“உங்கள் சாதி என்ன, நீங்கள் சைவமா?”: மறுக்கப்படும் வீடு – பத்திரிகையாளரின் சொந்த அனுபவம் தலித்துகளும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…

0 65

“உங்கள் சாதி என்ன, நீங்கள் சைவமா?”: மறுக்கப்படும் வீடு – பத்திரிகையாளரின் சொந்த அனுபவம்
தலித்துகளும் முஸ்லிம்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்…
ஒரு நாள் எங்கள் வீட்டு உரிமையாளரின் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆனால், வீட்டிற்கு நுழையும் முன்பே எங்கள் சாதி குறித்து கேட்டார். நாங்களும் ஒரு சாதியின் பெயரை சொன்னோம். ஆனால், அது எங்கள் சாதி இல்லை. ஆம் பொய்தான் சொன்னோம்…

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென்னிந்திய பெரு நகரத்திலிருந்து ஹைதராபாத்திற்கு குடியேறினேன். இப்போது நான் கிழக்கு ஹைதராபாத்தில் வசிக்கிறேன். ஆனால், நான் முதன்முதலாக குடியேறியபோது மத்திய ஹைதராபாத்தில் வசித்தேன்.
அப்போது நான் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் ஓர் இஸ்லாமியர். அக்கம்பக்கத்தினர் அனைவரும் என்னைப்போலவே ஊடகப் பணியாளர்கள்தான். அவர்கள் என்னுடன் நட்புடன் இருந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இப்போது நான் வசிக்கும் பகுதிக்கு வந்தேன். இந்த பகுதியில் வீடு தேடத் தொடங்கியபோது எல்.பி நகர் மற்றும் ஹைதராபாத் – விஜயவாடா தேசிய நெடுஞ்சாலை அருகே தேடினேன்.
நீங்கள் சைவமா?
சைவ உணவு உண்ணுபவர்களுக்கு மட்டும்தான் வீடு வாடகைக்கு விடப்படும் என்று காலியாக இருக்கும் வீட்டு வாசல்களில் டுலெட் போர்டுகள் மாட்டப்பட்டு இருந்தன. எப்படியோ நமக்கு தரப்போவதில்லை என்பதால், அந்த வீட்டு கதவுகளை நான் தட்டக்கூட இல்லை.

ஒரு தீவிரத் தேடலுக்குப் பின் எனக்கு பிடித்தமான வீட்டை கண்டுபிடித்தேன். வீட்டு உரிமையாளரை அணுகி எனது விருப்பத்தை கூறினேன். அவர் முதலில் கேட்டது இந்த கேள்வியைத்தான், “நீங்கள் எந்த ஆளு….?” (இந்த ‘ஆளு’ என்ற சொல்லை, ‘எந்த சாதி, எந்த பிரிவு’ என்று எதனைக் கொண்டும் புரிந்துகொள்ளுங்கள்).
விரக்தி மற்றும் கைவிடப்பட்ட மனநிலைக்கு தள்ளப்பட்டேன். இதன் காரணமாக கோபம் கொண்டேன்.
“இந்த நகரத்தின் சில பகுதிகளில் தலித்துகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வீடு மறுக்கப்படுகிறது. சில சாதிகள் மட்டுமே குடி இருக்கும் குடியிருப்புகளும் இங்கே உண்டு” என்று என் நண்பன் குறிப்பிட்டது என் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியது.
ஆனால், என் அலுவலகம் இந்த பகுதியின் அருகே உள்ளது. அதுமட்டுமல்ல, இதன் உள்கட்டமைப்பு, பூங்கா என்று இந்த பகுதி மிக சிறப்பாக உள்ளது. அதனால், நம் வீடு இந்தப் பகுதியில்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். தீவிரமாக தேடவும் செய்தேன்.

