உறுப்பு சந்தையான தமிழகம்

0 134

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் வருவதற்கு முன்னால், தனியார் மருத்துவமனைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.  எம்ஜிஆர் தங்கி சிகிச்சை பெற்ற காரணத்தினால் அப்போல்லோ மருத்துவமனை பிரபலமாக இருந்தது.  தொண்ணூறுகளின் தொடக்கத்தில் என்று நினைக்கிறேன்.  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரருக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதில், வலது காலில் செய்து விட்டார்கள்.   நுகர்வோர் தீர்ப்பாயத்தில் அவருக்கு ஒரு பெருந்தொகை வழங்கப்பட்டது.   அந்த செய்தியை வெளியிட்ட ஆங்கில செய்தித் தாள்களை மொத்தமாக வாங்கி வந்த அப்போல்லோ நிர்வாகம், அப்போல்லோ மருத்துவமனையின் பின்பு கொட்டி எரித்த செய்தியும் மறுநாள் வெளி வந்தது.

எண்பதுகளின் இறுதி வரை, தமிழகத்தில் கோவை பிஎஸ்ஜி மற்றும் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிகளைத் தவிர தனியார் மருத்துவக் கல்லூரிகள் கிடையாது.  சம்பல் ராணி ஜெயலலிதா 1991ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான், புற்றீசல் போல தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருகத் தொடங்கின.  சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கல்வித் தந்தைகள் ஆனார்கள்.

கேப்பிட்டேஷன் தொகை பல லட்சங்களில் புரண்டது.  செல்வந்தர்கள், ஊழல் பேர்வழிகள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள் தங்கள் பிள்ளை மக்குப் பிள்ளையாக இருந்தாலும் அவனை அல்லது அவளை மருத்துவராக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர்.  இந்த மருத்துவக் கல்லூரிகள் எல்லாம், ஒரு பல்கலைக்கழகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் அல்லவா ? அப்படி எதற்காக ஒரு பல்கலைக்கழகத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்று அவர்களே நிகர்நிலைப் பல்கலைகழகங்கள் ஆனார்கள்.

ஆட்சி மாறி திமுக ஆட்சிக்கு வந்ததும் சாராய ஆலை அதிபர் ஜெகதரட்சகனெல்லாம் கல்வித் தந்தை ஆனார்.  மகனுக்கு ஒன்று, மகளுக்கு ஒன்று என்று இரண்டு மருத்துவக் கல்லூரிகளை தொடங்கினார்.

மிகப் பெரும் பண உற்பத்தி செய்யும் ஆலைகளாக இந்த மருத்துவக் கல்லூரிகள் மாறின.   இந்தக் கல்லூரிகள் மருத்துவத்தை மட்டும் வியாபாரமாக்கவில்லை.  கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வேலையையும் இக்கல்லூரிகள் செய்து வந்தன. தேர்தல் செலவுக்காக தேவைப்படும் பணத்தை அரசியல் கட்சிகள் இக்கல்லூரி அதிபர்களிடம் வசூல் செய்தன.  இதன் காரணமாகத்தான்,  கல்வித் தந்தைகளை, அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே, தேர்தலில் நிற்க வைத்து அமைச்சர்களாக்கி அழகு பார்த்தன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், உரிய மதிப்பெண்கள் எடுத்து, நுழைவுத் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற ஏழை மாணவர்கள், அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாகவும், பின்னர் மருத்துவர்களாகவும் சேர்ந்தார்கள்.    செல்வத்தில் கொழித்து, வறுமை என்றால் என்னவென்றே அறியாத இளைஞர்கள் மருத்துவரானால் எப்படி அரசு மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு வைத்தியம் பார்ப்பார்கள் ?

அவர்களின் செல்வச் செழிப்புள்ள பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகவே தனியார் மருத்துவமனைகளை தொடங்கினார்கள்.

1991 தாராளமய பொருளாதாரத்துக்கு பிறகு, எல்லாமே வணிகமயமானதைப் போல மருத்துவத் துறையும் வணிகமயமானது.  நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார வசதி உயர உயர, இந்த தனியார் மருத்துவமனைகள் பெருகின.   கார்ப்பரேட்டுகளும், இதில் உள்ள பெரும் பணத்தை கருத்தில் கொண்டு, சகட்டு மேனிக்கு மருத்துவமனைகளை தொடங்கின.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில், காப்பீட்டில் (Insurance) தனியார் நிறுவனங்கள் பெருகின.  பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள நிறுவனங்களோடு கைகோர்த்து, வாகன காப்பீடு, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று அனைத்து பிரிவுகளிலும் களமிறங்கின.   காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளோடு கைகோர்த்து கொள்ளையடிக்கத் தொடங்கின.

