அரசியலில் ரஜினி.. ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி? அடுத்தக்கட்ட மூவ் !

0 35

அரசியலில்  ரஜினி..  ரஜினியின் அரசியல் வாரிசு ப.பாண்டி?  அடுத்தக்கட்ட மூவ் 

போருக்கு தயாராவோம் என ரஜினி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதுதான் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பரபரப்பு செய்திகள்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து “நம்ம திருச்சி” இதழ் கடந்த பிப்ரவரி முதல்வார இதழில், , “தலைவா தலைமை ஏற்க வா! இதுதான் சரியான நேரம்” எனும் தலைப்பில் தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. இப்போது தி.மு.கவினரும், மு.க ஸ்டாலினும், அ.தி.மு.கவில் ஒரு சிலர் சசிகலாவும், ஒரு சிலர் தீபாவும், முதல்வராக வரவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், அதற்குத் தகுதியானவர் ரஜினி மட்டுமே. தலைவர் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற எங்கள் விருப்பத்தை ரசிகர்கள் போஸ்டர் அடித்து வெளிபடுத்தி வருகிறார்கள். அவர்கள், ரஜினி அரசியலுக்கு வந்தால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தானாக நிரம்பும் என்றும், ரஜினிக்கு எப்போதும் மக்கள் ஆதரவு உண்டு. அவர் அரசியலுக்கு வர இதுவே சரியான நேரம் என ரஜினி ரசிகர்கள், ரஜினிக்கு அழைப்பு விடுத்தனர். அப்படி அழைக்கும் ரசிகர்களை ரஜினி வீட்டில் சந்தித்தது குறித்துக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

நாம் முன்பே சொன்னதுதான் இப்போது நடந்துள்ளது. உள்ளதை உள்ளபடி வாசகர்களுக்குச் சொல்லுவதில் நம்ம திருச்சி இதழ் பெருமையடைகிறது.

 

பல வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களுடன் ரஜினிகாந்த் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. முதல்நாள் நிகழ்ச்சியிலேயே ரசிகர்கள், முன்னிலையில் ரஜினிகாந்த், “என் வாழ்க்கை ஆண்டவன் கையில்தான் உள்ளது. அவன் என்ன பொறுப்பு கொடுத்தாலும், நியாயமாக, உண்மையாக, இருப்பேன். அரசியலுக்கு வரமாட்டேன் எனச் சொல்லி உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. நான் அரசியலுக்கு வந்தால், தப்பு பண்ணும் ஆட்களை கிட்ட சேர்க்க மாட்டேன். அதனால் இப்பவே ஒதுங்கிடுங்க என்றார்.

ஏற்கனவே “தலைவா வா! தலைமை ஏற்க வா!”என போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள். இப்போது ‘எம்.எல்.ஏ பதவி வேண்டாம், எம்.பி பதவியும் வேண்டாம், ஏன் கவுன்சிலர் பதவி கூட வேண்டாம் அதுக்கும் மேல தொண்டன் பதவியே போதும் தலைவா! ஏழைகளின் முதல்வரே மாற்றம் உங்களால் மலரட்டும்” என திருச்சி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்துகிறார்கள்.இதேபோல் மதுரை, சென்னை,புதுவை உள்ளிட்ட இடங்களில் பிரமாண்ட போஸ்டர்கள் பளபளக்கின்றன,

ரஜினி பேசிய அரசியல் பேச்சு. அமித்ஷா,திருநாவுக்கரசர், ஸ்டாலின்,பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த்,திருமாவளவன் என அரசியல் தலைவர்கள் பலரையும்  இதுகுறித்தே பேச வைத்துள்ளது.