நான் இன்னொரு வீட்டிற்கு சென்றபோது, அந்த வீட்டின் பெண் உரிமையாளர் என்னிடம் பல கேள்விகளை கேட்டார். என் வேலை என்ன, பிடித்தம் போக சம்பளம் எவ்வளவு வரும், நான் சைவமா அல்லது அசைவமா, எத்தனை பேர் என் குடும்பத்தில் இருக்கிறார்கள், சொந்த ஊர் எது, பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேள்விகளால் என்னை துளைத்தெடுத்தார். அந்த உரையாடலின் முடிவில், அவர் தன் சாதியை கூறி, ‘நீங்கள் எந்த ஆளு?’ என்று என் சாதியை கேட்டார்.
நான் தயங்கி நின்றேன். ஆனால், அவர் விடுவதாக இல்லை. என் சாதியை சொல்ல சொல்லி அழுத்தம் தந்தார்.
எனக்கு உங்கள் வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நான் அங்கிருந்து நகர்ந்தேன்.
இது அநீதி அன்றி வேறல்ல
வீட்டு வாடகை, அதனை எந்த தேதிக்குள் தர வேண்டும், வங்கியில் வீட்டு வாடகையை செலுத்த வேண்டுமா அல்லது நேரடியாக கையில் கொடுக்க வேண்டுமா, வீடு வாடகைக்கு கேட்டு வருபவரின் பெயரில் ஏதேனும் வழக்கு உள்ளதா, அவர் வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வாரா, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவாரா என்ற கேள்விகளை கேட்பது நியாயம். பான் கார்ட், ஆதார் அட்டையை கேட்கலாம்.
ஆனால், சாதியை கேட்பது அநீதி அன்றி வேறில்லை.

இது போன்ற கசப்பான பல அனுபவங்களுக்குப் பின், நான் எனக்கான வீட்டை கண்டுபிடித்தேன். இந்த வீட்டின் உரிமையாளர் மிகவும் அன்பானவர். அதுவும் என் சொந்த ஊரை அறிந்த பின் அவர் என்னிடம் இன்னும் நெருக்கமாகிவிட்டார். அவர் குடும்பம் என் சொந்த ஊரில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வசித்ததாக கூறினார். அவர் வீட்டில் நான் உணவருந்திய பின்பே, என்னை வெளியே செல்ல அனுமதித்தார்.
நெகிழ்ந்தேன். ஆனால், அந்த நெகிழ்ச்சி தொடரவில்லை.
எல்லாம் அங்கு மிகச் சரியாக சென்றது, என் சாதி தெரியும் வரை. ஆம், ஒரு நாள் என் மனைவி எங்கள் சாதியை அண்டை வீட்டாரிடம் கூறிவிட்டார். நாங்கள் பட்டியல் சாதி என்று தெரிந்துவிட்டது. அன்றிலிருந்து கசப்பான அனுபவங்கள் என்னை மீண்டும் துரத்த தொடங்கின. என் மகளுடன் விளையாடுவதை நிறுத்தினர்.

என் மகள் மிகுந்த ஆவலுடன் அண்டைவீட்டாரின் வீட்டுக்குள் சென்றாலும், அவளை உள்ளே யாரும் அனுமதிக்கவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் அண்டைவீட்டார் அனைவருக்கும் நாங்கள் என்ன சாதி என்று தெரியவந்துவிட்டது. எங்கள் வீட்டு உரிமையாளரின் மருமகள், ‘வீடு கேட்டு போனபோது நாங்கள் எங்கள் சாதியை கூறாமல் மறைத்துவிட்டோம்’ என்று அக்கம்பக்க வீடுகளில் எல்லாம் சொல்ல தொடங்கினார். இது மேலும் எங்களை அவமானப்படுத்தியது.
தனிமைப்படுத்தப்படுதல்
ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால்கூட யாரையும் அணுக முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம். இதன் காரணமாக நாங்களே வீட்டை காலி செய்தோம். ஆம், குடியேறிய சில வாரங்களிலேயே அந்த வீட்டிலிருந்து வெளியேறினோம்.
இது போன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டவர்களுக்கு மட்டும்தான் நான் என்ன சொல்கிறேன் என்பதும், இதன் வலியும் புரியும்.
எல்லாருக்கும் இதுபோன்று சாதியின் காரணாமாக பாகுபடுத்துதல் சட்டத்திற்கு எதிரானது என்று தெரியாது. ஆனால், சிலர் தெரிந்தே இதனை செய்கிறார்கள். இவையெல்லாம் சட்டத்தின் கவனத்தை ஈர்க்காது என்று அவர்கள் நம்புகிறார்கள். எனக்கு இருக்கும் பிற அழுத்தங்கள் காரணமாக என்னால் உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க முடியவில்லை.

