இரஞ்சித் பாதை வேறு என் பாதை வேறு-மாரிசெல்வராஜ் அதிரடி-சிறப்பு நேர்காணல்

0 157

பரியேறும் பெருமாள் படத்தின் 50வது நாள் வெற்றிவிழாவை கொண்டாடும் நிகழ்வாகவும், கண்டு கொள்ளப்படாத மக்களின் வாழ்வியலை படத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமையை போற்றும் விதமாகவும், பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குநர் மாரிசெல்வராஜ் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி திருச்சி புனித மரியன்னைப் பேராலயத்தில் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குநர் மாரிசெல்வராஜ் பதிலளித்தார்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிறகு “நம்ம திருச்சி” இதழுக்கு மாரிசெல்வராஜ் அளித்த சிறப்பு பேட்டி…

பரியேறும் பெருமாள் படத்தின் 50வது நாள் வெற்றிவிழா இந்த தருணம் எப்படி உள்ளது?

பரியேறும் பெருமாள் படத்தை எடுக்க முடியுமா? திரைக்கு கொண்டு வர முடியுமா? என்ற கேள்விகளுடனே எடுக்கப்பட்ட படம். ஆனால், இப்படத்தின் கதையை நம்பி ரஞ்சித் அண்ணண் படத்தை எடுத்தார். இந்த படத்தின் நோக்கம் என்ன என்பது அவருக்கு தெரியும். இந்த படத்தை 10 பேர் பார்த்தால் கூட, எப்படி அவர்கள் பேசுவார்கள், இதை அவர்கள் எந்த இடத்திற்கு கொண்டு செல்வார்கள் என தெரிந்து வைத்திருந்தார். அந்த நம்பிக்கையிலேயே இந்த படத்தை திரையரங்கிற்கு கொண்டு வந்தோம். படத்தை எடுத்தும் பல்வேறு யோசனைகளிலேயே யாரிடமும் காட்டாமல் வைத்திருந்தோம். ஆனால், முதல் நாள் இந்த படத்தை பார்த்த மக்கள் இந்த படத்தைப்பற்றி சத்தமாக பேசினார்கள்.

 

அதன் பிறகு நாங்கள் எதிர்பார்த்தைக்காட்டிலும் இந்த படத்தை மக்கள் கொண்டாடினார்கள். பரியேறும் பெருமாள் படத்தை 50 நாள்கள் கடந்தும் திரையரங்குகள் மக்கள் ஓடச்செய்கிறார்கள். அதற்காக மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். நேர்மையாக ஒரு படைப்பை நாம் எடுக்கிறோம் என்றால், அதன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு பரியேறும் பெருமாள் ஒரு நிதர்சனமான உண்மை.

50வது நாள் வெற்றியை திருச்சியில் கொண்டாடுவதை எப்படி உணர்கிறீர்கள்?

இந்த கலந்துரையாடலுக்கான தேதிகளை நான் முன்பே கொடுத்துவிட்டேன். அப்போது இது 50வது நாள் என்பது எனக்கு தெரியாது. பின்பு, 50வது நாளை மக்களுடன் கொண்டாடுவது என்று முடிவு செய்து தான் இங்கு வந்தேன். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் 50வது நாளை கொண்டாடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கான காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

அடிப்படையில் சினிமா என்பது கலையின் வழியாக மக்களை சந்திப்பது. அது, மக்களின் வாழ்க்கையுடன் சம்மந்தப்பட்ட, அவர்களின் நீதியுடன் சம்மந்தப்பட்டதாக இருக்கவேண்டும். அவர்களின் கனவோடு ஒன்றிச்செல்வதாக இருக்கவேண்டும். அதனால் தான் பரியேறும் பெருமாள் படத்தை மக்கள் கொண்டாடுகிறார்கள். இதுவரையில் தமிழ் சினிமாவில் யாரோ சொன்னதை நம்பி படம் எடுத்தனர். ஆனால், இனி தமிழ் சினிமாவில் வரக்கூடிய படங்களின் கண்ணோட்டம் வேற மாதிரியானதாக இருக்கும். நிறைய இளைஞர்கள் உலகத்தை தெரிந்து கொண்டுள்ளனர். தங்களின் படங்களுக்கான கதைகளை மக்களிடம் இருந்து தேடி அழைந்து எடுப்பார்கள்.

