உண்மையில் பழ.கருப்பையா கேரக்டர் தான் நடிகர் விஜய் ஏன் ?

0 305

‘சர்கார்’ பார்த்தேன்!

திராவிடக்கட்சிகள் விஜய்யின் கட்-அவுட் பேனர்களை கிழிப்பதற்கு பதிலாக… படத்தை தயாரித்த சன்டிவி கலாநிதிமாறனுக்கு கட்-அவுட் பேனர்வைத்து பாராட்டுவிழாதான் நடத்தவேண்டும். காரணம், ரஜினி-கமல் அரசியல் என்ன? என்பது அவர்களது அறிக்கைகளாலேயே மக்களுக்கு தற்போது நன்றாக புரிந்துவிட்டது. அந்த வரிசையில் மிச்சம் இருந்தது விஜய்தான்.

விஜய்யின் அரசியல் பிர ‘வேஷம்’ எப்படிப்பட்டது என்று எதிர்பார்த்து குழம்பிப்போயிருந்த அவரது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் “ரஜினி-கமல்-விஜய் எல்லோருமே ஒரே மாதிரி ம்ஹூம் ‘ஒரு மாதிரி’யானவர்கள்தான்”என்பதை அம்பலப்படுத்திவிட்டார் கலாநிதிமாறன். ஆனால், இந்த விஷயம் கலாநிதிக்கே தெரியாது என்பதுதான் சர்க்காரின் செம்ம ட்விஸ்ட்

இதில், கார்ப்பரெட் கிரிமினல் கலாநிதிமாறன்தான். ரஜினி-கமல் போன்று விஜய்யும் ஒரு கார்ப்பரெட் அரசியல்வாதிதான் என்பதை விஜய்யின் ஒருவிரலை வைத்தே அவரது இரண்டு கண்களில் குத்தி ரெத்தக்களறியாக்கியுள்ளார். இதுதான், கலாநிதிமாறனின் உண்மையான ஒருவிரல் புரட்சி.

உண்மையைச்சொல்லவேண்டும் என்றால் படத்தில் வரும் பழ கருப்பையாதான் வருங்கால அரசியல்வாதி விஜய். அவர்கூட இருக்கும் நம்பர்-2 ராதாரவிதான் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இரண்டுபேரையும் பின்னால் இருந்து இயக்குவது; இயக்கியது பாப்பா(ன்) ஜெயமோகன்.

ஓப்பனிங்கிற்காக ஓப்பனிங் ஃபைட் ஓ.கே. ஆனால், மூளைக்கார சி.இ.ஓ. என்று சொல்லிக்கொண்டுவரும் விஜய் மூளையை பயன்படுத்தி டஃப் ஃபைட் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் ஏதோ, குழந்தைகள் வீடியோகேம் விளையாடுவதுபோல் யாரைப்பார்த்தாலும் அடித்து உதைத்து தூக்கி வீசுகிறார். ஆர்.எஸ்.எஸ் முருகதாஸ்கள், ‘எல்லையில் இராணுவவீர்கள்’ என்ற தேசபக்தி கொண்டவர்கள் என்பதால் இராணுவத்தினரை மட்டும்தான் விஜய் அடித்து உதைக்கவில்லை. சன் டிவி நெறியாளரின் சீட்டில் ஆரம்பித்து மீட்டிங்கில் முதல்வர் வேட்பாளர் பழ கருப்பையாவின் பக்கத்தில் உட்காருவது என சர்கஸ் காண்பிக்காத குறையாய் வலம் வருகிறார். நீதிபதி மட்டும்தான் ‘என் சீட்டுல உட்காருங்க’ன்னு சொல்லல.

எதிர்க்கவேண்டியதை எல்லாம் விட்டுவிட்டு ‘டெங்குவுக்கு காரணம் பொதுப்பணித்துறை’ என்ற விஜய்யின் வசனத்திற்கு மறுக்கவேண்டிய அவசியமே இல்லை. காரணம், டெங்கு வந்தபின் சிகிச்சை அளிப்பது வராமல் பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் சுகாதாரத்துறையின் வேலை. ஆனால், அரசுக்கட்டிடங்கள் அனைத்திலும் டெங்கு கொசுக்கள் அண்டாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு பொதுப் பணித்துறைக்குதான் உள்ளது. மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்க கால்வாய்கள் தூர்வாரப்பட்டு டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது உள்ளாட்சித்துறையின் வேலை.

‘என்கிட்ட கிணறு வெட்டுன ரசீது இருக்கு’ என்பதுபோல் 49-பி என்கிற ஒரேயொரு சட்டப்பிரிவை தூக்கிக்கொண்டு க்ளைமாக்ஸ்வரை பயணிக்கிறார். இது, மட்டும்தான் சர்கார் படத்தின் டாப்பு டக்கரு. மீதி எல்லாமே டூப்பு டக்கருதான்.

