இராஜபக்சே படுதோல்வி இனி நடக்க போவது இது தான்..

0 304

நாடாளுமன்றத்தில் மகிந்த இராஜபக்சேக்குப் பெரும்பான்மை இல்லை – இனி இலங்கை அரசியலில் என்ன நடக்கும்? –

 

இலங்கை நாடாளுமன்றம் இன்று (14.11.2018) காலை 10 மணிக்குக் கூடியது. மகிந்தா அரசு மீது ஜனதா விரக்தி பெரமுனா கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதன் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில் மகிந்தாவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறவில்லை. தீர்மானம் வெற்றியடைந்ததாக இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார். இனி இலங்கை அரசியல் களம் எப்படி இயங்கும் என்பதை விவரிக்கிறது இக் கட்டுரை.

 

இலங்கையில் பிரதமராக இருந்து இரணில் விக்கிரமசிங்கேயிற்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கும் பல மாதங்களாகப் பனிப்போர் நடைபெற்றுவந்தது. இரணிலைப் பிரதமர் பொறுப்பிலிருந்து கடந்து 26.10.2018ஆம் நாள் நீக்கினார். அன்று இரவே சிறிசேனாவின் எதிரியாக விளங்கிய மகிந்த இராஜபக்சேயைப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. கடந்த 09.11.2018ஆம் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என்றும் வரும் 2019 ஜனவரி மாதம் 5ஆம் நாள் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். அதிபரின் இந்த அறிவிப்பு அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் விரோதமானது என்று 10.11.2018ஆம் இரணில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.. இரணிலைத் தொடர்ந்து மேலும் 16பேர் நாடாளுமன்றக் கலைப்பு தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தார்கள்.

 

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 13.11.2018ஆம் நாள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்காலத் தடை வித்தது. மேலும் இந்த வழக்கு டிசம்பர் 4,5,6 ஆகிய நாள்களில் நடைபெறும் என்று ஒத்திவைக்கப்பட்டது.
இடைக்காலத் தடை மக்களுக்குக் கிடைத்த வெற்றி என இரணில் கட்சியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். மகிந்தா கட்சியினர் இது இடைக்காலத் தடைதான். முழு வெற்றி அதிபருக்குத்தான் கிடைக்கும் என்றார்கள்.

இடைக்காலத் தடையைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு.ஜெயசூர்யா 14.11.2018ஆம் நாள் காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று அறிவித்திருந்தார். காலை 8.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தபடி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஜனதா விரக்தி பெரமுனா (JVP) கட்சியின் சார்பில் மகிந்தா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கொடுக்கப்பட்டது.

மகிந்தா கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்தில் எந்த நடவடிக்கையும் நடைபெறக்கூடாது. அவை கூடியதும் ஒத்திவைக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. நாடாளு மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர். பிரதமருக்குரிய இருக்கையில் மகிந்தா அமர்ந்திருந்தார். சபாநாயகர் கரு.ஜெயசூர்யா மகிந்தா அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக்கொண்டார். இதற்குச் சிறிசேனாவின் சுதந்திரக் கட்சியும், மகிந்தாவின் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனாவும் எதிர்ப்பு தெரிவித்தன. எதிர்ப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைக் கண்டிக்கும் விதமாக மகிந்தா நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறினார்.

 

தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கைகளை உயர்த்தச் சபாநாயகர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். தீர்மானத்திற்கு எதிர்ப்பாக 113 வாக்குகள் கிடைக்கவில்லை. பின்னர் மகிந்தா அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதாகச் சபாநாயகர் அறிவித்தார்.
மகிந்தா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து அதிபர் சிறிசேனா, “நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு 24 மணிநேரத்தில் தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், ரணிலுடன் தாம் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால், பிரதமர் பதவிக்கு ரணிலைத் தவிர்த்து வேறு ஒருவரைப் பரிந்துரைக்குமாறு அதிபர் சிறிசேன ஐக்கியத் தேசியக் கட்சியினருக்கு உறுதியளித்துள்ளதாக அதிபர் மாளிகை செயலகத்தின் அதிகாரி கூறியுள்ளார்.

 

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலை பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன், சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார். ரணில் தரப்பினால் ஜனாதிபதியின் பதவிக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியைச் சம்மந்தன் வழங்கியுள்ளார். இதற்கான இணக்கப்பாடு ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடன் எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐக்கியத் தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்காது, அவருக்குப் பதிலாகக் கட்சி்யின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாசாவை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கையை அதிபர் முன்வைத்துள்ளார்.

 

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, பிரதமராகச் சஜித பிரேமதாசாவைத் தெரிவு செய்ய இணக்கம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கியுள்ளார். சம்பந்தன் தென்னிலங்கையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தணித்து, இருதரப்பினருக்கும் இடையில் நட்புறவினை ஏற்படுத்தியுள்ளார். இதன்காரணமாக இனி வரும் நாட்களில் மைத்திரி – ரணில் இணைந்து அரசாங்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இருதரப்பினருக்கும் இடையிலான உடன்பாடுகளை எட்டுவதில் சில சர்வதேச நாடுகளும் ஈடுபட்டுள்ளதாகத் தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. என்றாலும் இலங்கையின் அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வர இன்னும் சில காலம் ஆகும் என்றே தோன்றுகின்றது.

 

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.