கொலை செய்யும் கந்து !

0 78

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில், செங்கோட்டை அருகேயுள்ள, காசிதர்மம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கிமுத்து, அவரது மனைவி சுப்புலட்சுமி மற்றும் மதுசரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் தீக்குளித்த சம்பவம் கந்துவட்டிக் கொடுமையை உலகறியச் செய்துள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத் தொழிலாளர் ரவி என்பவர் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 3 லட்சம் வரை கந்துவட்டிக் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை வட்டியை மட்டுமே கட்டி வந்த நிலையில் கடனை திருப்பி செலுத்த முடியாததால் நெசவாளர் ரவியை கடன் கொடுத்தவர்கள் சிறுநீரகத்தை விற்க நிர்பந்தப்படுத்தியுள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

இந்நிலையில் இடைத்தரகர்கள் அவரை கடனுக்காக சிறுநீரகத்தை விற்க அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மனைவி சம்பூரணம் மனு கொடுத்த மனுவின் அடிப்படையில் ரவி எர்ணாகுளம் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 24-ம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாண்டி என்பவரிடம் கடன் பெற்று திருப்பிச் செலுத்தியும், கூடுதல் பணம் கேட்பதாக புகார் அளித்து, இதுதொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வராததால், சரஸ்வதி என்பவரும் அவரது மகன் ஜெகதீசன் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்தனர்.

இதேபோல் திண்டுக்கல் மற்றும் சின்னாளபட்டி பகுதியில் இருந்து கந்துவட்டி கும்பல் பணம் கொடுத்து மிரட்டி வருவதாகவும், 1000 ரூபாய்க்கு வாரத்திற்கு 100 வட்டி வாங்கப்படுகிறது. 5 ஆயிரம் ரூபாய் தேவை எனில் அவர்களது வீட்டு பட்டா மற்றும் ரேசன் கார்டு போன்ற ஏதாவது ஒரு பொருளை அடமானமாக வாங்கி வைத்துக் கொள்வதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கந்து வட்டிக்கொடுமை அதிகரித்து வருவதாகவும் அதை தடுக்க கடந்த 2003 சட்டம் கொண்டு வந்த அதிமுக அரசு, ஆனால் அதை மிக தீவிரமாக நடைமுறை படுத்த தவறிவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செய்தி வெளியானபோது, இதைபார்த்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கிருபாகரன். கடந்த சில வருடங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், கந்துவட்டி பிரச்னையை தானாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அதனை ஏற்றுக் கொண்ட அப்போதைய தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், கந்துவட்டி கொடுமையை தடுப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும், இந்த வழக்கு விசாரணையின்போது கோர்ட்டுக்கு உதவும் விதமாகவும் செயல்பட மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில், ஏழை மக்கள் மட்டுமல்லாது நடுத்தர மக்களும் வட்டிக்கு பணம் வாங்கி சிக்கிக்கொள்கின்றனர் இவர்கள் அதிகம் மீட்டர் வட்டிக்குதான் பணம் வாங்குகின்றனர். ஒரு லட்சம் ரூபாய்க்கு 85 ஆயிரம் மட்டுமே கொடுப்பார்கள். வாரம் 10 ஆயிரம் வீதம் 10 வாரங்களுக்கு 1 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கட்ட வேண்டும். ஒருவாரம் தாமதித்தாலும் வட்டி இருமடங்காகும். வாங்கும் பணத்திற்கு மணிக்கணக்கு போட்டு வாங்கும் வட்டிக்கு பெயர் ரன் வட்டி. 1000 ரூபாய் பணம் வாங்கிவிட்டு தினம் 100 வீதம் வட்டி கட்டிவிட்டு பத்தாவது நாள் முடிவில் 1000 ரூபாய் திருப்பி தருவது ராக்கெட் வட்டி. இது சிறுவியாபாரிகள் அதிகம் இந்த வட்டியில் சிக்கிக் கொள்கின்றனர்.

