இலங்கையில் ஆடு – புலி ஆட்டம்

0 123

உலகில் மகரத்தீவு என்றழைக்கப்படுகின்ற இலங்கை பொருளாதாரத்தில் சிக்கித் தவிக்கும் வேளையில் அரசியலிலும் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கையின் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, நவம்பர் மாதம் 26 ஆம் நாள் இரவு 8.30 மணிக்கு யாருக்கும் தெரியாமல் காதோடு காதாக யார் தன்னைக் கொல்லச் சதி செய்திருந்தார் என்று யாரைக் குற்றம் சாட்டினாரோ அந்த மகிந்தா இராசபக்சாவைப் பிரதமராகச் சத்தியப் பிரமாணம் செய்து வைத்தார்!  மேலும் இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் அனுமதியின்றி நவம்பர் 16 வரை நாடாளுமன்றத்தைச் சிறிசேனா முடக்கி வைத்துள்ளார். இந்தச் செயலைப் பார்த்து உலகமே மிரண்டு போனது.

நாலு ஆண்டுகள் கழித்து இலங்கை ஜனாதிபதி சிறிசேனா தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இப்போது ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் இரணில் விக்கிரமசிங்கே மீது ஊழல் உட்படப் பல கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார்.

.மகிந்தா இராசபக்சாவை பிரதமராக  நியமனம் செய்தது  இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரணானது எனச் சட்ட வல்லுநர்கள் சொல்கிறார்கள். பிரதமர்  இரணில் விக்கிரமசிங்கேயை அரசியல் சாசன விதி 42 (4) இன் கீழ் பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதி எழுத்து மூலம் அறிவித்தார். ஆனால் அது அரசியல்சாசன விதிகளுக்கு முரணானது எனக் கூறி இரணில் விக்கிரமசிங்கே ஏற்க மறுத்து  வருகிறார்.

இலங்கை  அரசியல் சாசனத்தின்  உறுப்புரை   42(4)  என்ன சொல்கிறது?

42 (4) – ஜனாதிபதி அவரது கருத்தின்படி பாராளுமன்றத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் நம்பிக்கை பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளவராக இருக்கின்றாரோ அந்த உறுப்பினரைப் பிரதம அமைச்சராக நியமிக்க வேண்டும்.

ஜனாதிபதி மேற்கோள் காட்டிய இந்த விதி ஒரு பொதுத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர்  யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறையைச்  சொல்கிறது. அது ஏற்கனவே பிரதமராக இருக்கும் (sitting prime minister) இரணிலுக்குப் பொருந்தாது. எனவே ஒரு பிரதமரைப்  பதவி நீக்கம் செய்ய 19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு அதிகாரமில்லை.  இரணிலைப் பதவி நீக்கம் செய்ய  வேண்டும் என்றால்  விதி  46(2)  யை பின்பற்ற வேண்டும். அது என்ன சொல்கிறது?

46 (2)  பிரதம அமைச்சர்

(அ) ஜனாதிபதிக்கு முகவரியிட்டு அனுப்பும் தம் கைப்பட்ட கடிதத்தின் மூலம் அவரது பதவியைத் துறந்தாலொழிய, அல்லது

(ஆ) பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதொழிந்தாலொழிய,

அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளின் கீழ்  அமைச்சரவை தொடர்ந்தும்  பணியாற்றும் காலம் முழுவதும் அவர் தொடர்ந்து பதவி வகித்தல் வேண்டும்.

The Prime Minister shall continue to hold office throughout the period during which the Cabinet of Ministers continues to function under the provisions of the Constitution unless he –

(a) resigns his office by a writing under his hand addressed to the President; or

(b) ceases to be a Member of Parliament.

