வானகம் என்னும் திசைக்காட்டி

0 45

வானகம் என்னும் திசைக்காட்டி

 

 

இணையில்லா இவ்வுலகானது மனிதர்களுக்கு மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் உரிமையானது’ என்ற உள்ளுணர்வு, ‘ஈடில்லா இயற்கை வளத்தினை இடையூறின்றி அடுத்தடுத்த சந்ததிக்கும் கையளிக்க வேண்டும்’ என்ற கரிசனம், ‘மாற்றம் என்பது சொல்; அல்ல செயல்’ எனும் வாழ்வனுபவ தரிசனம் என்றெல்லாம் மாறாத இயற்கை நியதியின் உருத்திரளாகவே உருக்கொண்டது இயற்கை விவசாயப்போராளி நம்மாழ்வாரின் வாழ்க்கை.

 

இன்றைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், கதிராமங்கலம், நியூட்ரினோ எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்ற வகையில் மண் மற்றும் மரபுரிமைக்காகக் களமாடிக் கொண்டிருக்கும் தமிழக இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவியர் என அநேக கரங்களும் ‘நம்மாழ்வார்’ படங்களை பதாகைகளாகத் தாங்கி நிற்கின்றன.
‘இம்மண்ணின் மரபு விவசாய வழிமுறையை காலத்துக்கு பொருந்தாதது என வணிகத் தந்திரத்தால் ஓரங்கட்டி ஒதுக்கிவைத்துவிட்டு ‘பசுமைப்புரட்சி’ பரவலாக்கப்பட்டது. இரசாயன உரங்களின் மேலதிக பயன்பாடு, அளவற்ற பூச்சிக்கொல்லி உபயோகம், வணிகவெறியிலான உற்பத்தி முறை ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளான உயிர்சூழல் கேடு, விவசாயிகள் தற்கொலை, உணவு நஞ்சாதல் போன்ற பேராபத்தினை அடுத்த தலைமுறை மீதான அன்பும், அக்கறை கொண்ட அவரது மனம் தனது வேளாண்மைத் துறை சார்ந்த அரசு கைவிட வைத்தது, தனது இறுதிக் காலம் வரை சொந்தமாக கார்(மகிழுந்து) இல்லாமல் தமிழகநிலமெங்கும் அவரை பயணிக்க வைத்தது, அவரது இலட்சிய வாதம்.

 

இயற்கை விவசாயம் சார்ந்து அவருக்கு ஆயிரம் கனவுகள் இருந்திருக்கக்கூடும். கனவாகவே அவை கலைந்துவிடாமல், களத்தில் அதற்கான நடைமுறை செயல்திட்டங்களை கருத்தொற்றுமை கொண்டவர்களை கைகோர்த்துகொண்டு கிராமத்து விவசாயிகளோடு வினையாற்றியபடியே இருந்தார்.
அவ்வகையில், இயற்கை வேளாண்மை பயிற்சி அளிக்க அவர் உருவாக்கிய உயிர் சூழல் நடுவமே ‘வானகம்’.
தற்சார்பு வாழ்வியல்
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி, சுருமான்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது ‘வானகம்’.
நம்மாழ்வார் அதன் முன்னத்திராக உயிரோட்டமாக பயிற்சியளித்தது போலவே, அவரது மறைவுக்குப் பின்பும் மேலும் வீரியமான செயலூக்கத்துடன் அவரின் வழிவந்த உண்மைத் தொண்டர்கள் கடமை உணர்ந்து காரியமாற்றுகின்றனர்.
நஞ்சில்லா உணவு, மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா கல்வி இவை மூன்றும் நம்மாழ்வாரின் வாழ்நாள் இலக்குகளாக இருந்தன. அவ்வகையில், ‘இயற்கை வேளாண்மை என்பது நிலம் உழுது பயிர் செய்யும் பணி மட்டுமல்ல’; மாறாக, வானகம் அதை ஒரு வாழ்வியலாகவே பயிற்றுவிக்கிறது.

 

நம்மாழ்வார் வலியுறுத்திய தனிமனித விடுதலை என்பது தற்சார்பிலிருந்தே துவங்குகிறது. எல்லாவற்றையும் பணமாகப் பார்க்கும் மானோபாவத்தை மக்களிடம் பரப்பிய உலகமயமாக்கலே என்ற அதிகாரம் இனி தோற்கும்….
ஏனெனில், மக்கள் இயற்கைக்குக் திரும்பும் பாதையைக் கண்டறிந்துவிட்டனர் எனும் அவரது வார்த்தைகளில் அர்த்தங்கள் ஆயிரம் உள்ளன. ஆம்.. இன்று இளைய தலைமுறை கழனியிலும் களத்திலும் கால்வைத்திருக்கிறது. வானகம் நாளைய நல்லதொரு மாற்றத்துக்கான வேர்பிடித்த விளைநிலமாகட்டும்
வானகம் பற்றி நம்மாழ்வார்
என்னுடைய நோக்கங்கறது இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52 சதவீதம் பேரு சிறு விவசாயிங்க. நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசம், மேலும் வறுமையில தற்கொலைக்கும் தள்ளப்படுற அப்படியான புழுதியிலும் புழுதியாக இருக்கிற அந்த விவசாயிங்கள ஒருபடி மேல உயர்த்தி விடனும், அதேபோல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிந்து அவங்களுக்குப் பயிற்சி அளித்து நாடு முழுவதும் பரவ விடனும், அதுதான் வானகத்த மையமாக வச்சி செயல்படுற நம்மாழ்வாரோட நோக்கம். இந்தப் பணியை நானும், எனக்கு அப்புறம் வானகமும் தொடர்ந்து செய்து வரும்.
இந்த நோக்கத்துல தங்களையும் இணைச்சுக்க விரும்புறவங்க வந்து இணைஞ்சுக்கலாம். வானகம் எப்போதும் திறந்தே இருக்கும். திறந்த கரங்களோடு அரவணைத்துக்கொள்ளும்.
-சங்கிலிராஜ்

Leave A Reply

Your email address will not be published.