தலையிலும் மார்பிலும் குண்டுகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுடப்பட்டவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

0 76

கடந்த மே 22ஆம் தேதியன்று தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியின் போது வன்முறை தூண்டப்பட்டதாகக் கூறி, அதில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் போலீசார். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், இது குறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் நேற்று செய்தி வெளியிட்டது.

துப்பாக்கிச் சூட்டின்போது, 17 வயதான ஸ்னோலின் என்ற சிறுமியின் பின்பக்கத் தலை வழியாகக் குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியுள்ளதாகப் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் எட்டு பேரின் உடலில், பின்புறமாகத் தலை மற்றும் உடல் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண், கடற்கரை அருகேயுள்ள தனது வீட்டில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் சுடப்பட்டுக் கிடந்தார். அவரது காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

34 வயதான மணி ராஜன் என்பவரது நெற்றியின் வழியாகக் குண்டு பாய்ந்துள்ளது. நெற்றியின் வழியாகப் பாய்ந்த குண்டு மூளையை ஊடுருவியதால் ஏற்பட்ட காயம் மரணத்தை ஏற்படுத்தியதாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த தொலைவில் இருந்து குண்டு பாய்ந்துள்ளதை இந்த தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
20 வயதுகளில் இருந்த மூன்று ஆண்களும், 40களில் இருந்த 6 ஆண்களும், 50களில் இருந்த ஒரு ஆணும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.

குவிந்த கண்டனம்
இந்திய காவல் துறை விதிகளைப் பொறுத்தமட்டில் மக்கள் கிளர்ச்சியை எதிர்கொள்ளத் துப்பாக்கி குண்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற விதி உள்ளது. ஆனால் அதனைக் குறைந்த அளவில் பிரயோகிக்குமாறு, அதன் மூலமாக யாரையும் கொல்லக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது போலீசாரின் குறி உடலின் கீழ் பாகத்தில் இடுப்புக்குக் கீழே இருக்க வேண்டுமெனவும், கும்பலின் ஒருபகுதியை பயமுறுத்த வேண்டுமெனவும் போலீசாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு கண்டனத்திற்கு உரியது என்று கடந்த மே மாதம் தெரிவித்திருந்தனர் ஐநா மனித உரிமை நிபுணர்கள். போலீசார் ஆயுதங்களை சமநிலையற்றும் அதிகப்படியாகவும் பயன்படுத்தியது வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.
பதில் இல்லை
துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கை குறித்து, ஊடகத்தினரின் கேள்விகளுக்கு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமோ, மாநில காவல் துறையோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிஐ, இந்த அறிக்கை வெளியானது குறித்து கருத்து வெளியிடவில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு முற்றிலும் எதிர்பாராதது என்று ஏற்கனவே தெரிவித்திருந்த வேதாந்தா குழுமத்தின் சார்பிலும், இந்த பிரேதப் பரிசோதனை குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

கொல்லப்பட்ட 13 பேரில் 11 பேரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளது ராய்ட்டர்ஸ் நிறுவனம். அவர்களில் 10 பேரின் குடும்பத்தினர் துப்பாக்கிச் சூடு தொடர்பான எந்தவொரு சட்டப்பூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஒருவரது குடும்பத்தினர் மட்டும் வழக்கறிஞர் துணையுடன் இது குறித்து வழக்கு தொடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டு பேரின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறியுள்ளது ராய்ட்டர்ஸ்.

கொள்கைக்கு எதிரானது

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு. இவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரையும் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மாநில போலீசார் மட்டுமல்லாமல், சிபிஐ அதிகாரிகளும் இது குறித்து விசாரணை செய்தனர்.

விசாரணைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசு ஆவணங்களின் படி, 15 காவல் துறை ஆயுதங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று தானியங்கித் துப்பாக்கிகளும் (Self Loading Rifle) அடக்கம். பயன்படுத்தப்பட்ட 69 குண்டுகளில் 30 குண்டுகள் மூன்று எஸ்எல்ஆர் துப்பாக்கியிடம் இருந்து வெளிப்பட்டவை. இது தவிர 303 துப்பாக்கியைப் பயன்படுத்தி நான்கு சுற்றுகள், 410 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி 12 சுற்றுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின்போது பயன்படுத்தப்பட்டவை போலல்லாமல் தற்போதைய 303, 410, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் தொடர்ச்சியாகத் தோட்டாக்களைப் பயன்படுத்தும் வசதி கொண்டவை என்று கூறியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரி ஜேக்கப் புன்னோஸ். “உள்ளபடியே சொல்வதானால், இது சட்டத்துக்கு எதிரானதல்ல; ஆனால், குறைந்த சக்தியைப் பயன்படுத்தி சுட வேண்டுமென்ற கொள்கைக்கு எதிரானது” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.