ரஜினியின் வாரிசு அரசியல்

ரஜினியின் அரசியல் பரபரப்பு சூழ்ந்துள்ள நிலையில், காலா என்கிற கரிகாலன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. காலா என்றால் எமன் என்றும். அதே சமயம், கரிகாலன் என்பதன் பெயர்ச்சொல்லாக காலா என்பது இருக்கும் என்று படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதன் பிறகு சென்னையிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ஆனால் ரஜினியின் அரசியல் பரபரப்பு பேச்சுக்களால் எழுந்துள்ள இந்தப் பேச்சுக்களை கொஞ்சம் புடைபோட நினைத்த தனுஷ், அடுத்து ரஜினியின் 2.0 திரைப்படம்தான் வெளியாக இருந்தது. ஆனால் தனுஷ் தனது சொந்தப் படமான காலா என்கிற கரிகாலன் எனும் படத்தின் போஸ்டர்களை வெளியிட்டு அடுத்த கட்ட அரசியல் பேச்சுகளை கொஞ்சம் தவிர்க்க வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,”ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த பேச்சுகளால் எங்களது குடும்பத்திற்கு எந்த அழுத்தமும் இல்லை. அரசியல் பற்றிய முடிவு மட்டுமல்ல எந்த முடிவாக இருந்தாலும் ரஜினிகாந்த் எடுத்தால் அது சரியாகத் தான் இருக்கும்’ என்று கூறியதோடு, ரஜினியின் அரசியல் கட்சியில் தனுஷுக்கு பொறுப்பு கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் மெல்லச் சிரித்துக்கொண்டே கிளம்பினார். அப்படியானால் ரஜினி அரசியலுக்கு வந்தால், அவரின் வாரிசாக தனுஷ்தான் வலம்வருவார் என்றும், இதற்காகக் கொடி திரைப்படம் வெளியானபோது, தனுஷ் முன்னோட்டமாக தமிழகம் முழுவதும் வலம்வந்து ரசிகர்களைச் சந்தித்தார். ரஜினி மட்டுமல்ல தனுஷும் அரசியலுக்குத் தயாராகவே இருக்கிறார் என்கிறார்கள்.

 

தோழனுக்கு தோள் கொடுக்கும் தோழன்

வடமாநில சேனல்களில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதை நடிகர் கமல்தான் தொகுத்து வழங்க உள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “இப்ப இருக்கிற சூழ்நிலையில் யாருமே வரக்கூடாது. அது ஏன் நடிகர்கள் என்று ஒதுக்க வேண்டும். அரசியல் என்பது சேவை தொடர்புடையது; சிஸ்டம் சரியில்லை என்ற ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை. தமிழ் உணர்வு உள்ள யார் வேண்டுமானாலும் தமிழகத்தை ஆளலாம்; தற்போதைய அரசியலைப் பார்த்தால் யாருமே அரசியலுக்கு வரக்கூடாது. தமிழ் உணர்வோடு இருக்கும் எல்லோரும் தமிழர்தான்” என்றார். அப்படியானால் கமல் ரஜினியின் அரசியல் பயணத்துக்கு கிரீன் சிக்னல் வழங்கி உள்ளார் என்று ரசிகர்கள் சொல்ல ஆரமித்துள்ளார்கள்.

ரஜினிக்கு ஆதரவாக அடைக்கலராஜ் குடும்பம்.?

ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் திருச்சி அடைக்கலராஜ். இவர்தான் ரஜினி மூப்பானாரை ஆதரித்திடமுக்கிய காரணம். அடைக்கலராஜ் மறைந்தபிறகு ரஜினி காங்கிரஸுடன் கொஞ்சம் விலகியே நின்றார். ஆனால் அடைக்கலராஜ் குடும்பம், இப்போதும் ரஜினிக்கு நெருக்கமாகவே  உள்ளார்கள். அடைக்கலராஜின் மருமகன் பிரான்ஸிஸ் பாஸ்டின். தமிழகம் முழுவதும் ரஜினி ரசிகர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக, இவரும் சில ஆயத்தப்பணிகளை செய்ய துவங்கி உள்ளார். மக்களுக்கு இலவசங்கள் வேண்டாம். வேலையைக் கொடுங்கள் என்பதுதான் ரஜினியின் ஆசை. அதோடு நதிநீர் இணைப்பு என்பது ரஜினியின் பத்து வருடக் கனவு. அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக ரஜினி அறிவித்தார். அந்தத் திட்டத்தை இப்போதும் செயல்படுத்த ரஜினி தயாராகவே உள்ளார். நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார் என நண்பர்களுடன் பாஸ்டின் பேசிவருகிறார்.