2006ல், கலைஞர் அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கொண்டு வந்தார்.  அரசு மருத்துவமனைகளை விரிவாக்கி, மேலும் பல அரசு மருத்துவமனைகளை தொடங்கி சுகாதாரத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு பதிலாக, அறுபதுகள் முதல் திமுகவோடு நெருக்கமான தொடர்பில் உள்ள ஸ்டார் குழுமத்துக்கு மருத்துவக் காப்பீட்டுக்கான ஒப்பந்தத்தை  வழங்கினார்.  அப்போது முதல் இந்த கொள்ளை விண்ணைத் தொட்டது.  சாதாரணமான சிகிச்சைக்கு காப்பீட்டு நிறுவனங்கள் பணம் தராது.  உள்நோயாளியாக சிகிச்சை பெற்றால் மட்டுமே பணம் கிடைக்கும் என்ற காரணத்தால், சாதாரண நோய்களுக்குக் கூட, உள்நோயாளியாக அனுமதிக்கும் பழக்கம் பல தனியார் மருத்துவமனைகளில் தொடங்கியது.   ரத்த பரிசோதனை முதல், ஸ்கேன் வரை, எல்லா பரிசோதனைகளையும் செய்வது.   சில பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்வது, தேவையே இல்லாவிட்டால் கூட அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்வது என்று பல வகைகளில் கொள்ளையடிக்கத் தொடங்கினர்.

இந்த காலகட்டத்தில், சென்னையில் பல பிரம்மாண்டமான தனியார் மருத்துவமனைகள் உருவாகின.   இந்த மிகப் பெரிய மருத்துவமனைகளுக்கு மருத்துவர் ஊதியம், இதர பணியாளர்களின் ஊதியம், மின் கட்டணம் போன்றவை மட்டுமே ஒரு நாளைக்கு பல லட்சம் வரும்.  உதாரணத்துக்கு ஒரு பெரிய மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 40 லட்சம் செலவு என்றால், அந்த 40 லட்சம் அன்று அனுமதிக்கப்பட்டுள்ள அல்லது வெளிநோயாளிகளிடமிருந்து வசூல் செய்தே ஆக வேண்டும். அதற்காக, தேவையற்ற பரிசோதனைகள், அறுவை சிகிச்சைகள் என்று எந்த எல்லைக்கும் மருத்துவமனை நிர்வாகம் செல்லும்.

தொண்ணூறுகளிலேயே தொடங்கினாலும், 2000ம் ஆண்டுக்கு பிறகு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன.  தமிழக மருத்துவர்கள், மிக மிக சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த செய்தி சர்வதேச அளவில் பரவத் தொடங்கியதும், தமிழகம் மருத்துவ சுற்றுலாவுக்கான (Medical Tourism) பெரும் தலமாக உருவாகியது  உலகின் பல நாடுகளில் இருந்து, இணையம் மூலமாக மருத்துவர்களிடம் கலந்தாலோசனை செய்த பிறகு நோயாளிகள் சென்னை வரத் தொடங்கினார்கள்.  வெளிநாட்டு நோயாளிகள் செலுத்தும் பணம் அந்நியச் செலாவணியில் இருப்பதால், மருத்துவமனைகள், அவர்களை ஆவலோடு வரவேற்றன.

1994ம் ஆண்டு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சட்டம் உருவாக்கப்பட்டது.  அது உருவானாலும், பெயரளவிலேயே இருந்தது. இதன் காரணமாக. ஏழை மக்களை ஏமாற்றி. அவர்களுக்கு பணத்தை கொடுத்து. அவர்களிடமிருந்து. சிறுநீரகங்களை பெற்று, பணம் படைத்தவர்களுக்கு பொருத்தி கொள்ளை லாபம் பார்க்கும் செய்திகள் ஊடகங்களில் அடிக்கடி வெளியாகின.  இதன் காரணமாக, 2011ம் ஆண்டு பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.  இச்சட்டத்துக்கான விதிகள் 2014ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