இந்த மோசமான வலிமிகுந்த அனுபவங்கள் காரணமாக, நானும் என் மனைவியும் ஒரு முடிவெடுத்தோம். எங்கள் சாதி குறித்துக் கவலைகொள்ளாத இஸ்லாமியர் வீட்டிற்கு குடியேற முடிவு செய்தோம்.
அதுபோல ஒரு வீட்டையும் கண்டுபிடித்தோம். ஆனால், அந்த வீடு எங்களுக்கு பிடிக்கவில்லை.
சாதிய பாகுபாடு பார்க்கும் சுற்றத்தார் இல்லாத, எங்கள் சாதி குறித்து கவலைக் கொள்ளாத உரிமையாளர் இருக்கும் செளகர்யமான வீட்டை தேடினோம். ஆனால், இவை அனைத்தும் பொருந்தும் ஒரு வீட்டை கண்டுபிடிப்பது கடினம் என்று தெரிந்துவிட்டது. அதனால் ஒரு முடிவு செய்தோம். எங்கள் சாதி குறித்து பொய் சொல்ல முடிவு செய்தோம்.
‘பொய் சொல்ல முடிவு’
கணவனும், மனைவியும் அரசு ஊழியர்களாக இருக்கும் வீட்டை கண்டடைந்தோம். அவர்களும் எங்கள் சாதி குறித்து கேட்கவில்லை. அந்த வீட்டிற்கு குடியேறினோம். ஆனால், எங்கள் பிரச்சனை அந்த புள்ளியில் முடியவில்லை.

ஒரு நாள் எங்கள் வீட்டு உரிமையாளரின் உறவினர் எங்கள் வீட்டிற்கு வந்தார். ஆனால், வீட்டிற்கு நுழையும் முன்பே எங்கள் சாதி குறித்து கேட்டார். நாங்களும் ஒரு சாதி சொன்னோம். ஆனால், அது எங்கள் சாதி இல்லை. ஆம் பொய்தான் சொன்னோம். அதன்பின் எங்கள் வீட்டிற்குள் வந்தார். வந்தவுடன் நாங்கள் உண்மைதான் சொல்கிறோமா என்பதை கண்டறிய கேள்வி மேல் கேள்விகளாக கேட்டார்.
எங்கள் பெற்றோர், வீட்டிற்கு வந்தபோது அண்டை வீட்டார் அனைவரும், மீண்டும் எங்கள் சாதி குறித்த சந்தேகத்தோடு பார்க்க தொடங்கினர். அதற்கான காரணம், எங்கள் பெற்றொரின் பேச்சு வழக்காகவும் இருக்கலாம்.
அண்மையில் எங்கள் வீட்டு உரிமையாளர் மாறிவிட்டார். ஆனால், புது வீட்டு உரிமையாளரிடமும் எங்கள் பொய்யை தொடர்கிறோம். எங்கள் மொழிநடை, பேச்சு வழக்கு அனைத்தையும் கூடுமான வரை மாற்றியே பேசுகிறோம். ஆனால், எனக்கு அச்சம் போகவில்லை. என் குழந்தைகளிடம் இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் அது.
தெலுகு எழுத்தாளர் அருத்ரா இவ்வாறாக சொல்வார்: “சொந்த வீடு வாங்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனம். நல்ல வீடும், அருமையான வீட்டு உரிமையாளரும் இருந்தால், ஒரு வாடகை வீட்டிலேயே காலம் முழுவதும் வசித்து விடலாம்.” என்பார். அவர் சென்னை பனகல் பூங்கா அருகே 25 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்தார். ஆனால், யாருக்கும் அப்படியான வரம் கிடைத்துவிடுவதில்லை.
முதலில் தவணையில் சொந்த வீடு வாங்குவது குறித்த தயக்கம் இருந்தது. காலம் முழுவதும் பாதி சம்பளத்தை கடனாக செலுத்துவது நல்ல யோசனையாக இருக்குமா என்பது தெரியாமல் குழம்பினோம்.

ஆனால், பொய் சொல்லி குற்ற உணர்வில் ஒரு வீட்டில் இருப்பதைவிட சொந்த வீடு வாங்குவது நல்ல யோசனையாக எனக்கு தோன்றியது.
பெரும் நிதி போராட்டத்திற்கு பின், நண்பர்களிடம் கடன் பெற்று, தெரிந்த எல்லா நிதி ஆதாரங்களையும் திரட்டி வீடு வாங்கினேன். அந்த வீடு இன்னும் கட்டுமானத்தில் இருக்கிறது. அந்த வீட்டிற்கு குடியேற சில காலம் ஆகும். அதுவரை, இந்த பாகுபாட்டை நான் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.
(பிபிசி தெலுகு செய்தியாளர் ரவிசங்கர் லிங்குட்லாவிடம் ஒரு ஹைதராபாத் பத்திரிகையாளர் பகிர்ந்துகொண்ட தகவல் இது. அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவர் குறித்த தகவல்கள் பகிரப்படவில்லை.)

Leave A Reply

Your email address will not be published.