 

கிளைமேக்ஸ்

அடுத்தகட்ட மூவ் ரஜினி மனநிலை

பி.ஜே.பியின் தேசிய தலைவர் அமித்ஷா, ரஜினி அரசியல் குறித்து அடுத்தடுத்து பேசுகிறார். பி.ஜே.பியினர் தங்கள் கட்சியில் சேரவேண்டும் என வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். ரஜினி நல்ல முடிவெடுப்பார் என காங்கிரஸ் சொல்கிறது. அவரின் முடிவைத் தமிழக தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள். சில எதிர்க்கிறார்கள். இப்படித்தான் ரஜினியின் அரசியல் பேச்சு பலரையும் பேச வைத்துள்ளது. ஆனால் ரஜினி பி.ஜே.பி பக்கம் போவது சரியாக இருக்காது என நினைப்பதுடன், தனிக்கட்சி காணலாம் என நினைக்கும் ரஜினி, இதற்காக சில அரசியல் தலைவர்களோடு பேசினார். அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளனுடன் அடிக்கடி சந்தித்து ரஜினி பேசினாராம்.

அதன்பிறகுதான் திருமா, ரஜினி தனியாக அரசியலுக்கு வரவேண்டும். ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். ரஜினியை எதிர்ப்பது அச்சத்தின் வெளிப்பாடு என தினம் ரஜினியின் அரசியல் குறித்து திருமாவளவன் பேசிவருகின்றார். சமீபத்தில் நெடுவாசல் போராட்டத்தில் கலந்துகொண்ட திருமாவளவன், ஒருபோதும் தன்னால் தமிழக முதல்வராக முடியாது என தெரியும் என பேசினார். இந்தப் பேச்சு. தன்னால் ஆகமுடியாததை ரஜினியை வைத்து செயல்படுத்த ஆயத்தமாவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ரஜினியும் எம்.ஜி.ஆரைப் போல் எழைகளையும், தலித் மக்களைக் கவர்ந்தால் நிச்சயம் அரசியலில் நிலைத்து நின்றுவிடலாம் என முடிவெடுத்துத்தான். கபாலியில் பல விமர்சனங்கள் வந்தாலும், தற்போது காலா என்கிற கரிகாலன் படம் என அடுத்தடுத்து ரஜினி படங்கள், தலித் படம் எனும் முத்திரை குத்தப்பட்டாலும், ரஜினி அதே சாயலில் நடிக்கிறார். மொத்தத்தில் அரசியலில் குதிக்க ஆயத்தமாகிவரும் ரஜினி, முதலில் தலித் மக்களை தங்கள் பக்கம் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் சிலரோ, இதெல்லாம் ரஜினிக்கான தனி அரசியல் என விமர்சனம் செய்கிறார்கள்.
மொத்தத்தில் ரஜினி எதைப் பேசினாலும் தலைப்புச் செய்திதான்.

கிளைமேக்ஸ்

நான் சொன்னது ரஜினி இல்லை..?

தமிழகத்தில் இனி சித்தர் ஆட்சிதான் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையில் தமிழக அரசியலில் பல புதிய மாற்றங்கள் நடைபெறும். தனி மனித ஆட்சிகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டது. இனி வரபோகும் ஆட்சி சித்தர்களின் அறிவுரையின் படி நடக்கும் என்று துறையூா் ஓங்காரகுடில் அரங்கமகாதேசிக சுவாமிகள் பேட்டி அளித்திருந்தார். இந்நிலையில் அவரிடம், ரஜினி தான் நீங்கள் கூறிய சித்தரா.? என்று கேட்டோம். சட்டென அவர், “ரஜினி அரசியலுக்குள் வரமாட்டார். நான் கூறிய சித்தரும் அவர் இல்லை. சித்தர் ஆட்சி என்பது குற்றம் நடக்கும் முன் என்ன நிகழும் என்பதை சொல்லும் ஓரு ஆட்சி. குற்றம் நடந்த பின்பு குற்றத்திற்கான காரணத்தை தேடுவது தான் மனிதர்களின் ஆட்சி என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.