எவிடன்ஸ் கதிர் அண்ணா, முகிலன், திருமுருகன்காந்தி, சட்டப்பஞ்சாயத்து சிவ இளங்கோ அண்ட் செந்தில் ஆறுமுகம், அருள், அறப்போர் ஜெயராமன், மக்கள் அதிகாரம் கோவன் உள்ளிட்ட உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் மிஸ்ஸிங்.

அதுவும், வாக்காளர்கள் அடுத்தடுத்து வாட்ஸ்-அப், ஃபேஸ்புக், தொலைக்காட்சி ஊடகங்களில் வரும் செய்திகளையும் வீடியோக்களையும் பார்த்துவிட்டு ஓட்டுப்போடுவார்கள் என்று விஜய் சீரியஸாக நம்புவதுதான் படத்தில் காமெடியில்லாத குறையை தீர்க்கிறது.

அணுகுண்டாய் வெடிப்பார் என்று எதிர்பார்த்த பழ கருப்பய்யா கடைசிவரை பில்ட் அப் மட்டுமே கொடுத்துவிட்டு ஊசிப்போன ஊசிப்பட்டாசாய் புதைப்படுகிறார். செக்கண்ட் ஆஃபின் தொடக்கத்திலேயே வரவேண்டிய வரலட்சுமி க்ளைமாக்ஸில் புஸ்ஸென்று வந்து புஸ்வானமாய் மறைந்துவிடுகிறார்.

இலவசத்தை தூக்கி எறியும் முருகதாஸ் தேவையில்லாத இலவச இணைப்பாக கீர்த்தி சுரேஷை ரசிகர்களுக்கு கொடுத்தது நியாயமா?

தக்காளி சாஸ் கதையை விஜய் சொல்வதற்காகவே தக்காளி வீசப்படுகிறது. அவர், மீனவர் என்ற ஃப்ளாஷ்பேக்கை சொல்வதற்காகவே ‘சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறியா?’ என்ற கேள்வி வீசப்படுகிறது. ரியல் லைஃபில் நம் மக்கள் அப்படியா? யார் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தக்காளியை வீசி எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள்.

ஐ.ஐ.எம்மில் (இந்தியன் இன்ஸ்டிட்யூட்ஆஃப் மேனேஜ்மென்ட்) எம்.பி.ஏ. பட்டம் பெற்ற ஃபுட்கிங் சரத்பாபு என்ற இளைஞர்…புகழ் பெற்ற’பிட்ஸ்-பிலானியில்’ இன்ஜினீயரிங் பட்டமும் என பல பட்டங்களை வாங்கிய அந்த இளைஞர் தென்சென்னை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு இப்போது எங்கு இருக்கிறார் என்றுகூட பலருக்கும் தெரியாது. இதுதான், ரியல் லைஃப்.

காரில் செல்லும்போது வழிமறைக்கும் கூலிப்படையை சுந்தர்பிச்சை போன்ற கார்ப்பரெட் கைக்கூலியால் அடித்து உதைத்து வீசமுடியுமா? நம்பர்-2 வீட்டிற்கே சென்று ரவுடிகளை அடித்து வீசிவிட்டு உயிரோடு திரும்ப முடியுமா? அவ்வளவு, பெரிய லத்தி சார்ஜ் கலவரத்தில் போலீஸ் வேனில் போலீஸாரின் உடம்பில் கத்தியால் குத்திவிட்டு கேஷுவலாக வெளியில் வந்து பஞ்ச் டயலாக் பேசமுடியுமா? இது, எதுவுமே சாத்தியம் இல்லாதபோது இப்படத்தில் “விஜெய”மோகன்கள் பேசும் அரசியல் மட்டும் எப்படி சாத்தியமாகும்?

சும்மா ஒண்ணும் வர்ல… மெரிட்ல வந்தவன் என்ற விஜய்யின் வசனத்தின்மூலம் சமூகநிதி-இட ஒதுக்கீட்டுக்கு எதிரான தனது ட்ரேட்மார்க் முத்திரையை பதிக்கத் தவறவில்லை ஏ.ஆர். முருகதாஸ்.

திருட்டு கதையாக இருந்தாலும் ஏ.ஆர். முருகதாஸோட பிரசண்டேஷன் கொஞ்சம் நல்லாயிருக்கும். அதுவும் இதில் மிஸ்ஸிங். சக்திமான், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் போன்ற குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சினிமாக்களில் சர்கார்’மேன்’ இடம்பிடித்திருப்பதுதான் ஆறுதல்.

எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விஜய்யை பார்க்கத்தான் தியேட்டருக்குப் போனேன். ஆனால், எதிர்கால ‘கார்ப்பரெட் அரசியல்வாதி’ விஜய்யைத்தான் பார்க்க முடிந்தது.

– வினி சர்பனா

Leave A Reply

Your email address will not be published.