அறிவிக்கப்படாத கவர்னர் ஆட்சி – அதிர்ச்சியில் எடப்பாடி – தினரன்

0 71

ஆட்சியைக் கலைச்சிடுவேன்!…

எடப்பாடி மற்றும் தினகரனை மிரட்டிய மோடி!….

சசிகலா குடும்பத்தை குறிவைத்து வருமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டு தமிழகத்தை அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பொதுவாக, ஒரு ரெய்டு நடந்து அங்கு வருமானத்திற்கு புறம்பாக சேர்க்கப்பட்ட பணமோ, சொத்து சம்பந்தமான ஆவணங்களோ கைப்பற்றப்பட்டால் அந்த நடவடிக்கைக்கு அரசியல் களத்திலிருந்து மட்டுமல்லாமல் அனைத்து தளங்களிலிருந்தும் வரவேற்பு கிடைக்கும். ஆனால், மன்னார்குடி மாஃபியாவான சசிகலா குடும்பம் ஜெ.ஆட்சிக்காலத்தில் தமிழகம் முழுக்க சொத்துக்களை வாங்கிக் குவித்தது மட்டுமல்லாமல், அரசின் திட்டங்களில் அடித்த கமிஷன் என கோடிகளில் குளித்தது ஊரறிந்த விஷயம். ஆனால், இந்த மெகா ரெய்டு நடவடிக்கையில் பா.ஜ.கவிற்கு தான் கெட்டப்பெயர் ஏற்பட்டிருக்கிறதே தவிர சசிகலா குடும்பத்திற்கு அல்ல!..

இன்னும் சொல்லப்போனால், சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.கவின் பவர் செண்டராக இருந்த தினகரனை ஆரம்பம் முதலே காலி செய்ய பல வேலைகள் நடந்தன. சசிகலா தரப்பு முதலமைச்சராக்கிய ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ்ஸே பா.ஜ.கவுடன் கரம்கோர்த்து சசிகலா குடும்பத்துக்கு பிரச்சினையை கொடுத்துவந்தனர்.

 

ஆனால், தினகரனோ எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் மட்டுமல்லாது ஆளும் அரசின் எம்.எல்.ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை அனைவரையும் சிங்கிள் ஆளாக வெளுத்து வாங்கினார். மேலும், ஆளும் அரசை ஊழல் ஆட்சி என்று விமர்சித்தது, இன்னும் பல எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்பட்டு வருவது போன்ற காரணங்களால்,‘தினகரனை எங்களால் சமாளிக்க முடியவில்லை’ என எடப்பாடியும், பன்னீர்செல்வமும் மாறி மாறி டெல்லிக்குச் சென்று கண்ணீர்விட்டு வந்தனர்.

 

ஏற்கனவே, தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சிக்கு தடையாகவும், மோடி தலைமையிலான மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் தினகரனுக்கு, நாம் யார் என்று காட்டினால் தான் பயம் வரும் என்பதற்காக மோடி அரசு எடுத்த நடவடிக்கை தான் இந்த மெகா ரெய்டு. ஆனால், இந்த ரெய்டில் தினகரனின் இமேஜை பா.ஜ.க மேலும் வளர்த்துவிட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

187 இடங்களில் 1800 அதிகாரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மெகா ரெய்டில் பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும், பல கோடி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டாலும், “எங்களை மிரட்டிப் பார்க்க வேண்டும் என பா.ஜ.க அரசு நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கெல்லாம் பயப்பட மாட்டோம். மிஞ்சிப்போனா என்ன ஒரு 20 வருஷம் தூக்கி உள்ளப் போடுவீங்க. நாங்க எல்லாம் திகார் ஜெயிலையே பார்த்தவங்க” என தில்லாக பேட்டி கொடுத்துவருகிறார். வெளியே இப்படி தினகரன் தில்லாக பேட்டி கொடுத்தாலும், உள்ளுக்குள் கடும் மன உளைச்சலில் சிக்கித் தவித்து வருகிறார்.

 

தமிழகத்தில் மட்டும் தான் தற்போது வரை மோடியின் டீமானிடைஷேஷன் தவறு என அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புக் குரல் கொடுத்துவருகின்றனர். இது நம்முடைய இமேஜிற்கு ஒரு இழுக்கு என பா.ஜ.க எண்ணிய வேளையில் தான், பணமதிப்பிழப்பு செய்த நவம்பர் 8-ம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்க தி.மு.க முடிவு செய்தது. இதை மற்ற கட்சிகளும் ஆமோதித்தன. இது மோடி அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. எனவே, கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு எடுத்த செயலை விமர்சிக்கும் தமிழகத்தில் ஒரு மெகா ரெய்டு நடத்தினால் மற்றவர்களை கொஞ்சம் அடக்கி வைத்தது மாதிரி இருக்கும் என நினைத்த மோடி அரசின் கையில் சிக்கியது சசிகலா குடும்பம்.

