குழந்தையின்மையின் மற்றுமொரு பரிணாமம்… கோடிகளை கொட்டும் வாடகைத் தாய்!

0 119

இதே துறையின் மற்றொரு பரிணாமம் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்வது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் வாடகைத் தாய் சட்ட மசோதா – 2016-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டாலும் பழைய நடைமுறைகள் எதுவும் மாறவில்லை என்கிறார்கள் அந்தத் துறையில் இருப்பவர்கள். ஆண், பெண் மலட்டுத் தன்மை சிக்கல்களைத் தாண்டி பெண்கள் பலருக்கு கர்ப்பப் பை புற்றுநோய், கர்ப்பப் பைக் கட்டி, கர்ப்பக் காலத்தில் தொடர் ரத்தப்போக்கு, தொடர் கருக்கலைப்பு, கர்ப்பப்பை நீக்கம் ஆகிய காரணங்களால் குழந்தை பெற முடியாமல் போகிறது. இவர்களுக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது வாடகைத் தாய் முறை.

குழந்தைப் பேறு இல்லாத தம்பதியரின் விந்தணு, கருமுட்டை இரண்டையும் எடுத்து, சோதனைக் குழாய் மூலம் கருவாக்கம் செய்து, அதனை வாடகைத் தாயின் கர்ப்பப் பைக்குள் செலுத்தி, குழந்தையை வளர்த்து பெற்றுக்கொடுப்பது வாடகைத் தாயின் பணி. இதற்காக பல லட்சங்கள் வரை வாடகைத் தாய்க்கு அளிப்பதாக கூறப்படுகிறது. சில ஆயிரங்கள் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களும் உண்டு. கோடிகள் புரளும் இந்தச் சந்தையிலும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 30,000 குழந்தைகள் பிறப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சர்வதேச அளவில் இந்தியா இதில் முதலிடத்தில் இருக்கிறது.
சுவிட்சர்லாந்து, கனடா, பின்லாந்து, ஸ்பெயின், இத்தாலி, சவூதி அரேபியா உள்ளிட்ட 26 நாடுகளில் வாடகைத் தாய் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 1993-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் முறை நடைமுறையில் இருந்தாலும் 2000-ம் ஆண்டுகளுக்கு பின்புதான் இந்த முறையில் ஏராளமான குழந்தைகளைப் பிறப்பித்தார்கள். வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பிறக்க ரூ. 80 லட்சம் வரை செலவாகும் நிலையில் இந்தியாவில் ரூ.8 லட்சம் வரை மட்டுமே இதற்காக செலவாகிறது.

இதனால், 2000-களின் தொடக்கத்தில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்து இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தைப் பெற்றுக்கொண்டார்கள். இதில் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. பெண்ணியவாதிகள் பலரும் இதற்கு எதிராக குரல் எழுப்பினார்கள்.
கடந்த 2002-ம் ஆண்டு ஜப்பானிய தம்பதியர் குஜராத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தைக்கு ஏற்பாடு செய்தனர். வாடகைத் தாயின் வயிற்றில் குழந்தை இருக்கும்போதே ஜப்பான் தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால், குழந்தையை யார் வளர்ப்பது என்கிற பிரச்சினை உருவாகி விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றது. இதன் பிறகுதான் முதன் முதலாக உச்ச நீதிமன்றம் வாடகைத் தாய் முறையில் சில வழிகாட்டுதல்களை உத்தரவிட்டது.

பின்பு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், ‘வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண், மூன்று முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும்; வாடகைத் தாய் ஏற்கெனவே இரு குழந்தைகளைப் பெற்றிருக்க வேண்டும்; குழந்தையில்லாத தம்பதியரிடம் பெறும் தொகை (குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம்) வாடகைத் தாய்க்கு அளிக்கப்பட வேண்டும்; வாடகைத் தாயின் கர்ப்பக் காலத்தில் மருத்துவ பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் ரூ.3,000 வழங்கப்பட வேண்டும்’ என்பது உட்பட சில வழிகாட்டுதல்களை வகுத்தது.

