ஏல சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செந்தண்ணீர்புரத்தில் பரபரப்பு

0 153

 

திருச்சி, செந்தண்ணீர்புரம் ஆனந்த பவன் தெருவில் வசித்து வருபவர் பத்மினி. இவரது மகன் சண்முகம் வெளிநாட்டில் வேலை செய்துவருகிறார். கடந்த 15 வருடத்திற்கு மேலாக தனது குடும்பத்தினருடன் இணைந்து ஏலசீட்டு நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி கடன்கொடுப்பது, பணபண்டு பிடிப்பது, கைமாத்துக்கு பணம் தருவது போன்ற வேலைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பத்மினி மற்றும் அவரது மருமகள் நித்யா ஆகிய இருவரும் செந்தண்ணீர்புர மக்களிடமிருந்து கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாதா மாதம் பணம் பெற்றுக்கொண்டு ஏல சீட்டு நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, ஏல சீட்டிற்கான ஒப்பந்தகாலம் முடிந்த நிலையில், 25க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிவிட்டு சுமார் 2 கோடி வரையில் பணத்தை கொடுக்காமல் பத்மினி தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில், பணத்தை கொடுத்து ஏமாந்த செந்தண்ணீர்புரத்தை சேர்ந்த மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்களது பணத்தை திரும்ப பெற்றுதரக்கோரியும், யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்ற பட்டியலையும் கொடுத்தனர்.

இது குறித்து சண்முகத்தின் மனைவி நித்யா தெரிவித்ததாவது, “எனது மாமியார் தான் எல்லா வரவு செலவுகளையும் பார்த்து வந்தார். தற்போது கட்டியுள்ள வீட்டிற்கு கூட லோன் போட்டும், பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடை வைத்து குடும்பம் நடத்தி வருகிறேன். நாங்கள் வெளியில் கடன் கொடுத்த பணம் திருப்பி வராத காரணத்தால், எங்களால் பணத்தை கொடுக்கமுடியவில்லை. பிரச்சனை அதிகமானவுடன் எனது மாமியார் எங்கோ சென்றுவிட்டார், அவருடைய மகளிடம் கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை“ என்றார்.

இது குறித்து பணம் கொடுத்து ஏமாந்த சரசு மற்றும் தண்டாயுதபாணி ஆகியோர் கூறியதாவது, “ நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தான் சீட்டு கட்டினோம். வாடகைவீட்டில் இருந்தவரை ஒழுங்காக தான் எல்லோருக்கும் பணத்தை திருப்பி கொடுத்து வந்தனர். 2 மாடி வீடு கட்டியதிலுருந்து தான் மாமியாரும், மருமகளும் சேர்ந்து கொண்டு எங்களை ஏமாற்றிவிட்டனர். இது குறித்து ஏற்கனவே பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.

அப்போது, மாதா மாதம் சரியாக காசை திருப்பி தருவதாக சொல்லி பத்மினி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஆனால் திடீரென்று இப்படி தலைமறைவாகிவிட்டார்” என்றனர்.
இதில் இன்னும் பல பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி மாநகர காவல் ஆணையருக்கு இந்த மனுவானது அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவேண்டும் என்பதே செந்தண்ணீர்புர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.