இதன் அடிப்படையில் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென, டிசம்பர் 2014ல், ட்ரான்ஸ்டான் என்ற அமைப்பு உருவாகிறது. இந்த அமைப்பின் நோக்கம் உன்னதமானதே.  உதாரணமாக, தமிழகத்தில் நெல்லையில் ஒரு நோயாளி விபத்து காரணமாகவோ, அல்லது வேறு காரணமாகவே மூளைச்சாவு அடைவார்.  அவரது உறுப்புகளை தானமாக தர அவர் குடும்பத்தினர் தயாராக இருப்பர்.  சென்னையில் ஒரு மூலையில் ஒரு நோயாளி, ஒரு உறுப்புக்காக காத்திருப்பார்.  அவருக்கு நெல்லையில் ஒரு நோயாளி மூளைச்சாவு அடைந்திருப்பது தெரியாது.  இவர்கள் இருவரையும் இணைக்கும் வேலையைத்தான் ட்ரான்ஸ்டான் செய்து வந்தது.  மேலும், அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ, சகட்டுமேனிக்கு தங்கள் இஷ்டத்துக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்பதற்காகவும், இது உருவாக்கப்பட்டது.  ஒரு நோயாளிக்கு ஒரு உறுப்பு தானம் தேவைப்பட்டால், அவர் இந்த ட்ரான்ஸ்டான் அமைப்பில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் எந்த  மருத்துவமனையில் நோயாளி மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் செய்ய தயாராக இருந்தாலும், உடனடியாக ட்ரான்ஸ்டான் அமைப்பில் தெரியப்படுத்த வேண்டும்.  சீனியாரிட்டி மற்றும் தேவையின் அடிப்படையில், நோயாளி ட்ரான்ஸ்டான் கமிட்டி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நடைபெறும்.

கால தாமதத்தை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, இதற்கெனவே ஒரு வாட்ஸப் குழு தொடங்கப்பட்டு ட்ரான்ஸ்டான் அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது. நோயாளிகள் விபரம் உடனுக்குடன் இக்குழுவில் பகிரப்பட்டு, தாமதமின்றி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்படி எல்லாமே நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது.

18 மே 2018 அன்று, கேரளாவைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே விபத்தை சந்திக்கின்றனர்.  விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சில மணி நேரத்தில் சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்.  20 மே அன்று, மணிகண்டன் குடும்பத்தினருக்கு, மணிகண்டன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவிக்கப்ப்படுகிறது.  வென்ட்டிலேட்டரை விட்டு எடுத்து விட்டால், அவர் இறந்து விடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. நாங்கள் மகனை வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறோம் என்று அவர் பெற்றோர் தெரிவிக்கவும், இது வரை நடந்த சிகிச்சைக்கு 3 லட்ச ரூபாய் கட்டுங்கள் என்று கூறுகிறார்கள் மருத்துமனையில்.

இறந்து போன மணிகண்டன்.

மணிகண்டனின் பெற்றோர் தினக்கூலிகள்.  3 லட்ச ரூபாய்க்கு அவர்கள் எங்கே செல்வார்கள் ?  எங்களிடம் பணமில்லை என்று கூறியதும் மருத்துவமனை நிர்வாகம், கவலைப்படாதீர்கள்.  உங்கள் மகனின் உறுப்புக்களை தானம் செய்தால், பணம் கட்ட வேண்டியதில்லை என்றதும் அந்த ஏழை பெற்றோர் அது என்னவென்றே புரியாமல் ஒப்புக் கொள்கிறார்கள்.  மருத்துவமனை நிர்வாகம் அந்த பெற்றோர்களுக்கு கொடுத்தது இரண்டே இரண்டு வாய்ப்புகள். ஒன்று 3 லட்ச ரூபாயை கட்டி விட்டு உடலை பெற்றுச் செல்லுங்கள்.  இரண்டாவது உறுப்பு தானம்.  வேறு வழியில்லாத மணிகண்டனின் பெற்றோர், உறுப்பு தானத்துக்கான படிவங்களில் கையெழுத்து போட்டு சென்று விடுகிறார்கள்.

அந்த பெற்றோர்களுக்கு இதில் ஏதோ தவறு நடந்திருக்கிறது.  நாம் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது. அவர்கள், கேரள முதல்வர் பினரயி விஜயனிடம் முறையிட, அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதுகிறார். ஒரு மாநில முதல்வர் எழுதிய கடிதத்தை  நிராகரிக்க முடியுமா ?  விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

விசாரணை முழுமையாக முடிவதற்கு முன்னதாகவே, மருத்துவப் பணிகளின் இயக்குநர் இன்பசேகரன், சேலம் விநாயகா மருத்துவமனையின் மீது எந்தத்  தவறும் இல்லை என்று அறிக்கை அளிக்கிறார்.

விசாரணை முறையாக, தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி தொடங்குகிறது.  இவர்களின் கெட்ட நேரம், ஒரு நேர்மையான அதிகாரியிடம் அந்த விசாரணை அனுப்பப் படுகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்தான் மணிகண்டன் முதலில் அனுமதிக்கப்படுகிறார்.   முதலுதவி செய்த பிறகு, மேல் சிகிச்சை தேவைப்படுகிறது என்று  பரிந்துரைக்கப்படுகிறது.  மணிகண்டனின் மருத்துவக் குறிப்பில், வெறும் “மேல் சிகிச்சை”  என்ற குறிப்பு மட்டுமே இருக்கிறது.

