திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி-(திமுக)

0 63

அப்போது ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் திருக்குவளை. தற்போது நாகை மாவட்டம். அந்த கிராமத்தில் மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்தவர் கருணாநிதி. முத்துவேலர் – அஞ்சுகம் தம்பதியினர்க்கு மூன்றாவது குழந்தையாக 1924ஆம் ஆண்டு ஜூன்மாதம் 3ஆம் தேதி பிறந்தார். தமிழக அரசியலில், சமூகக் கண்ணோட்டத்தில் இனி வரும் காலங்களில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய ஒரு குழந்தை இங்கு பிறந்துள்ளது என்று அந்தக் கிராமத்து மண் கூட அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை.

((#)) ஆரம்பக் கல்வி திருக்குவளையில். அடுத்து திருவாரூரில். எட்டாம் வகுப்பு படித்தபோது முதல் மேடைப்பேச்சு. நட்பு எனும் தலைப்பில். அங்கு நண்பராக இணைந்த தென்னன் என்பவர், அவரது இறுதிக் காலம் வரை கருணாநிதியுடன் நட்பில் இருந்து வந்துள்ளார். திருவாரூர் கமலாலயத் தெப்பக்குளம் இருவராலும் மறக்க முயாது.

((#)) அப்போது பதின்மூன்று வயதிருக்கும் இருவருக்கும். கமலாலயத் தெப்பக்குளம் சற்று பெரியது. இந்தக் கரையில் குதித்து நீச்சலடித்து மறு கரையினைத் தொடுவதாக இருவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அதன் தூரத்தில் பாதி தூரம் இருவரும் நீந்திச் சென்றுள்ளனர். தென்னனுக்கோதயக்கம். இன்னும் அவ்வளவு தூரம் நீச்சலடித்துச் சென்று தானே அந்தக் கரையைத் தொட முடியும்? நீந்திக் கொண்டே “திரும்பிப் போய் விடலாம். வாடா.” என்றிருக்கிறார் தென்னன். அதற்குகருணாநிதி மறுத்து விட்டார். “உன்னோட வார்த்தைப்படி திரும்பி நீச்சலடிச்சிப் போற பாதி தூரத்துக்கு எதுத்து நீச்சலடிச்சிப் போனா… அந்தக் கரையைத் தொட்டுடலாம். வாடா.” என்றிருக்கிறார் கருணாநிதி. அந்த வயதில் அவரது மனதில் தோன்றிய இந்த விடாமுயற்சி தான், இந்த சமயோசித திட்டமிடல் தான் அரசியலில் அவரைப் புகழேணியின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

((#)) பதினேழு வயதில் அவர் தொடங்கிய கையெழுத்து மாத இதழ் “மாணவ நேசன்”. பள்ளிப் பருவத்தில் இருந்தே வாசிப்பது, எழுதுவது, பேசுவதுமீதாக தீராக் காதல் கொண்டிருந்தார். இந்த மூன்றின் மீதாகவும் எந்தக் காலத்திலும் அவர் பின் தங்கியதே இல்லை.
((#)) மேடைப்பேச்சு, மேடை நாடகம், திரைப்படங்களில் கதை வசனம் பாடல்கள், அரசியல் மேடை, இலக்கிய மேடை, கவியரங்க மேடை, சமூக நாவல்கள் மற்றும் வரலாற்று நாவல்கள் என்று அத்தனையிலும் தடம் பதித்து சாதனை படைத்த அரசியல்வாதி இவரைப் போல எவரும் இல்லை என்றே சொல்லலாம்.
((#)) 1957இல் 33 வயதில் முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத்தேர்தல் உட்பட அவர் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்ற சாதனையாளர். 1969இல் நாற்பத்தைந்தாவது வயதில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

((#)) அப்போது சென்னை மாநகர் முழுவதுமாககை ரிக்சாக்கள் வலம் வந்து கொண்டிருந்த காலம். மனிதர்களை அமர வைத்து ஒரு மனிதன் இழுத்துச் செல்வதா? எனத் தோன்றியது கருணாநிதிக்கு. 1973இல் அத்தனை கை ரிக்சாக்களையும் ஒழித்து விட்டு, சைக்கிள் ரிக்சா வழங்கினார்.
((#)) இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து, சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் அந்தந்த மாநில ஆளுநர்கள் தான் தேசியக் கொடியேற்றி உரை நிகழ்த்துவார்கள். இதில் இந்திய அளவில் எல்லா மாநிலங்களுக்குமாக சுதந்திர தினத்தன்று மாநிலத் தலைநகரங்களில் அந்தந்த மாநில முதல்வர்களே தேசியக் கொடியேற்றும் உரிமையினைப் பெற்றுத் தந்தவர் கருணாநிதி. 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதன்முதலாக தேசியக் கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்தினார் அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி.

((#)) விவசாயத்துக்குஇலவச மின்சாரம், குடிசை மாற்று கான்கிரீட் வீடுகள்’, கிராமப்புற ஊராட்சிகளிலும் குடிநீர் வழங்கிட குடிநீர் வடிகால் வாரியம், உழவர் சந்தை, சமத்துவபுர வீடுகள், பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், சட்டப்படி பெண்களுக்குச் சொத்துரிமை போன்ற மேலும் பல சமூக நலத் திட்டங்கள் கருணாநிதியின் வரலாற்றுச் சாதனைகள்.

((#)) ஒரு சினிமா வசனகர்த்தாவாக அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது “பராசக்தி” திரைப்படம். சம காலத்தில் எம்.ஜி.ஆர். – சிவாஜி இருவருக்குமே கதை வசனம் எழுதி முத்திரை பதித்தவர். அவர்கள் இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப் படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரிகுமாரி, மலைக்கள்ளன்.
((#)) 1947இல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011இல் வெளியான பொன்னர் சங்கர் வரை சுமார் அறுபத்திநான்கு திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் தொடர்ந்து பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

((#)) 93 வயதிலும்உடல் நலம் குன்றுவதற்கு முன்பு வரை அதிகாலை நாலரை மணிக்கு எழுந்து தினசரி செய்தித்தாள் வாசிப்பது அவரது வழக்கம். வாசித்து விட்டு அதன் நிறை குறைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு போனில் அன்று காலையிலேயே பேசி விடுவார். செய்திகளில் வெளிவரும் அரசு நிர்வாகத் தவறுகளைக் குறிப்பிட்ட அரசு அதிகாரிகளின் கவனத்துக்கும் உடனே கொண்டு செல்வார்.
((#)) கருணாநிதி தலைவராக இருந்த போது தி.மு.க.கட்சியில்இரண்டு முறை பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். அந்த இரண்டு பிளவுகளின் பின்னரும் கட்சியையும் கட்சித் தொண்டர்களையும் மீட்டெடுத்தவர் கருணாநிதி.

((#)) அவரைக் கடுமையாக விமர்சிப்பவர்கள், “திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி” என்பதன் முதல் எழுத்துக்கள் தான் “தி.மு.க.” என்றும் வசை பாடுவது உண்டு. எனினும், ஒரு கிராமத்தில் எளிய குடும்பத்திலிருந்து வந்த ஒரு நபருக்கு இது போல பொருந்தி வருவது போல, உலகில் வேறு எந்த இயக்கத் தலைவருக்கும் பொருந்தி வருமா என்பது சந்தேகம் தான்.

– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

Leave A Reply

Your email address will not be published.