48 (2) பாராளுமன்றம், அரசாங்கக் கொள்கைக் கூற்றை அல்லது ஒதுக்கீடு சட்ட மூலத்தை  நிராகரித்தால் அல்லது அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நிறைவேற்றினால்  அமைச்சரவை கலைக்கப்பட்டாதல் வேண்டுமென்பதுடன், ஜனாதிபதி 70 ஆம் உறுப்புரையின் கீழ் தமது தத்துவங்களைப் பிரயோகிக்கையில் பாராளுமன்றத்தைக் கலைத்தாலொழிய, 42,43,44 மற்றும் 45 ஆம் உறுப்புரைகளின்  நியதிகளின்படி  பிரதம அமைச்சர் ஒருவரையும், அமைச்சரவையின் உறுப்பினர்களல்லாத  அமைச்சர்களையும்  பிரதி அமைச்சர்களையும் நியமித்தல் வேண்டும்.

However, the PM can be removed if  the Cabinet of Ministers is dissolved in terms of Article 48(2) pursuant to the Statement of Government Policy or the Appropriation Bill Being defeated in Parliament  or on the passing of  a No confidence motion against the government.

எனவே மகிந்த இராசபக்சா அவர்களைப்  பிரதம அமைச்சராக நியமித்தது இலங்கை அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் முரணானது. இதனை மேற்கு நாட்டுத் தூதுவர்கள், அமெரிக்க இராசாங்க திணைக்கள அதிகாரிகள், மற்றும் இந்தியா, ஜப்பான்,  அவுஸ்ரேலியா துாதுவர்கள் விடுத்த அறிக்கையில் இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு ஏற்ப  இலங்கை அரசு நடந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளன.

இதில் பிரித்தானிய அரசு ஒரு படி மேலே சென்று தொடர்ந்தும் இரணில் விக்ரமசிங்காவையே பிரதமராகக் கருதுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் மகிந்த இராசபக்ச  நேற்று அரசமுறைப்படி  பதவி ஏற்றுள்ள நிலையில் இரணிலைத்தான் பிரதமராகக் கருதுவதாகப் பிரித்தானியா அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பழமைவாதக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹியூகோ ஸ்வாயார் நாடாளுமன்றத்தில்  இலங்கை நிலைமை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் நடவடிக்கை 19ஆம் திருத்தச் சட்டத்திற்கு எதிர்மறையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்துலகச்  சமூகம் தொடர்ந்தும் இரணில் விக்ரமசிங்கவையே பிரதமராகக் கருதுகின்றது. துரிதக் கதியில் இலங்கையில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்குப் பதிலளித்த வெளிவிவகாரச் செயலாளர் ஜெர்மனி ஹன்ட், “பிரதமர் இரணிலின் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் பேசினேன்” எனத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் தற்போதைய நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவைத் தவிர வேறெந்த நாடும் பிரதமராகப் பதவியேற்ற மகிந்த இராசபக்சாவுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இன்றைய பூகோள அரசியலில்  எந்தவொரு நாடும் தனித் தீவாக இருக்க முடியாது. அனைத்துலக நெறிமுறைகள், சம்பிரதாயங்களை அனுசரித்தே ஒரு நாட்டின்  ஆட்சி இருக்க  வேண்டும்.

இன்றைய அரசியல் சிக்கலுக்கு ஜனாதிபதி சிறிசேனாவே முழு காரணமாகும். ஐக்கியத் தேசியக் கட்சி (ஐதேக) தமிழ்த் தேசியக் கூட்டணி(ததேகூ) முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல்  சிறிசேனா சனாதிபதியாக வந்திருக்க முடியாது. இரணில் விக்கிரமசிங்கேயைப் பதவி நீக்கியதற்குச் சொல்லப்படும் ஒரு காரணம் அவர் ஒரு ஊழல்வாதி என்பதாகும். அப்படியென்றால் மகிந்த இராசபக்சா கறை படியாத கைகளின்  சொந்தக்காரரா? என்ற கேள்வியும் எழுகிறது. ஜனாதிபதி சிறிசேனா அவர்களே மகிந்தாவின் ஆட்சி ஊழல் ஆட்சி என்று பல மேடைகளில் அண்மைக் காலம் வரை வசைபாடி வந்தவர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

நாடாளுமன்றத்தைச் சிறிசேனா நவம்பர் 16 வரை ஒத்தி போட்டதே ஆளும் கட்சியில் இருந்து உறுப்பினர்களை வளைத்துப் போடத்தான் என்பது எல்லோருக்கும் தெரியும். ஐதேக இல் இருந்து  வடிவேலு சுரேஷ் (இராசாங்க அமைச்சர் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு)   விசயதாச இராசபக்சா (கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சு) டினேஷ் கன்கொன்டா ஆகியோர் மகிந்திரா கட்சிக்குத் தாவியுள்ளனர்.. மேலும் இரண்டொருவர் தாவக்கூடும் என்ற செய்திகள் அடிபடுகின்றன..