அவருக்கு சிகிச்சை அளித்த தினேஷ் குமார் என்ற மருத்துவர், ஏன் தனியார் மருத்துவமனைக்கு மணிகண்டனை அனுப்பினீர்கள் என்று கேட்டதற்கு, நான் சேலம் அல்லது விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குதான் பரிந்துரைத்தேன் என்று கூறுகிறார்.  ஏன் அரசு ஆம்புலன்சில் நோயாளியை அனுப்பாமல் தனியார் ஆம்புலன்சில் அனுப்பினீர்கள் எனறு கேட்டதற்கு, நோயாளிகள் என்னை கேட்காமல் சென்று விட்டார்கள் என்று கூறுகிறார்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய ட்ரான்ஸ்டான் அமைப்பால் ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகள் மட்டுமே செய்ய முடியும்.  அப்படி ஒப்புதல் பெற்ற மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் என்று ஒரு மருத்துவர் இருப்பார்.  அவர்தான் சம்பந்தப்பட்ட நோயாளிகளிடம் பேசி, அதன் விபரங்களை எடுத்துக்க வேண்டும்.   மணிகண்டன் இறந்த அன்று, அம்மருத்துமனையில் உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் ஊரில் இல்லை.   அம்மருத்துமனையின் நிர்வாக அதிகாரி விஜயக்குமார் என்பவர்தான் பெற்றோர்களிடம் பேசி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்ள வைக்கிறார்.

பிப்ரவரி 2018 வரை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான செய்திகள் எஸ்எம்எஸ் மூலமாகத்தான் செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி முதல், வாட்ஸப் குழு உருவாக்கப்படுகிறது.

தமிழகம் முழுக்க உள்ள உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை ட்ரான்ஸ்டான் சார்பாக ஒருங்கிணைப்பதெற்கென்று, ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் மருத்துவர்கள் அல்ல. இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்தான் ஸ்ரீகுமார்.

மணிகண்டன் மூளைச்சாவு அடைந்த அன்று உள்ளபடி, இதய தானத்துக்காக ஓ க்ரூப் ரத்த வகையைச் சேர்ந்த 5 இந்திய நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். நுரையீரல் வேண்டி அதே ரத்த வகையை சேர்ந்த 2 இந்தியா நோயாளிகள் காத்திருப்பு பட்டியலில் இருந்தனர்.  ஆனால் இந்த நோயாளிகள் இருந்த மருத்துவமனையில் இருந்து உறுப்புகள் வேண்டாம் என்று வாட்ஸப் குழுவில் தெரிவிக்கப்படுகிறது.   இத்தகவலை தெரிவித்தது அந்தந்த மருத்துவமனைகளில் இருந்த உறுப்பு மாற்று ஒருங்கிணைப்பாளர்கள்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  செய்ய தகுதி பெற்ற மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு உறுப்பு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை அம்மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்தான் அந்த வாட்ஸப் குழுவில் சொல்ல வேண்டும்.  ஒருங்கிண்ப்பாளர் அல்ல. ட்ரான்ஸ்டான் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகுமார், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் அறுவை சிகிச்சை நிபுணர்களிடம் இது குறித்து கேட்டிருக்க வேண்டும்.  ஆனால் வசதியாக கேட்காமல், அந்த உறுப்பை வேறு நோயாளிகளுக்கு ஒதுக்குவதற்கான வேலையை தொடங்குகிறார்.

21 மே 2018 அன்று, இரவு 7.40 மணிக்கு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ட்ரான்ஸ்டான் செயலாளர் டாக்டர் பாலாஜியை அழைத்து, மணிகண்டனின் உடல் மோசமாகிக் கொண்டு வருகிறது. உடனடியாக உறுப்புகளை ஒதுக்குங்கள், ஏன் தாமதிக்கிறீர்கள் என்று சத்தம் போடுகிறார். உடனே டாக்டர் பாலாஜி, ட்ரான்ஸ்டான் ஒருங்கிணைப்பாளர் சந்தியாவை அழைத்து, சர்வதேச நோயாளிகள் யாராவது காத்திருப்பு பட்டியலில் இருந்தால், உடனடியாக ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கூறுகிறார்.  ஆனால் உண்மையில் மணிகண்டனின் விவகாரத்தை பாலாஜி இரண்டு நாட்களாக தொடர்ந்து கவனித்து வருகிறார்.  மருத்துவமனையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். மணிகண்டனின் உடல்நிலை மோசமான நிலையை எட்டியிருக்கவில்லை.

