பாகிஸ்தானுடன் மோதல் என்பது மிகவும் சாதாரணமானது – கோலி அதிரடி

0 31

பாகிஸ்தானுடன் மோதல்  என்பது மிகவும் சாதாரணமானது – கோலி அதிரடி !

மினி உலக கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 1–ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை ஜூன் 4–ந்தேதி பர்மிங்காமில் சந்திக்கிறது. அதைத் தொடர்ந்து இலங்கை அணியுடன் 8–ந்தேதியும், தென்ஆப்பிரிக்க அணியுடன் 11–ந்தேதியும் மோதுகிறது. இந்திய அணியின் ஆட்டங்கள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

 

இதில் கலந்து கொள்வதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்றிரவு இங்கிலாந்துக்கு புறப்பட்டது. முன்னதாக இந்திய கேப்டன் விராட் கோலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 

 

 

 

சாம்பியன்ஸ் போட்டி கிரிக்கெட்டில் டாப்–8 அணிகள் மட்டுமே கலந்து கொள்கின்றன. அதனால் உலக கோப்பை உள்பட மற்ற பெரிய தொடர்களை விட சாம்பியன்ஸ் கோப்பை அதிக சவாலும் கடுமையான போட்டியும் நிறைந்ததாக இருக்கும். உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் தடுமாறினாலும் பிற்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி சரிவில் இருந்து மீண்டு வர வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கு அப்படி இல்லை. முதல் ஆட்டத்தில் இருந்து மிகச்சிறந்த உயரிய ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அரைஇறுதி வாய்ப்பு வெகு சீக்கிரமாகவே காலியாகி விடும்.

 

இரு தூண்கள்

 

‘நாம் தான் நடப்பு சாம்பியன்’ என்பதை மனதில் வைத்துக் கொள்ளாமல் விளையாட வேண்டும். அது தான் எங்களுக்கு உள்ள முதல் சவால். கடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் (2013–ம் ஆண்டு) இளம் வீரர்கள் அடங்கிய ஒரு குழுவாக ரசித்து, உற்சாகமாக விளையாடினோம். இறுதியில் எங்கள் வசம் கோப்பை வந்து சேர்ந்தது. கடந்த சாம்பியன்ஸ் கோப்பையுடன் ஒப்பிடும் போது தற்போதைய அணியில் ஒரு சில மாற்றங்கள் இருக்கிறது. ஆனால் களம் இறங்கி கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும் என்ற எங்களது மனநிலையில் மாற்றம் இல்லை.

 

டோனியும், யுவராஜ்சிங்கும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். அவர்களை வழிநடத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்திய அணியின் வலுவான தூண்களான அவர்கள் சிறப்பாக செயல்பட்டால் ஒட்டுமொத்த அணியின் மனஉறுதியும் வலுப்பெறும். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடியது போன்று டோனியும், யுவராஜ்சிங்கும் மிடில் ஓவர்களில் நெருக்கடி இன்றி சுதந்திரமாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு ஆடினால் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

 

தொடக்க ஜோடி

 

2013–ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டி, ரோகித் சர்மாவையும், ஷிகர் தவானையும் தொடக்க ஆட்டக்காரர்களாக நமக்கு அடையாளம் காட்டியது. இந்தியாவின் வெற்றியில் தொடக்க ஜோடியின் பங்களிப்பு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மறுக்க முடியாது.

 

இதே போல் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் சுழற்பந்து வீச்சில் வியப்பூட்டினர். வேகப்பந்து வீச்சும், பீல்டிங் செய்த விதமும் எல்லாமே அருமையாக அமைந்தது. அந்த தொடரில் சிறந்த பீல்டிங் அணியாக வர்ணிக்கப்பட்டோம். அதே பலத்துடன் களம் காண விரும்புகிறோம். இங்கிலாந்தில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு தகுந்தபடி வீரர்கள் சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டியது முக்கியம்.

 

இவ்வாறு கோலி கூறினார்.

 

பாகிஸ்தானுடன் மோதல் குறித்து…

 

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவது நல்ல வி‌ஷயமா என்று கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது ‘நீங்கள் (நிருபர்) என்ன நினைக்கிறீர்கள்? இப்படி தான் கேட்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வந்து இருப்பது போல் தெரிகிறது.

 

ஒரு கிரிக்கெட் வீரராக எதிர்முனையில் நின்று பேட்டிங் செய்து கொண்டிருப்பவர் என்ன நினைக்கிறார் என்று கூட யூகிக்க முடியாது. அப்படி இருக்கும் போது இதில் நான் என்ன சொல்ல முடியும்? கிரிக்கெட் வீரராக ஸ்டேடியத்திற்கு வெளியே நடக்கும் வி‌ஷயங்கள் எதுவும் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை.

 

இது மிகப்பெரிய ஆட்டம் என்பதை உணர்ந்துள்ளோம். இந்தியா–பாகிஸ்தான் ஆட்டத்தை ரசிகர்கள் எப்போதும் உணர்வுபூர்வமாகவும், பரபரப்பாகவும் எதிர்பார்ப்பார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை இது இன்னொரு சாதாரண ஆட்டம் தான். பாகிஸ்தானுடன் நாங்கள் மோதுவது இது ஒன்றும் முதல் முறையல்ல’ என்றார்.

 

வீரர்கள் பட்டியல்

‘டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் நாங்கள் நன்றாக செயல்பட்டுள்ளோம். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து வெற்றிகரமான அணியாக வலம் வர வேண்டும் என்பதே எங்களது லட்சியம். ஐ.பி.எல். போட்டி வீரர்கள் உடல்தகுதியுடன் இருப்பதற்கு உதவிகரமாக இருக்கும்’ என்றும் கோலி குறிப்பிட்டார்.

 

சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:– விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, ரஹானே, யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், ஹர்திக் பாண்ட்யா, உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி.

Leave A Reply

Your email address will not be published.