ரஜினி பேச்சும் உருவ பொம்மை எரிப்பும் !

0 28

சென்னையில், ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த்  முதல் நாள்  நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நினைத்தால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என தனது அரசியல் நிலைப்பாட்டை கூறினார். அந்த பேச்சு குறித்த அலசல்கள் இன்னமும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் இன்று மீண்டும் பேசிய ரஜினிகாந்த் மிகவும் உற்சாகமாக பேசினார்.

கடந்த திங்கள்கிழமை முதல் தனது ரசிகர்களைச் சந்தித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், வெள்ளிக்கிழமை அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார். இந்த நிகழ்வில் அவர் பேசியது:

சர்ச்சையாகும் என நினைக்கவில்லை: ரசிகர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. இந்த விழாவில் ரசிகர்கள் காட்டிய ஒழுக்கம் பாராட்டுக்குரியது. இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மன்ற பொறுப்பாளர்கள், காவல் துறையினர், ஊடகங்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.

முதல் நாள் நிகழ்வில் சில விஷயங்களைப் பேசினேன். அது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என நினைக்கவில்லை. இன்னும் பேசிக் கொண்டிருந்தால், அது சர்ச்சையாகி கொண்டே இருக்கும். அதனால்தான் ஊடக நண்பர்களை அதிகமாகச் சந்திக்க முடியவில்லை.

நான் பச்சைத் தமிழன்: இந்த வேளையில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ரஜினிகாந்த் தமிழனா என நிறைய பேர் கேள்வி எழுப்புகின்றனர். நான் 23 ஆண்டுகள்தான் கர்நாடகத்தில் இருந்தேன். 44 ஆண்டுகளாக தமிழகத்தில்தான் இருக்கிறேன். கர்நாடகத்தில் இருந்து மராட்டியராகவோ, கன்னடராகவோ வந்திருந்தால்கூட, தமிழ் மக்களோடுதான் வளர்ந்தேன். என்னை ஆதரித்து பெயரும், புகழும், பணமும் அள்ளிக் கொடுத்து, என்னைத் தமிழனாக ஆக்கிவிட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன்.

இமயமலைக்குத்தான் போவேன்: என் மூதாதையர்கள் எல்லாம் கிருஷ்ணகிரியில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதை ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். என்னை இங்கிருந்து போ, என எங்கேயாவது தூக்கிப் போட்டால் இமயமலையில்தான் போய் விழுவேனே தவிர வேறு எந்த மாநிலத்துக்கும் சென்று விழமாட்டேன். தமிழக மக்கள் என்னை வாழ வைக்கும் தெய்வங்கள். அவர்களால் நான் நன்றாக இருக்கிறேன். என்னை வாழவைத்த தெய்வங்களும் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைப்பது தவறா?

ஸ்டாலின், அன்புமணி, திருமாவளவன், சீமான்: சரி, அதற்குத்தான் வேறு சிலர் இருக்கிறார்களே; நீ என்ன சரி செய்வது எனக் கேட்கலாம். ஆமாம் இருக்கிறார்கள்; மு.க.ஸ்டாலின் என் நெருங்கிய நண்பர்; சிறந்த நிர்வாகி. அன்புமணி ராமதாஸ் படித்தவர். விஷயம் தெரிந்தவர். நவீனமாக சிந்திக்கக்கூடியவர். கருத்துகளை வைத்திருப்பவர். திருமாவளவன் தலித்துகளுக்காக உழைப்பவர். சீமான் ஒரு போராளி. அவரது கருத்துகளைக் கேட்டு நான் பிரமித்துப் போய் இருக்கிறேன்.

இருந்தாலும், இங்குள்ள அடிப்படை அரசியல் அமைப்பு கெட்டுப் போய்விட்டது. அரசியல், ஜனநாயகம் பற்றிய மக்களின் மன ஓட்டம் மாறிவிட்டது. மக்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மக்கள் மத்தியில் மாற்றத்தை உண்டாக்க வேண்டும். அப்போதுதான் நாடு உருப்படும். இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

விமர்சனங்கள் வலுப்படுத்தும்: விமர்சனங்கள் குறித்து ரசிகர்கள் கவலை கொள்ள வேண்டாம். நம் மீதான விமர்சனங்களும், நிந்தனைகளும் நம்மை வலுப்படுத்தும். விமர்சனம் செய்பவர்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே நம்மை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

போர் வரும்போது…ராஜாக்களிடம் படை பலம் இருக்கும்; பெரியளவில் இருக்காது. ஆனால், போர் என வரும்போது எல்லா ஆண் மகன்களும் சேர்ந்து போரிடுவார்கள். அதுவரை அவரவர்களின் வேலையை, கடமையைச் செய்து கொண்டிருப்பார்கள். போர் என்று வரும்போது தங்களது மண்ணுக்காக, சுயமானத்துக்காகப் போராடுவார்கள்.

எனக்கும் தொழில் இருக்கிறது; கடமை இருக்கிறது. உங்களுக்கும் கடமை, தொழில் இருக்கிறது. எல்லோரும் ஊருக்கு புறப்படுங்கள்; கடமைகளைச் செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துக் கொள்வோம். ஆண்டவன் இருக்கிறான் என்றார் ரஜினிகாந்த்.

அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம்!

அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

இதுதொடர்பாக, சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை அவர் மேலும் பேசியதாவது:

நான் அரசியலுக்கு வந்தால், ரசிகர்கள் எப்படி இருக்க வேண்டும் என சில விஷயங்களைப் பேசினேன். அது இவ்வளவு வாத, விவாதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கவில்லை. ஆதரவு இல்லாமல்கூட இருக்கலாம்; எதிர்ப்பு இல்லாமல் வளரவே முடியாது. அரசியலில் எதிர்ப்புதான் மூலதனம். வாத, விவாதங்கள் இயல்புதான். ஆனால் சமூக ஊடகங்களில் சில கருத்துக்களை கீழ்த்தரமாக எழுதியது வருத்தம் அளிக்கிறது என்றார் ரஜினிகாந்த்.

தனக்கு இருக்கும் எதிர்ப்பை பற்றி கூறிய ரஜினி எதிர்ப்பு இருந்தால் தான் வளர முடியும், அதுவும் அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். மேலும் அரசில் சிஸ்டம் சரியில்லை எனவும் குற்றம்சாட்டியதுடன். தான் அரசியலுக்கு வருவதை சமூக வலைதளங்களில் பலர் இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், தமிழ் மக்கள் ஏன் இவ்வளவு கீழ்தரமாக போய்விட்டார்கள் என  நடிகர் ரஜினிகாந்த் தமிழர்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவை காந்திபுரம் பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

 

Leave A Reply

Your email address will not be published.