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் உள்ள உக்ரேனைச் சேர்ந்த நோயாளிக்கு மணிகண்டனின் இதயத்தையும், க்ளோபல் மருத்துவமனையில் இருந்த இஸ்ரேலைச் சேர்ந்த நோயாளிக்கு மணிகண்டனின் நுரையீரலையும் சந்தியா ஒதுக்குகிறார்.   இந்த தகவல் வாட்ஸப் குழுவில் பதிவு செய்யப்படுகிறது.  வேறு இந்திய நோயாளிகளுக்கு தேவை என்று யாரும் தெரிவிக்காத காரணத்தால் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.  ஆனால், காத்திருப்பு பட்டியலில் இருந்த இந்தியர்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள், வேண்டாம் என்று தெரிவிக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த ஒதுக்கீடுகள் அனைத்தும், வாட்ஸப் குழுவில் நடைபெறுவதால், ட்ரான்ஸ்டான் குழுவின் செயலராக இருந்த பாலாஜிக்கு இது அனைத்தும் தெரியும்.

ஒருங்கிணைப்பாளர் சந்தியா, மலர் மருத்துவமனையோடு தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, உக்ரைன் நோயாளிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இதயத்தை, லெபனான் தேசத்து நோயாளிக்கு மாற்றி ஒதுக்குகிறார்.  இது போல எந்த மாற்றங்களாக இருந்தாலும், இதற்கென உள்ள அந்த வாட்ஸப் குழுவில் பதிவு செய்ய வேண்டும்.  ஆனால் சந்தியா வாட்ஸப் குழுவில் இதை பதிவு செய்யாமல், மலர் மருத்துவமனையோடு தனிப்பட்ட முறையில் பேசி இம்மாற்றத்தை செய்கிறார்.

மணிகண்டனின் இரு சிறுநீரகங்களும் யாருக்கு ஒதுக்கப்பட்டன என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் டாக்டர் கேஆர்.பாலகிருஷ்ணன். அவர், 22 மே 2018 அன்று அதிகாலை, அப்துல் வஹாப் ஸாக்கி என்ற 36 வயது நோயாளிக்கு மணிகண்டனின் இதயத்தை பொருத்துகிறார்,

ஒரு இந்திய நோயாளிக்கு பொருத்த வேண்டிய இதயத்தை பொருத்தாமல் மோசடி செய்து, வெளிநாட்டு நோயாளிக்கு பொருத்திய மலர் மருத்துவமனையின் சதிச் செயல் மனதை பதை பதைக்க வைக்கும் ரகம்.

மணிகண்டனின் இதயம் மலர் மருத்துவமனையின் உக்ரேனிய நோயாளிக்கு ஒதுக்கப்பட்ட அன்று, அதே மலர் மருத்துவமனையில் சுஷ்மி அகர்வால் என்ற ஓ ரத்த வகையை சேர்ந்த நோயாளி இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்.  ட்ரான்ஸ்டான் வாட்ஸப் குழுவில் மணிகண்டனின் இதயம் தானமாக தரப்பட்டுள்ளது என்ற செய்தி பகிரப்பட்டபோது, மலர் மருத்துவமனை நிர்வாகம் சுஷ்மி அகர்வால் என்ற நோயாளி இருக்கும் விபரத்தை மறைத்தது.  அதற்கு மருத்துவமனை சொன்ன காரணம் என்னவென்றால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் அறுவை சிகிச்சை நிபுணர் ஊரில் இல்லை என்பதே.  அந்த மருத்துவர்தான் கேஆர்.பாலகிருஷ்ணன்.

கொல்கத்தா சென்ற டாக்டர் பாலகிருஷ்ணன் 21 மே 2018 அன்று இரவு 11.15 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.   இந்த விமான டிக்கெட்டுகள் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டிருந்தது.  பாலகிருஷ்ணனுக்கு 21 மே 2018 அன்று இரவு சென்னை வந்து விடுவோம் என்பதும் முன்னதாகவே தெரியும்.  ஆனால், இந்திய நோயாளி சுஷ்மி அகர்வாலுக்கு மணிகண்டனின் இதயத்தை பொருத்த வேண்டுமா என்பதற்கு ஊரில் இல்லை என்று நிராகரித்த அதே பாலகிருஷ்ணன், லெபனான் நோயாளிக்கு அதே இரவில் அறுவை சிகிச்சையை செய்துள்ளார்.

ஒரு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால், இரண்டு நோயாளிகளின் திசுக்களை Cross Match செய்து உறுப்பு பொருந்துமா என்று பார்ப்பார்கள்.

இந்திய நோயாளி சுஷ்மா அகர்வாலுக்கு இந்த Cross Match பரிசோதனை செய்யப்படவேயில்லை.  ஆனால் லெபனான் தேசத்து நோயாளிக்கு Cross Match சோதனை செய்யப்பட்டிருந்தது.  இவர்களின் உள்நோக்கம் இப்போது புரிகிறதா ?