கூட்டத்தின் வாயிலாக தங்களுடைய கருத்துகளை இயக்குநர் ரஞ்சித் கூறுகிறார், நீங்களோ தனிமனித உணர்வின் மூலம் கூறுகிறீர்கள், இருவரின் சித்தாந்தமும் மாறுபட்டது போல் தோன்றுகிறதே?

இரண்டும் வேறு என்று எனக்கு தோன்றவில்லை. பரியேறும் பெருமாள் ஒரு அப்பாவி (innocent). திடீரென இந்த சமூகத்தில் உள்ள சிக்கலுக்குள் மாட்டிக்கொள்கிறான். அது அவனை என்ன செய்கிறது. என்பதே இந்த படம். ரஞ்சித் அண்ணே தலைவன், மக்கள் கூட்டம் என சொல்கிறார்.

தலைவனின் தேவை இங்கு உள்ளது. அந்த தலைவன் எப்படிப்பட்டவனாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார். இந்த சமூகத்திற்கு அப்பாவி(innocent)களும் தேவை, தலைவர்களும் தேவை. ஒரு சம்பவத்தையும் இங்கு சொல்லவேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான, தீர்வையும் சொல்லவேண்டிய தேவையும் உள்ளது. இருவரின் சித்தாந்தமும் ஒன்றுதான் பாதைதான் வேறு. இல்லை என்றால் அவர் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டார். அவர் கொஞ்சம் சத்தமாக பேசுகிறார். நான் மென்மையாக பேசுகிறேன் அவ்வளவே

.
பரியேறும் பெருமாள் கதை எழுதும் போது எந்த இடத்திலாவது ஆவணப்படமாக மாறிவிடுமோ என்று நினைத்தீர்களா?

ஒரு கதையை உருவாக்கினாலே அவ்வாறு மாறும். நிஜமான வாழ்க்கையில் உள்ள பாசம், சோகம், காதல் என அனைத்து உணர்வுகளையும் கொண்டு எழுதப்பட்ட படம் பரியேறும் பெருமாள். இது ஒரு வாழ்க்கையை சொல்லும் படம்.
அடுத்தடுத்து எந்த மாதிரியான படங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்?
எல்லா விதமான படங்களும் எடுக்கவேண்டும் என்பதே என்னுடைய ஆசை. அதில் மக்களை பின்னோக்கி இழுத்துச்செல்லாமல் அல்லது பழைய கற்பித்தலை காட்டி மக்களை ஏமாற்றி விடும் படமாகவோ இருக்காது. எந்த படம் எடுத்தாலும் முற்போக்கு பேசக்கூடிய, சமத்துவத்தை உணர்த்தக்கூடிய, மக்களின் ரசனையைக்கெடுத்துவிடாத படத்தை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

தற்போதைய சூழ்நிலையில் சாதியை ஒழிக்க அரசியல் கட்சிகள் தேவை என்று நினைக்கிறீர்களா?

ஒரு சம்பவம் நடைபெற்றால் அதை அம்பலப்படுத்த, வெளிக்கொண்டுவர கட்சிகளும், இயக்கங்களும் இங்கு தேவை. ஆனால், சாதியை ஒழிப்பதற்கு தனிமனித உளவியல் முக்கியம். தனிமனிதன் வாழ்வில் எதை படிக்கிறான், எதை நம்புகிறான் என்பது அவசியமாகிறது.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதா?

கடவுள் நம்பிக்கை எனக்கு கிடையாது.

Leave A Reply

Your email address will not be published.