சபரிமலை: கடையடைப்பு, கத்திக்குத்து, கல்வீச்சு – கேரளாவில் கள நிலவரம் என்ன?

0 50

சபரிமலை: கடையடைப்பு, கத்திக்குத்து, கல்வீச்சு – கேரளாவில் கள நிலவரம் என்ன?

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 50 வயதுக்கும் குறைவான பெண்கள் இருவர் சென்றதைத் தொடர்ந்து கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் இடதுசாரி அரசைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
செவ்வாய்கிழமை (2019 ஜன.1) அதிகாலை சுமார் 03:45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் சந்நிதானத்தை அடைந்த பிந்து, கனகதுர்கா என்ற இந்த இரண்டு பெண்களும் பதினெட்டாம் படி வழியாக செல்லாமல் வி.ஐ.பி.க்கள் செல்லும் நுழைவாயில் வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று நடக்கும் கடையடைப்பு போராட்டத்தால் பால், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தவிர அங்கு எதுவும் கிடைக்காத நிலை கேரளாவின் சில பகுதிகளில் உள்ளது என பிபிசி செய்தியாளர் இம்ரான் குரேஷி தெரிவிக்கிறார்.
தமிழ்நாடு – கேரளா இடையேயான அரசு வாகனப் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே “பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் பொறுப்பு. அரசு தன் அரசியல் சாசன கடமையை நிறைவேற்றியுள்ளது. சங்கப் பரிவார அமைப்புகள் சபரிமலையை ஒரு மோதல் மிகுந்த பகுதியாக மாற்ற நினைக்கின்றன,” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
“39 காவல்துறையினர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்கப்பட்ட பெரும்பாலானோர் பெண்கள். பெண் ஊடகவியலாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர்,” என்றும் விஜயன் கூறியுள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
பத்தனம்திட்டா மாவட்டத்தில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் சபரிமலை கர்ம சமிதி ஆதரவாளர்கள் இடையே நடந்த கல்வீச்சில் காயமடைந்த 54 வயதாகும் சந்திரன் உன்னிதன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு மரணமடைந்தார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நான்கு பேருக்கு கத்திக்குத்து
பாரதிய ஜனதா கட்சி மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இடையே திருச்சூர் மாவட்டத்தில் நடத்த மோதலில் நான்கு பேருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.
“காயமடைந்தவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை. பாஜகவினர் மோதல் நடந்த பகுதிகளில் இருந்த கடைகளை வலுக்கட்டாயமாக மூடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த உணவகம் ஒன்றினுள் ஊழியர்கள் இருந்தபோது, மோதல் உண்டானது.”
“இந்த மோதல் பின்னர் மதப்பிரச்சனையாக உருவெடுத்தது. நான் அங்குதான் இருக்கிறேன்,” என திருச்சூர் புறநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.கே.புஷ்கரன் பிபிசியிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் எதிரொலிக்கும் கேரள போராட்டம்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண் பக்தர்கள் வழிபாடு நடத்தியதைக் கண்டித்து சென்னையில் உள்ள கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக இந்து அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள க்ரீம்ஸ் சாலையில் அமைந்திருக்கிறது கேரள மாநில அரசுக்குச் சொந்தமான கேரள சுற்றுலா வளர்ச்சித் துறை அலுவலகம். நேற்று இரவு கையில் தடிகளுடன் அங்கு வந்த கும்பல் ஒன்று அலுவலகத்தை அடித்ததோடு, கல் வீசியும் தாக்குதல் நடத்தியது. இதில் அந்த அலுவலகத்தின் கண்ணாடிகள் நொறுங்கின.
அங்கு கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய ஆயிரம் விளக்கு காவல்துறையினர், இந்து முன்னணி அமைப்பின் ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் பார்த்தசாரதி என்பவரைக் கைதுசெய்தனர். “இது தொடர்பாக மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். விரைவில் அவர்களும் கைதுசெய்யப்படுவா்கள்” என நுங்கம்பாக்கம் காவல்துறை துணை ஆணையர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தற்போது அந்த அலுவலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கல்வீச்சு நடந்த இடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் இன்று காலையில் பார்வையிட்டார். “இந்த விவகாரத்தை வைத்து தமிழகத்தை வன்முறை பிரதேசமாக மாற்ற முயல்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசனும் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.