இதை விட கொடுமை என்ன தெரியுமா ?  அறுவை சிகிச்சை செய்த மறுநாள், அந்த லெபனான் நோயாளி இறந்து போனார்.  இது குறித்து மருத்துவர்களிடம் பேசியபோது, மலர் மருத்துவமனை, லெபனான் நோயாளிக்கு மணிகண்டனின் இதயம் பொருந்தாது என்பதை தெரிந்தே இந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. லெபனான் தேசத்து மக்களின் உடல் வாகு ஆஜானுபாகாவாக இருக்கும்.  ஆறு அடி உயரம் இருப்பார்கள். உடல் வாகுக்கு ஏற்ப, அவர்களின் இதயமும் பெரிதாக இருக்கும்.  அந்த இதயம் பொருந்தாது என்பதை தெரிந்தே, மலர் மருத்துவமனை, பணத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு, இந்த அறுவை சிகிச்சையை செய்துள்ளனர் என்கின்றனர் மருத்துவர்கள்.

இதயம் முடிந்தது. க்ளோபல் மருத்துவமனைக்கு சென்ற, மணிகண்டனின் நுரையீரல் என்னவாயிற்று என்று பார்ப்போம்.

க்ளோபல் மருத்துவமனை இஸ்ரேலி நோயாளிக்காக மணிகண்டனின் நுரையீரலை கேட்டுப் பெற்ற 21 மே 2018 அன்று, அதே ரத்த வகையை சேர்ந்த 5 இந்தியர்கள் நுரையீரலுக்காக காத்திருப்பு பட்டியலில் இருந்தனர். இந்த இந்தியர்களுக்கு ஏன் மணிகண்டனின் நுரையீரலை கேட்டுப் பெறவில்லை என்று கேட்டதற்கு க்ளோபல் மருத்துவமனை சொன்ன காரணம், ஒரு நோயாளி நாள் நன்றாக இல்லை என்று சொல்லி விட்டார்.  ஒரு நோயாளியிடம் அறுவை சிகிச்சைக்கு பணமில்லை. ஒருவர் இறந்து விட்டார். ஒருவருக்கு திடீர் காய்ச்சல். ஒருவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அவசியமில்லை.

இந்த ஐந்து பேர் தவிர, மேலும் 3 இந்திய நோயாளிகள் க்ளோபல் மருத்துவமனையின் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். அவர்களுக்கு ஏன் பொருத்தவில்லை என்று கேட்டதற்கு, தானமாக வந்த நுரையீரல் தரமானதாக இல்லை என்பதால் அவர்களுக்கு தகவலே தெரிவிக்கவில்லை என்று பதில் கூறினார்கள். தரமில்லாத நுரையீரலை இந்திய நோயாளிகளுக்கு பொருத்தக் கூடாது என்றால் இஸ்ரேலி நோயாளிக்கு பொருத்தலாமா ? அயோக்கியத்தனமில்லையா இது ?

இந்த இஸ்ரேலிய நோயாளி எஸ்தர் ஸிசோ அறுவை சிகிச்சை செய்த ஏழாவது நாள் இறந்து போகிறார்.

இது மட்டுமல்ல தோழர்களே.  இது ஒரு பெருங்கடலின் சிறு துளி மட்டுமே.   மணிகண்டன் தொடர்பாக நடந்த விசாரணையில் மேலும் சில அதிர்ச்சிகள் வெளி வந்தன.

நவம்பர் 2016ல், கோவை ஒன்டிப்புதூரில் முத்து மருத்துவமனையில் இதை விட மோசமான விவகாரம் நடந்துள்ளது.  தமிழ் நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின்படி, ஒருவர் மூளைச்சாவு அடைந்தால், மூளைச்சாவு அடைந்தார் என்று சான்றளிப்பது, உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சைக்காக எடுப்பது போன்றவற்றை செய்ய, ட்ரான்ஸ்டான் அமைப்பில் பதிவு செய்து அங்கீகாரம் பெற வேண்டும். அப்படி அங்கீகாரம் பெறாத மருத்துவமனைகள் இதை செய்ய முடியாது.

முத்து மருத்துவமனையில் நவம்பர் 2016ல், உரிய அனுமதி இல்லாமலேயே மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளியின் இதயத்தை, ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்துள்ளார் ட்ரான்ஸ்டான் ஒருங்கிணைப்பாளர் சந்தியா.

18 மார்ச் 2018 அன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 17 வயது இளஞர் ஒருவர் மூளைச்சாவு அடைகிறார்.  க்ளோபல் மருத்துவமனை சர்வதேச நோயாளி ஒருவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் வேண்டும் என கேட்கிறது.

