கையில காசு… வயித்துல குழந்தை செயற்கைக் கருவூட்டல்; மகா சுருட்டல்…

0 138

செற்கைக் கருவூட்டல் சிகிச்சையில் நாட்டில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது தமிழகம். மற்ற மாநிலங்களை விட குறைவான கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் மையங்கள் பெருகி வருவதால் தொழில் கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கண்காணிப்பும் கட்டுப்பாடுகளும் இல்லாததால் இந்தத் துறையில் பயிற்சி இல்லாத மருத்துவர்களும் தரமற்ற சிகிச்சை முறைகளும் ஏமாற்று பேர்வழிகளும் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, என மாநகரங்களில் தற்போது இந்த மையங்கள் அதிகமாகி வருகிறது. சென்னையில் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையத்தை நடத்தி வந்த பெண் மருத்துவர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கப்பட்டார்.

இவர் மீதான கொலை முயற்சிக்கு தொழில் போட்டியே காரணம் என்று கூறிய காவல் துறையினர், இதே துறையில் சிகிச்சை மையம் நடத்தி வரும் மருத்துவரை கைது செய்துள்ளனர். செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை மையங்களை நடத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இந்த மையங்களுக்கான விதிமுறைகளை வகுத்திருந்தாலும் அங்கீகாரமற்ற மையங்கள் அதிகரித்திருப்பதே மேற்கண்ட தொழில் போட்டிக்கும் தரமற்ற சிகிச்சைக்கும் காரணம் என்கிறார்கள் இந்தத் துறையில் இருக்கும் மருத்துவர்கள்.
சிக்கல்களை மறைக்கும் மையங்கள்…

இதுகுறித்து இதே துறையில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத மருத்துவர்கள் சிலர் கூறும்போது, “செயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இன்று பெருமளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. Artificical reproductive technology (ART), In – Vitro fertilisation (IVF), Intra – Uterine injection (IUI) என்று இதில் சிகிச்சை முறைகள் இருக்கின்றன. குழந்தைப் பேறு இல்லாத தம்பதியினரிடம் ஆணின் விந்தணு மற்றும் பெண்ணின் கருமுட்டைகளை எடுத்து அதனை செயற்கைக் குழாயில் கருவூட்டல் செய்து அதனை பெண்ணில் கர்ப்பப் பைக்குள் செலுத்துவது அடிப்படையான சிகிச்சை முறை.

இந்தத் துறையில் ஏற்பட்டிருக்கும் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக தற்போது செயற்கைக் குழாய் அல்லாமல் நேரடியாகவே பெண்ணின் கருப்பைக்குள் ஆணின் விந்தணுக்களை செலுத்தி கருவூட்டல் செய்யும் முன்னேறிய IVF சிகிச்சை முறையே இன்று பரவலாக அளிக்கப்படுகிறது.

இதிலும் எதிர்மறை சுழற்சி மூலம் மாதவிடாயின் முதல் நாளிலிருந்து தொடங்கும் சைக்கிள் ஆன்டோகோனிஸ்டி என்ற சுழற்சிமுறை சிகிச்சையும் இருக்கிறது. மாதவிடாய் தொடங்கிய 22-ம் நாளிலிருந்து தொடங்கும் ஆன்டோகோனிஸ்டி சைக்கிள் எனப்படும் சிகிச்சையும் இருக்கிறது. இந்த வகையான சிகிச்சைகள் 5 வார காலத்துக்கு அளிக்கப்படுகிறது.

கருவை கருப்பைக்குள் மாற்றியப் பின்பு கருவுற்றிருப்பதை உறுதி செய்ய இரு வாரங்கள் காத்திருக்க வேண்டும். அவ்வாறு உறுதி செய்வதுடன் இந்த சிகிச்சை மையங்களின் பணி நிறைவடைகிறது. அதன் பின்பு கருவுற்றிருக்கும் பெண் வழக்கமான மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று குழந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதேசமயம் மேற்கண்ட சிகிச்சைகளின்போது குறிப்பிட்ட சதவீதம் பெண்களுக்கு ஓவுலேஷன் ஹைப்பர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் (OHSS) எனப்படும் ஹார்மோன் சமமின்மைக் காரணமாக அளவுக்கு அதிகமாக கருமுட்டை உற்பத்தியும் ஏற்படும். தவிர, IVF சிகிச்சை மூலம் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 சதவீதம் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு. பெண்களின் கருத்தரிப்பு 35 வயதிலிருந்து பெருமளவு குறைவதால் கரு முட்டைகளின் தரம் குறைதல், அடர்த்தி குறைவது இயல்பானதே.

அதேசமயம் ஆண்களின் வயது அதிகரிக்கும்போதும் விந்தணுக்களில் டி.என்.ஏ. சிதைவு, தரம் குறைவது, குறைபாடுள்ள உருவம், எண்ணிக்கை, அசைவு குறைந்துபோவது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல சிக்கல்களை சொல்லலாம். இவை எல்லாம் செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை முறையில் இருக்கும் பின்னடைவுகள்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக் கருவூட்டல் மையங்கள் சுமார் 800 மட்டுமே இருக்கின்றன.

ஆனால் 3,500 அங்கீகாரம் இல்லாத மையங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம். நடப்பாண்டில் இந்தத் தொழிலின் வளர்ச்சி விகிதம் 19 – 21 சதவீதமாகவும், ஒட்டுமொத்த கூட்டு வருடாந்திர வளர்ச்சி வீதம் ரூ. 2,500 கோடியாகவும் இருக்கிறது. இதிலிருந்தே இந்த தொழிலின் விஸ்வரூபத்தை புரிந்துகொள்ளலாம்.

