சுடச் சொன்னது யார்

0 61

சுடச் சொன்னது யார்?

 

ஸ்டெர்லைட் ஆலையை அமைப்பதற்கு ஆரம்பத்திலே எதிர்ப்பு, 10 ஆண்டுகளுக்கு மேலாக கான்சர் நோயோடு போராட்டம், ஆர்ப்பாட்டம் என அமைதி வழிகளில் போராடிய மக்களுக்கு இன்று துப்பாக்கி குண்டுகளை பரிசாக கொடுத்து இருக்கிறார்கள் எடப்பாடியும் பன்னீர் செல்வமும்.

குண்டடி பட்டு , வாயை பிளந்து, கண் விழித்திரை சொரூகி ரத்தச் செகதியில் செத்து மிதந்து கொண்டியிருக்கும் படங்களை பார்க்கையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் நண்பனை போலவும், அண்ணனைபோலவும் இருக்கிறது. நெஞ்சியிலும், தலையிலும் குண்டு பாய்ந்து அரசு மருத்துவமனையின் மூலையில் சுருண்டு கிடக்கும் சடலங்களைப் பார்க்கையில் முள்ளி வாய்க்கால் நினைவுக்கு வருவதையும் அதன் நினைவில் கைகளிலும் மூளையிலும் புழுக்கள் ஊர்ந்து செல்கிறது. வாயில் குண்டடிபட்டு சுருண்டு கிடக்கும் 17 வயதான வெனிஸ்டாவின் படம் என் தங்கையை நினைவூட்டி கண்களை அருவியாக்கி கொலை செய்யத் தூண்டுகிறது.

முருங்கை மரத்தில் கூடு கட்டிய புழுக்களை தீ வைத்து கொழுத்துவது போல ஒட்டு மொத்தமாக கொழுத்தி விட்டாய். உரிமைக்காக , தண்ணீர்காக, சுத்தமான காற்றுக்காக ஆயுதம் இல்லாமல் போராடியவர்களை எம்மிடம் வாங்கிய பணத்திலே எங்களை கொல்ல துப்பாக்கி வாங்கி சுட்டுக்கொள்ளும் நாட்டையும் ஆட்சியையும் இங்குதான் பார்க்கிறேன்.

எங்களது ஒவ்வொரு ஓட்டிலும் உங்களுக்கு இந்த சமூகத்தில் முதல்வன் , அமைச்சகன் என உனக்கே அர்த்தம் தெரியாத வார்த்தைகளை அடையாளமாக நாங்கள் தந்தது பெண் பிள்ளை என்றும் பாராமல் எங்களது சகோதரிகளை சுடத்தானா?

அனில் அகர்வால் வீசிய எச்சிக் காசுகளுக்காக இத்தனை பேரை சுட்டுக் கொலை செய்துள்ள எடப்பாடி பன்னீர் உள்பட , எவன் எவன் வீட்டில் அனில் அகர்வால் வீசிய பணக் கட்டுகள் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் எல்லாம் இப்போது ரத்தம் சொட்ட உறைந்து பிணவறையில் விரைத்துப் போய் கிடைக்கும் ரத்த படிந்த பிணத்தின் வாடைகள் வீசுவதை இங்கு என்னால் நுகர முடிகிறது.

போராடப் போன பிள்ளைகளை , கணவன்களை , அப்பாக்களை , சகோதரிகளை இழந்தவனின் கண்ணீர் துளிகள் , விம்மல்கள், பற்றி எரியும் கும்பிகளின் அழுகை ஓலங்கள் உங்களது மனைவி குழந்தை வாரிசுகளை காலம் நிம்மதியாக இருக்க விடும் என்று நான் நம்பவில்லை.
உறவுகளை இழந்து , கண்ணீரில் கதறி அழுபவனில் கூக்குரலின் வெப்பம் தீஜ்வாலையாக மாறி அதிகாரத்தை தீட்டி கொலை செய்தவனின் ஒவ்வொரு வீட்டிலும் , அதிகார நாற்காலியின் ராஜ்ஜியத்திலும் பற்றி எரியும் நாள் வெகு தூரமில்லை.
கடற்கரை மாதா ஆலயத்திலிருந்து அமைதியாக 8 கி.மீ தூரம் வரை நடந்து சென்றவர்களை தடுத்து தடியடி நடத்தி சுடச் சொன்னது யார்? அரசு சாட்சியாக ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே பெண் சிறுமியின் வாயில் சுட்டுக் கொன்ற வீரன்களின் முகத்தில் காரி உமிழ்வது கூட என் எச்சிலுக்கு இழுக்காக பார்க்கிறேன்.

ஸ்டெர்லைட்டை நாங்கள் மட்டும் வெறுக்கவில்லை. கோவா, ஒரிசாவின் பழங்குடிகளும், . நியம்கிரி மக்களும், பட்னாவிலும் லாஞ்சிகரிலும் லட்சக் கணக்கான மக்கள் வெறுத்து ஒதுக்கி போராடினர் . உலகிலேயே மிகவும் அதிகமாக வெறுக்கப்படும் கார்பரேட் நிறுவனம் என்று இன்டிபென்டென்ட் நாளிதழ் இந்நிறுவனத்தை அறிவித்திருக்கிறது.

இந்த தகவல்களை எல்லாம் தெரிந்து இருந்தும் மோசமான அரசியல்வாதிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு சொந்த மண்ணின் நேசேமிக்க மனிதர்களை கொலை செய்ய துணை போன அதிகாரிகளை இந்த நேரத்தில் ஒன்று மட்டும் கேட்கத் தோன்றுகிறது. உங்கள் துப்பாக்கிகள் உங்கள் மனைவி, குழந்தைகள்,உங்களை பெற்றவர்கள் பக்கமும் இப்படித்தான் நீளுமா? இதே போல மூளை சிதறும் அளவிற்கு ஆத்திரம் தீர குறிபார்த்து சுடுமா?

 

-சண்.சரவணக்குமார்
பத்திரிகையாளர்

Leave A Reply

Your email address will not be published.