இந்த நாளில், ட்ரான்ஸ்டான் காத்திருப்போர் பட்டியலில் மதுரையைச் சேர்ந்த 2 நோயாளிகளும், சென்னையைச் சேர்ந்த 2 நோயாளிகளும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர்.

ட்ரான்ஸ்டான் வாட்ஸப் குழுவில் எந்த விபரத்தையும் பதியாமல், க்ளோபல் மருத்துவமனை உறுப்புகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தனிப்பட்ட முறையில் அனுமதி அளிக்கிறார் சந்தியா.   இதயம் நுரையீரல் அல்லாமல் சிறுநீரகம், லிவர் போன்ற பகுதிகளுக்கு தேவை இருக்கிறதா இல்லையா என்பது குறித்து எந்த விபரங்களையும் சேகரிக்காமல், க்ளோபல் மருத்துவமனைக்கு, உறுப்புகளை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு க்ளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அட்டாவர் என்பவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வந்தடைகிறார்.  அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, மூளைச்சாவு அடைந்த நோயாளியிடம் இதயத்தை எடுக்க நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

ட்ரான்ஸ்டான் செயலாளர் டாக்டர் பாலாஜி, வாட்ஸப் குழுவில் பதிவு செய்யாமல், யாரின் அனுமதியும் இல்லாமல், இந்தியா நோயாளிகள் உள்ளனரா என்று சரி பார்க்காமல், எப்படி இதை செய்கிறீர்கள் என்று டாக்டர் அட்டாவரிடம் கேட்கவும், அவர் சந்தியா அனுமதி அளித்தார் என்று கூறுகிறார்.

இந்த கட்டத்தில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டாக்டர் பாலாஜியை அழைத்து, டாக்டர் அட்டாவர் அறுவை சிகிச்சை அறைக்கு சென்று விட்டதாகவும், பிரச்சினை செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.  நான் உங்களை நேரில் சந்தித்து, இங்கே நடக்கும் குளறுபடிகளை தெரிவிக்கிறேன் என்று டாக்டர் பாலாஜி கூறியதற்கு, ராதாகிருஷ்ணன் செவி சாய்க்கவில்லை.

அந்த காவல் துறை அதிகாரி நடத்திய விசாரணையில் தெரிய வந்த ஒரு சில சம்பவங்கள் மட்டுமே இவை.

மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, இந்த முறைகேடுகளும் மோசடிகளும் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தனர்.  இந்த மோசடியில் முன்னணியில் இருப்பது விநாயகா மெடிக்கல் மிஷன், க்ளோபல் மருத்துவமனை, மற்றும் ஃபோர்ட்டிஸ் மலர் மருத்துவமனை.

தமிழகம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் இவர்களின் ப்ரோக்கர்கள் செயல்படுகின்றனர்.  விபத்தில் சிக்கி எந்த நோயாளி மூளைச்சாவு அடையும் நிலையை எட்டினாலும் உடனடியாக இந்த மருத்துவமனைகளுக்கு தகவல் தரப்படும்.  உடனே, அவர்கள் அந்த நோயாளிகளின் பெற்றோர்களை சந்திக்க ஒரு நபரை அனுப்புவார்கள்.  பணம் கொடுத்தோ, மிரட்டியோ, பெற்றோர்களை உறுப்பு தானம் செய்ய சம்மதிக்க வைத்து, உடனடியாக அந்த உறுப்புகளை விமானம் மூலமோ, சாலை மார்க்கமாகவோ சென்னை எடுத்து வந்து, ட்ரான்ஸ்டான் அமைப்பில் உள்ள, சந்தியா, ஸ்ரீகுமார் போன்றவர்களின் துணையோடு, வெளிநாட்டு நோயாளிகளுக்கு கொள்ளை லாபத்துக்கு பொருத்துகிறார்கள்.

மணிகண்டனின் இதயம் மற்றும் நுரையீரலை முறையே, லெபனான் மற்றும் இஸ்ரேலிய நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு, உறுப்புக்கு மட்டும் 50 லட்சம் இந்த மருத்துவமனைகள் பெற்றுள்ளன.   மருத்துவ சிகிச்சை மற்றும் இதர கட்டணங்கள் தனி.

இதில் கொடுமை என்னவென்றால், இவர்கள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த அத்தனை நோயாளிகளும், உடனடியாகவோ, ஒரு வாரம் கழித்தோ இறந்து விட்டனர்.  ஒரே ஒரு நோயாளி கூட பிழைக்கவில்லை.

