இலங்கை : இரணில் மீண்டும் பிரதமர் குழப்பம் முடிவுக்கு வரவில்லை

0 91

கடந்த அக்டோபர் 26-ம் தேதி இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை நீக்கிய அதிபர் மைத்ரிபால சிறிசேனா, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் முதலில் நாடாளுமன்றத்தை முடக்கினார்.
மஹிந்த ராஜபக்சே இருமுறை இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மைக்கான 113 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறமுடியவில்லை. அதிபர் சிறிசேனா மஹிந்த ராஜபக்சேக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்களை ஏற்க மறுத்தார். “நான் நியமித்துள்ள பிரதமர் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய தேவையில்லை” என்று சிறிசேனா கூறினார். சில நாட்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தைக் கலைத்து 2019, ஜனவரி 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நாடாளுமன்றக் கலைப்புக்குத் தடைவிதித்தது. இதன்பின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப் பில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே தோல்வியைத் தழுவினார். ஆனால், இந்த வாக்கெடுப்பை அதிபர் சிறிசேனா ஏற்கவில்லை.
இதனிடையே பிரதமர் மஹிந்த ராஜபக்சேக்கு எதிராக ரணில் உள்ளிட்ட 122 எம்.பி.க்கள் கொழும்பு மேல்முறை யீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கைக் கடந்த 3-ம் தேதி விசாரித்த நீதிமன்றம், ராஜபக்சே பிரதமராகச் செயல்படத் தடை விதித்தது.

இதைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சே 15.12.2018ஆம் நாள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, மீண்டும் இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே 16.12.2018ஆம் நாள் பதவி ஏற்றுக்கொண்டார்.
அதிபர் அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அதிபர் சிறிசேனா, விக்ரமசிங்கேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் இலங்கையில் நடைபெற்றுவந்த 50 நாள் அரசியல் குழப்பம் முடிவு வந்துவிட்டது என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது உண்மையா என்றால் உண்மையில்லை. குழப்பம் தற்காலிகமாகவே முடிந்துள்ளது. தொடரும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

இலங்கை உச்சநீதிமன்றம் கடந்த சில நாள்களுக்கு முன்பு, அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தது அரசியல் சாசனத்திற்கு முற்றிலும் எதிரானது என்றும் கலைத்தது செல்லாது என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தின் நிலை பழைய நிலைக்கே திரும்புகிறது. அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்தது செல்லாது என்றால் இரணிலைப் பிரதமர் பொறுப்பிலிருந்து நீக்கியதும், மஹிந்த ராஜபக்சேயைப் பிரதமர் பொறுப்பில் நியமித்ததும் செல்லாது என்றே பொருள்படும்.

இதனால்தான் தனக்குப் பிடிக்காதவர் என்றும் அவர் பிரதமராகப் பொறுப்பேற்றால் ஒரு நிமிடம்கூட அதிபர் பொறுப்பில் நீடிக்கமாட்டேன் என்று வாய்ச்சவடால் பேசிய சிறிசேனா மகிந்த இராசபக்சேவை பதவி விலகச் சொல்லிப், பின் கூனி குறுகியே இரணிலுக்குப் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணச் சூழ்நிலை பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன், சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி கண்டுள்ளார்.

ரணில் தரப்பினால் ஜனாதிபதியின் பதவிக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாது என்ற உறுதிமொழியைச் சம்மந்தன் வழங்கியுள்ளார். இதற்கான இணக்கப்பாடு ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவுடன் எட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் ஐக்கியத் தேசியக் கட்சி பெரும்பான்மையை நிரூபித்தால் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்காது, அவருக்குப் பதிலாகக் கட்சி்யின் துணைத்தலைவர் சஜித் பிரேமதாசாவை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கையை அதிபர் முன்வைத்துள்ளார்.இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ரணில் விக்ரமசிங்கே, பிரதமராகச் சஜித் பிரேமதாசாவைத் தெரிவு செய்ய இணக்கம் வெளியிட்டுள்ளார். அதேவேளை ஜனாதிபதியைப் பதவியில் இருந்து வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியையும் வழங்கியுள்ளார். இரா. சம்பந்தன் இலங்கையில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையைத் தணித்து, இருதரப்பினருக்கும் இடையில் நட்புறவினை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்காரணமாக இனி வரும் நாட்களில் மைத்திரி – ரணில் இணைந்து அரசாங்கத்தைக் கொண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நவம்பர் 14ஆம் நாள் நடைபெற்ற சமரச முயற்சிகளைப் பார்க்கும்போது ரணிலுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலே என்பது தெளிவாகின்றது. அப்படியானால் குழப்பம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் குழப்பம் அரங்கேறும் வாய்ப்புகள் இலங்கையில் அதிகம் உள்ளன என்பதே தற்போதைய நிலவரம்.

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.