 

ஒரே கல்லுல ரெண்டு மாங்க என்ற கான்செப்டில் சசிகலா குடும்பத்தை மிரட்டியதாகவும் இருக்க வேண்டும். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான எடுத்த நடவடிக்கையாகவும் இருக்க வேண்டும் என பா.ஜ.க கணக்கு போட்டது. அப்படி நடத்தப்பட்ட ரெய்டில் கடந்த ஆட்சிக்காலத்தில் போயஸ் கார்டனில் பதுக்கிய பல கோடி ரூபாய் கரன்சிகளும், மன்னார்குடி குடும்பத்திடம் உள்ள சொத்துக்களையும் பட்டியலிட்ட மோடி அரசு, கடைசியாக ஒரு வாய்ப்பை தினகரனுக்கு வழங்கியிருக்கிறது. அது ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணியுடன் தினகரன் இணைய வேண்டும் என்பதும், ரெய்டில் சிக்கியதில் ஒரு பெரிய தொகையை குஜராத் தேர்தலுக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் பிரதான கோரிக்கை.

 

உண்மையிலேயே பா.ஜ.க.வின் நோக்கம் என்ன?

 

வெறும் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் தலைமையிலான அ.தி.கமுகவை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்பது மோடிக்கு தெரியும். மேலும், தமிழகத்தில் ஏற்கனவே பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் பல கட்சிகள் இருக்கின்ற வேளையில், அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் ஒரு பகுதியை வைத்திருக்கக் கூடிய தினகரன், மத்திய அரசினை தொடர்ந்து அட்டாக் செய்து வருவதும், மாநில அரசுக்கு சிக்கல் கொடுத்துவருவதையும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தவிர்க்க நினைக்கிறது.

 

எனவே, வெறும் ஓ.பி.எஸ் – ஓ.பி.எஸ் மட்டுமல்லாது தினகரன் அணியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.கவைத்தான் பா.ஜ.க அரசு எதிர்பார்க்கிறது. அப்படி இருந்தால்ன் எந்தவித பிரச்சினையுமில்லாமல் தமிழகத்தில் பா.ஜ.க தன் செல்வாக்கை வளர்த்துக் கொள்ள முடியும் என மோடி அரசு நினைக்கிறது.

 

ஆனால், தினகரனுடன்  இணைவதில் ஈ.பி.எஸ் – ஓ.பி.எஸ் அணிகளுக்கு கொஞ்சம் கூட உடன்பாடில்லை. மேலும், 12 எம்.எல்.ஏக்களை இழுக்கும் முயற்சியில் தினகரன் செயல்பட்டு வருகிறார். அப்படி ஏதேனும் நடந்தால் அது ஆட்சிக்கு பாதிபை ஏற்படுத்திவிடும். கொஞ்சம் தினகரனை அடக்கி வையுங்கள் என ஈ.பி.எஸ் தரப்பும், ஃபெரா வழக்கில் தினகரை கைது செய்து சிறையில் அடைத்தால் தான் தினகரனால் தேர்தல், கட்சி என எதிலும் செயல்படாமல் முடக்கி வைக்க முடியும் என பா.ஜ.கவிடம் ஓ.பி.எஸ் தரப்பும் தனித்தனியாக புகார் தெரிவித்துவருகின்றனர்.

 

சமாதானமாகச் செல், இல்லையேல் இப்படித்தான் அடிக்கடி ரெய்டு, வழக்கு, ஃபெராவில் சிறைத் தண்டனை என பலவற்றை சந்திக்கக் கூடும் என தினகரனை மிரட்டும் மோடி அரசு, ஆர்.கே.நகரில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் படி உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடியையும், சேகர் ரெட்டி வழக்கை தூசி தட்டுவேன் என பன்னீர் செல்வத்துக்கும் செக் வைத்திருக்கிறது.

 

பா.ஜ.கவி ஒரே நோக்கம் ஒருங்கிணந்த அ.தி.மு.க., அது விரைவாக நடைபெறாத பட்சத்தில் எடப்பாடி மற்றும் பன்னீருக்கும் மெர்சல் காட்டவிருக்கிறார் மோடி.

 

இதுமட்டுமில்லாமல் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் கோவை விசிட்டும் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், கவர்னரை வைத்து மாநில அரசின் செயல்களை முடக்கி கவர்னர் ஆட்சி போன்ற மாயையை ஏற்படுத்தவே அவரை களம் இறக்கி விட்டிருக்கிறது மோடி அரசு.

 

மோடியின் இழுப்பிற்கு தினகரன் வளைந்து கொடுத்தால், சேகர் ரெட்டி வழக்கு போல் இந்த ரெய்டும் சத்தமில்லாமல் அமிழ்ந்துவிடும். இல்லையென்றால் மோடியின் நடவடிக்கை இன்னும் காட்டமாக இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்….

 

நவீன் இளங்கோவன்

 

Leave A Reply

Your email address will not be published.