாரிகள் அதை அமல்படுத்த மாட்டார்களா?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.

அப்போது மனுதாரர் வக்கீல் சண்முகசுந்தரம், ‘தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்தப்படாமல் உள்ளதால், இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. தகவல் தொடர்பு வசதிகள் சிறப்பாக இருந்திருந்தால், ஐகோர்ட்டு உத்தரவு உடனே சிறை அதிகாரிகளுக்கு கிடைத்து இருக்கும். ஒயர்லெஸ் தொடர்பு என்பது தமிழக போலீசாருக்கு மட்டுமே உள்ளது’ என்று கூறினார்.

அதற்கு அரசு வக்கீல், ‘மின்னணு முறையில் தகவல் தொடர்பு சாதனங்கள் அடுத்த மாதம் முதல் 100 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்து விடும். தற்போது அந்த தகவல் தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத இந்த இரு அதிகாரிகளையும் தண்டிக்க வேண்டும். ஆனால், அவர்களது குடும்பம் பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் கேட்கும் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

Leave A Reply

Your email address will not be published.