மாத வட்டி, வார வட்டி, தவணை வட்டி என கந்து வட்டிகள் பல இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப கம்யூட்டர் வட்டியும் இருக்கிறது. அதாவது ஒரு வாரத்திற்கு 10 ஆயிரம் கடன் வாங்கினால் அதில் 2 ஆயிரம் எடுத்துக்கொண்டு 8 ஆயிரம் கொடுப்பார்கள். ஒரு வாரத்தில் திருப்பி செலுத்தும் போது 10 ஆயிரம் செலுத்த வேண்டும். இதற்கு பெயர் கம்யூட்டர் வட்டி.

பல்வேறு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் உள்ளது. தமிழ்நாடு கந்து வட்டி தடைச்சட்டமும் அமலில் உள்ளது. ஏழைகளுக்கு வங்கிகளில் கடன் வாங்க போதுமான ஆவணங்கள், ஆதாரங்கள் இல்லை. இதனால், அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் இருந்து பெரும் வட்டிக்கு பணம் பெறுகின்றனர். வட்டி மிக அதிகம் என நினைப்பதே இல்லை. பணம் கிடைத்தால் போதும் என்று வாங்கி விடுகிறார்கள். கந்து வட்டிக்காரர்கள் வட்டிக்கு வட்டி போட்டு, வாங்கிய கடன் தொகையை விட அதிகமாக பணத்தை வசூலிக்கின்றனர்.

சட்டவிரோதமாக பணம் வசூலிப்பது தவறானது. கந்து வட்டி தடை சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதால், கந்து வட்டிக் கும்பலின் கொடுமையை தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

எனவே, கந்து வட்டி தடைச் சட்டம், சட்டவிரோத பணம் நடவடிக்கை சட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் தெரிந்துக் கொள்ளும் விதமாக வானொலி, நாளிதழ்கள், தியேட்டர் உள்ளிட்டவைகளில் அரசு விளம்பரங்களை வெளியிடவேண்டும். கந்து வட்டிக்காரர்களுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் குறித்து போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.

ஆகவே மாவட்டந்தோறும் கண்காணிப்பு கமிட்டி அமைக்கவேண்டும். போலீசிடம் புகார் கொடுக்கும்போது, அவற்றின் நகல் ஒன்றை கண்காணிப்பு குழுவிடமும் புகார்தாரர்கள் கொடுக்கவேண்டும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய அறிக்கையை கண்காணிப்பு குழுவிடம் போலீசார் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என அறிக்கை தாக்கல் செய்தார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.

மதுரை ஜெய்ஹிந்த்புரம், சிந்தாமணி, செல்லுார், காமராஜர்புரம், கரிமேடு, தேனி, ஈரோடு, திருப்பூர், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கந்துவட்டி கொடுமை மீண்டும் அதிகரித்துள்ளது. என்றும் வாங்கிய கடனுக்கு பல பெயர்களில் வட்டி வசூலிக்கும் கும்பலால், பல குடும்பங்கள் வறுமையில் தத்தளிக்கின்றன.
இதில் அதிகம் பாதிப்படுவது வீதியோர கடை வியாபாரிகள், அப்பள தொழிலாளர்கள் என்றும், கடன் கொடுப்பவர்கள் இவர்களை மிரட்டி கொடுமைப்படுத்துவது தொடர்கிறது.

இதேபோல் வாங்கியவர்கள் அதில் இருந்து மீளவே முடியாமல். செய்யும் தொழிலை இழந்தும், இருக்கும் சொத்தை விற்று குடும்பத்தோடு ஊரைவிட்டே காலி செய்து ஓடிவிட வேண்டிய சூழலும் நடந்துள்ளது. இதேபோல் திருச்சி, சென்னை, திருப்பூர்,சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் கந்துவட்டி கொடுமை அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

எங்கோ நடக்கிறது என வேடிக்கை பார்க்க முடியாது. திருச்சி, திருவெறும்பூர், உறையூர், காந்தி மார்க்கெட், ஶ்ரீரங்கம் பகுதிகள் மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர் மாவட்டங்களிலும் கந்துவட்டிக்கும்பல் தலைவிரித்தாடுகிறது

 

Leave A Reply

Your email address will not be published.