மேற்கை ஈர்க்கும் இந்தியக் குழந்தைகள்
எந்த வகையிலும் குழந்தை பிறப்புக்கு வழியில்லாத தம்பதியர் மட்டுமே வாடகைத் தாயின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான் வாடகைத் தாய் முறையின் அடிப்படை அம்சமே. ஆனால், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள காரணங்களாக மூத்த மருத்துவர் ஒருவர் சொல்லும் காரணங்கள் அதிர்ச்சியடைய வைக்கின்றன. “அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் தம்பதியர்களுக்கு இந்தியக் குழந்தைகளின் மீது ஈர்ப்பு அதிகம். ஆன்ம பலத்திலும் உடல் உறுதியிலும் இந்தியக் குழந்தைகள் அவர்கள் நாட்டுக் குழந்தைகளைவிட சிறப்பாக இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அதனால், இந்திய வாடகைத் தாய்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அதேசமயம் அவர்கள் நாட்டில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைவிட இங்கே 90 சதவீதம் செலவு குறைவு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நமது நாட்டிலேயே மேல் தட்டுப் பெண்கள் பலருக்கு குழந்தைகள் மீது விருப்பம் இருந்தாலும் சுயமாகக் குழந்தைப் பெற்றுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. கர்ப்பக் கால பராமரிப்பு, பிரசவ வலி, மார்பகங்கள் தொய்வு, பிரசவத்துக்கு பின்னர் உடல்ரீதியாக ஏற்படும் தொய்வு, அழகு குறைந்துபோதல் என்று பல்வேறு காரணங்கள் அவர்கள் தரப்பில் சொல்லப்படுகின்றன. இதனால் குழந்தை பெறும் தகுதி இருந்தும் வசதியான பெண்கள் பலர் வாடகைத்தாயை நாடுகிறார்கள்.

குழந்தை பெற தடை விதிக்கும் நிறுவனங்கள்
இவை தவிர்த்து, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இங்கே இருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள கடும் கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் இளம் பெண்கள் பணிக்கான நேர்முகத் தேர்வின்போதே, குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த நிபந்தனைகளை விதிக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டுகள் வரை அல்லது குறிப்பிட்ட திட்டப் பணிகள் நிறைவடையும் வரை குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும் எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொள்ளும் நிறுவனங்களும் இருக்கின்றன. குழந்தை பெற்றுக்கொண்டால் நிறுவனத்தின் பணிகள் பாதிப்பது, இரவுப் பணி பார்க்க இயலாதது ஆகியவை இதற்கான காரணங்களாகச் சொல்லப்பட்டாலும் இது சட்ட விரோதமான செயல்தான்…” என்கிறார் அவர்.

என்ன சொல்கிறது வாடகைத் தாய் மசோதா?

கடந்த 2012-ம் ஆண்டிலிருந்தே வாடகைத் தாய் மசோதா குறித்து விவாதிக்கப்பட்டாலும் 2016-ம் ஆண்டில்தான் இந்த மசோதா முழு வடிவம் பெற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் செய்யப்பட்டு, பழைய நடைமுறைகள் முற்றிலுமாகவே மாற்றப்பட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டினர் இந்தியப் பெண்களை வாடகைத் தாயாகப் பயன்படுத்தி குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. சட்டப்பூர்வமான இந்திய தம்பதியர் அதுவும் திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாதவர்கள் மட்டுமே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற முடியும். திருமணம் ஆன உறவு முறை பெண், அதுவும் ஒருமுறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும்.
ஏற்கெனவே குழந்தை இருப்பவர்கள், தனித்து வாழ்பவர்கள், திருமணம் செய்துக்கொள்ளாமலேயே சேர்ந்து வாழ்பவர்கள், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இது வியாபாரம் இல்லை; மருத்துவ சேவை என்பதால் வாடகைத் தாயாக இருப்பவர்களுக்கு தனிக் கட்டணம் எதுவும் கிடையாது. மாறாக மருத்துவ செலவுகள் மட்டுமே வழங்க வேண்டும். வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கும் இதர குழந்தைகளுக்கான அனைத்து சட்டப்பூர்வமான உரிமைகளும் உண்டு.

இந்தியாவில் இனி புதியதாக இதுதொடர்பான மருத்துவமனைகளுக்கு அனுமதி இல்லை. இந்த விஷயத்தில் விதிகளை மீறுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்’ என்கிறது புதிய சட்ட மசோதா.

பிரச்சினைக்குத் தீர்வு என்ன?

முதலில் தம்பதியர் உடனடியாக அல்லது குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் குழந்தை வேண்டும் என்கிற மனப்பாங்கை கைவிட வேண்டும். சில மாதங்கள் அல்லது ஓரிரு ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை என்றவுடனே அவர்களுக்கு குழந்தையே பிறக்காது என்று முடிவு செய்துகொள்ள வேண்டாம். மூத்த மகப்பேறு மருத்துவர்களின் ஆலோசனையின்படி உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் உடலுறவு குறித்த ஆலோசனை பெற்று குழந்தையைப் பெற முயற்சிக்க வேண்டும். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளின் முடிவுகளுக்கு பிறகு குழந்தையைப் பெற முடியாது என்று தெரிந்தால் மட்டுமே அங்கீகாரம் பெற்ற செயற்கைக் கருவூட்டல் மையங்களை நாடலாம்.

– தொடரும்

Leave A Reply

Your email address will not be published.