 

சாதனையாளர் குழந்தை வேண்டுமா?

 

செயற்கைக் கருவூட்டலுக்காக சென்னையில் மட்டும் சுமார் 20 அங்கீகாரம் பெற்ற தரமான சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. ஆனால், அங்கீகாரம் இல்லாமல் சுமார் 50 மையங்கள் வரை செயல்படுவதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். மேற்கண்ட சிகிச்சைகளுக்கு ரூ.20,000 தொடங்கி ரூ.5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கிறார்கள். கருமுட்டை மற்றும் விந்தணு வங்கிகளில் கருமுட்டைகள் ரூ.30,000 முதல் 70,000 வரையிலும் விந்தணுக்கள் ரூ. 10,000 முதல் 70,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தரம் குறைந்த மற்றும் இறந்துபோன விந்தணுக்களை, கருமுட்டைகளை விற்பனை செய்வது போன்ற பிரச்சினைகள் இந்தத் துறையிலும் சகஜம்தான் என்றாலும் மருத்துவர் ஒருவர் சொல்லும் விஷயம் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

“இந்தத் துறையில் விந்தணுக்களையும் கருமுட்டைகளையும் வாங்கித் தரவும் விற்றுத் தரவும் ஏராளமான இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். ‘குழந்தை இல்லை’ என்று சில மருத்துவர்களிடம் தம்பதியர் வந்த சில நிமிடங்களுக்காக தம்பதியரின் விபரங்கள் இடைத் தரகர்களுக்குச் சென்றுவிடும். தம்பதியரை அணுகும் அவர்கள், ஏதோ பொம்மையை விற்பனை செய்வது போல ‘உங்களுக்கு எதுபோன்ற குழந்தை வேண்டும்? வெள்ளையாக அல்லது சிகப்பாக குழந்தை பிறப்பதற்கு பிரத்தியேகமான விந்தணுக்கள், கருமுட்டைகள் இருக்கின்றன. சிறந்த விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்களின் விந்தணுக்கள், கருமுட்டைகள்கூட எங்களிடம் கிடைக்கும். அவற்றை வைத்து குழந்தை பெற்றுகொண்டால் உங்களுக்கு அதே போன்ற சாதனையாளர் குழந்தை பிறக்கும்’ என்றெல்லாம் மூளைச் சலவை செய்கிறார்கள். இதை கேட்டு லட்சக்கணக்கான ரூபாயை இழந்த தம்பதியர்கள் எல்லாம்கூட இருக்கிறார்கள்” என்றார் அந்த மருத்துவர்.

 

குழந்தை பிறக்காவிட்டால் பணம் வாபஸ்; கவர்ச்சி விளம்பரங்கள்…

 

இவ்வாறு குழந்தை பெற்றுக் கொள்வதில் உள்ள பின்னடைவுகளை எல்லாம் மறைத்துவிட்டு, எங்களிடம் வந்தால் 100 சதவீதம் குழந்தைப்பேறு நிச்சயம் என்று அறிவிப்புகளை வெளியிட்டு பல சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்னும் பல சிகிச்சை மையங்களோ குழந்தைப் பேறு இல்லை எனில் பணம் வாபஸ் என்றெல்லாம் விளம்பரம் செய்து தொழில் போட்டியை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன. இவை எல்லாம் மருத்துவ சிகிச்சை என்கிற தார்மீக சேவை முறையை கேள்விக்குறியாக்குகின்றன.

இந்த சிகிச்சை என்றில்லை, மருத்துவத்தின் எந்தச் சிகிச்சையிலும் 100 சதவீதம் குணப்படுத்திவிடுவோம் அல்லது தீர்வு கண்டுவிடுவோம் என்று சொல்வது மருத்துவ தர்மம் அல்ல. நிரூபணமான அறிவியல் உண்மையும் கிடையாது. அப்படி இருக்கும்போது செயற்கைக் கருவுட்டல் மற்றும் குழந்தைப்பேறு 100 சதவீதம் நிச்சயப்படுத்த முடியாது. ஆனால்,இன்று தமிழகம் முழுவது பணத்தை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படும் இதுபோன்ற மையங்கள் அதிகரித்துவிட்டதால் தொழிலின் தரம் குறைந்துவிட்டது.

போலிகளும் அதிகரித்துவிட்டார்கள். தவிர, மருத்துவ பரிசோதனைக்கூடங்கள், மருந்து விற்பனையாளர்களுடன் மருத்துவர்கள் வணிக ரீதியான தொடர்பு வைத்திருப்பதிருப்பதுபோல இந்தத் துறை மருத்துவர்கள் இதே துறையிலிருக்கும் இடைத்தரகர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள். ” என்கிறார்கள்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட செயற்கைக் கருவூட்டல் மையங்கள் சுமார் 800 மட்டுமே இருக்கின்றன. ஆனால் 3,500 அங்கீகாரம் இல்லாத மையங்கள் இருப்பதாகத் தெரிவிக்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்.

கருமுட்டை மற்றும் விந்தணு வங்கிகளில் கருமுட்டைகள் ரூ.30,000 முதல் 70,000 வரையிலும் விந்தணுக்கள் ரூ. 10,000 முதல் 70,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. தரம் குறைந்த மற்றும் இறந்துபோன விந்தணுக்களை, கருமுட்டைகளை விற்பனை செய்வது போன்ற பிரச்சினைகள் இந்தத் துறையிலும் சகஜம்தான்.

Leave A Reply

Your email address will not be published.