மிக மிக தெளிவாக உறுப்பு மாற்று சட்டத்தில், இந்தியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு, அவர்கள் இல்லாவிட்டால்தான் வெளிநாட்டு நோயாளிகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற தெளிவான விதி இருந்தும், பணத்துக்காக, இந்திய நோயாளிகளை புறந்தள்ளி, இந்த அயோக்கியத்தனத்தை இந்த மருத்துவமனைகள் அரங்கேற்றி வருகின்றன.

இந்த மோசடியின் மையப் புள்ளியாக இருப்பவர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இதன் காரணமாகத்தான் இவர் கடந்த 7 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒரே பதவியிலேயே நீடிக்கிறார்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

ராதாகிருஷ்ணனா ?  அவர் நேர்மையான அதிகாரியாயிற்றே என்று உங்களுக்கு வியப்பு ஏற்படும்.  ஆனால் உண்மை இதுதான்.   இவரைத் தவிர, நாம் நேர்மையானவர்கள் என்று கருதும் வேறு சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

இந்த அதிகாரிகளெல்லாம் சேர்ந்து, அந்த காவல் துறை அதிகாரியை விசாரணை செய்ய வேண்டாம் என்று கெஞ்சியும், மிரட்டியும் பார்த்துள்ளார்கள்.  ஆனால் அவர், பிடிவாதமாக உண்மையை பதிவு செய்துள்ளார்.

ட்ரான்ஸ்டான் வட்டாரத்தில் விசாரித்தபோது, இது பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரிய மோசடி என்று தெரிவித்தனர்.   பல நேர்வுகளில், ஒரு மூளைச்சாவு நோயாளியின் உறுப்பு தானத்துக்கு ஏற்றதில்லை என்று மருத்துவர்கள் நிராகரித்தபோது கூட, அந்த உறுப்பை பெற்று, வெளிநாட்டு நோயாளிகளுக்கு பொருத்திய நேர்வுகள் உள்ளன என்று தெரிவிக்கின்றனர்.

அந்த காவல் துறை அதிகாரி, தனது விசாரணையை முடித்து, 14 ஜுலை 2018 அன்று தனது அறிக்கையை அளிக்கிறார்.  அந்த அறிக்கையில், ஒரு பெரும் மோசடி நடந்துள்ளது.   பூர்வாங்க விசாரணையில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 465 போர்ஜரி, 420 ஏமாற்றுதல், மற்றும் 120-B கூட்டுச் சதி மற்றும் Transplantation of Human Organs and Tissues Act, 1994 சட்டப் பிரிவு 18 (a) (b) (c)ன் கீழ் வழக்கு பதிவு செய்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்கிறார்.

இந்த அறிக்கை என்னவாயிற்று தெரியுமா ? காவல்துறை அதிகாரியின் இந்த அறிக்கையை பரிசீலனை செய்ய, ஒரு உயர்நிலைக் குழுவை அமைக்கலாம் என்று பரிந்துரை செய்யப்படுகிறது. இது நடந்தது 27 ஜுலை 2018.   அதன் பிறகு, இது மண்ணோடு மண்ணாக, இறந்துபோன  அந்த நோயாளிகளோடு புதைக்கப்பட்டு விட்டது என்றே தகவல்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் துணையோடு, இந்த மோசடி இன்றும் நடந்து வருகிறது என்பதுதான் வேதனை.

இந்த கட்டுரைக்காக அவர்கள் கருத்துக்களை கேட்பதற்காக, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் மற்றும், சுகாதாரத் துறை அமைச்சர் குட்கா விஜயபாஸ்கர் ஆகியோருக்கு வாட்ஸப்பில் அனுப்பிய செய்தியை பார்த்து விட்டு, பதில் சொல்லாமல் கமுக்கமாக இருந்தனர்.

ட்ரான்ஸ்டான் முன்னாள் செயலர் டாக்டர் பாலாஜியை தொடர்பு கொண்டபோது, தான் சொல்ல வேண்டியது அனைத்தையும் விசாரணையில் சொல்லி விட்டதால், இது பற்றி தான் மேற்கொண்டு எதுவும் கூற விரும்பவில்லை என்று கூறி விட்டார்.

லேசான நம்பிக்கை அளிக்கும் விதமாக, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், இந்த மோசடி குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அதில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உயர்நீதிமன்றம், இவ்வழக்கை மீண்டும் 11 ஜனவரி 2019 அன்று விசாரிக்க உள்ளது.

படிச்சவன் சூதும் வாதும் பண்ணா போவான் போவான் அய்யோன்னு போவான் என்றார் பாரதி.

போகவில்லையே !!!

 

நன்றி: சவுக்கு சங்கர்

https://www.savukkuonline.com/16334/

Leave A Reply

Your email address will not be published.