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஆட்சியில் தொடர 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இன்றைய நிலையில் மகிந்த இராசபக்சா தரப்புக்கு 100 பேரும் ஐதேக க்கு 102 பேரும் ஆதரவாக இருக்கிறார்கள். வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் 15 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர் சம்பந்தன் அவர்களை மகிந்தா அழைத்து, ஆதரவு கோரியுள்ளார். யாருக்கு ஆதரவு என்பதை எங்கள் குழுதான் தீர்மானிக்கும் என்று சம்பந்தன் கூறியதன் உட்பொருள் மகிந்தாவுக்கு ஆதரவு இல்லை என்பதாகும். இதைப் புரிந்துகொண்ட மகிந்தா, சம்பந்தனிடம் எனக்கு ஆதரவு தரவில்லை என்றாலும் உங்களின் 15 பேர் கொண்ட குழு நம்பிக்கைகோரும் தீர்மானத்தில் நடுநிலை வகித்தால் போதும் என்று கூறியுள்ளார். யாரை ஆதரித்தாலும் கொள்கை அடிப்படையிலும் நிபந்தனைகள் அடிப்படையிலும்தான் இருக்கும் என்பதைச் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில் இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரியர் ஜனாதிபதி சிறிசேனாவின் இப்போதைய செயல்பாடுகள் அரசியல் சானத்திற்குட்பட்டதா? என்பதை இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரிடம் எழுத்துபூர்வமாகக் கேட்டுள்ளார். தலைமை வழக்கறிஞர் சிறிசேனாவின் அனைத்துச் செயல்பாடுகளும் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும் என்று சபாநாயகருக்கு விளக்க அறிக்கை அளித்துள்ளார். நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜெயசூரியரும் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுமாறு ஜனாதிபதி சிறிசேனாவிடம்  31.10.2018ஆம் நாள் கேட்டுள்ளார். சபாநாயகரின் வேண்டுகோள் பரிசீலிக்கப்படும் என்று ஜனாதிபதி மாளிகை வட்டாரச் செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில் 01.11.2018ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் பொறுப்பிலுள்ள மகிந்தா, உலக நாடுகளின் நெருக்கடிகளைத் தொடர்ந்தும் நாடாளுமன்றச் சபாநாயகர் வேண்டுகோளைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் நவம்பர் 16 வரை முடக்கப்பட்ட உத்தரவு இரத்து செய்யப்படுகின்றது. நவம்பர் 5ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் என்று ஜனாதிபதி சிறிசேனா அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 5ஆம் நாள் கூடும் நாடாளுமன்றத்தில் மகிந்தாவுக்குப் பிரதமர் இருக்கை வழங்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி சிறிசேனாவின் வேண்டுகோள் ஏற்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் முன்மொழிவினை மகிந்தா நாடாளுமன்றத்தில் முன்வைப்பார்.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரும் முன்மொழிவு ஒருவேளை தோற்றால் மகிந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும். இரணில் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்கும் நிலை ஏற்படும். “இரணில் பிரதமராகப் பொறுப்பேற்கும் நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி பதவியில் ஒரு நிமிடம்கூட நான் இருக்கமாட்டேன். பதவி விலகிவிடுவேன்” என்று சிறிசேனா 01.11.2018ஆம் நாள் நடைபெற்ற தன் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஆடு – புலி ஆட்டம் தொடங்கிவிட்டது. ஆடு புலியை வெல்லுமா? புலி ஆட்டைக் கொல்லுமா? நவம்பர் 5ஆம் நாள் முடிவு தெரிந்துவிடும்.

-ஆசைத்தம்பி.

Leave A Reply

Your email address will not be published.