ஊழலில் தமிழ்நாடு நம்பர் 1 ஆய்வு சொல்லும் உண்மை!

0 88

ஊழலில் தமிழ்நாடு நம்பர் 1 ஆய்வு சொல்லும் உண்மை!

 

 

“தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம்பெறவில்லை: செய்தி – தமிழக அரசின் கஜானாவை வேண்டுமானால் இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். மிகவும் சுத்தமாகத் துடைத்து வைத்திருக்கிறார்களாம்!”
மே 1ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டரில் கிண்டலாக இப்படிச் சொல்லியிருந்தார். கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள் என்றால் அவ்வளவு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பதைத்தான் ராமதாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
ராமதாஸின் ட்விட்டர் கருத்தை ‘சிஎம்எஸ் இந்தியா’ என்ற அமைப்பு ‘ஊழல் ஆய்வு – 2018’ உண்மை என்று நிரூபித்திருக்கிறது. இந்த அமைப்பினர் இந்திய அளவில் 13 மாநில அரசுகளின் நிர்வாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் சிஎம்எஸ் இந்தியா அமைப்பினர் வெளியிட்ட ஊழல் ஆய்வு – 2018 அறிக்கையில் இந்திய அளவில் ஊழலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. தெலங்கானா ஊழலில் இரண்டாம் இடத்தையும், ஆந்திரா நான்காம் இடத்தையும் பிடித்து தென்னிந்தியாவுக்குப் ‘பெருமை’ சேர்த்திருக்கின்றன.
சிஎம்எஸ் அமைப்பின் அலோக் ஸ்ரீவத்சவா இதுகுறித்து தெரிவிக்கையில், “நாங்கள் பல்வேறுகட்ட ஆய்வுகள் மூலமாக இந்த முடிவுக்கு வந்திருக்கிறோம். ஒவ்வொரு மாநிலத்தின் பொருளாதாரம், மக்கள் நிலை உள்ளிட்ட பல்வேறு துணைக் காரணிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வை நடத்தியிருக்கிறோம். அந்த வகையில் தமிழ்நாடு ஊழலில் முதலிடத்தில் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் மிக மிக பலவீனமாக இருக்கிறது தமிழ்நாடு” என்று குறிப்பிடுகிறார்.
தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 13 மாநிலங்களில் 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
பொது விநியோக முறை அதாவது ரேஷன் விநியோகம், மின்சாரம், சுகாதாரம், பள்ளிக் கல்வி, குடிநீர் விநியோகம், காவல் துறை செயல்பாடுகள், போக்குவரத்து உள்ளிட்ட 11 அரசுத் துறைகளின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
இந்தவகையில் அரசின் பொது சேவைத் துறைகளில் அதிக ஊழல் நடைபெறுவதாக மக்கள் தங்கள் அனுபவத்தில் இருந்து சொல்லியிருப்பதில் முக்கியமான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதனால்தான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் மிகவும் பலவீனமாக செயல்படும் மாநிலங்களாக தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகியவை இருக்கின்றன.
பொதுத் துறையில் ஊழல் எந்த அளவுக்கு இருக்கிறது எனத் தமிழக மக்களிடம் சர்வே எடுத்தபோது ஊழல் அதிகரித்திருக்கிறது என்று 53 சதவிகிதம் பேரும், அப்படியேதான் இருக்கிறது என்று 41 சதவிகிதம் பேரும், குறைந்திருக்கிறது என்று 6 சதவிகிதம் பேரும் சொல்லியிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை.
ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் குறிப்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்ட வழியிலான போராட்டங்களும் தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவே நடப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
போக்குவரத்து, காவல் துறை, பத்திரப் பதிவுத் துறை, சுகாதாரம் ஆகியவைதான் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக ஊழல் நடக்கும் துறைகளாக மக்களால் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த ஆய்வில் பொதுவாக ஏழு சதவிகிதம் பேர் தாங்கள் ஆதார் கார்டு வாங்குவதற்காக லஞ்சம் கொடுத்ததாகவும் மூன்று சதவிகிதம் பேர் வாக்காளர் அடையாள அட்டை வாங்க லஞ்சம் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.