பிளாஸ்டிக் தடை சாத்தியமா?

0 136

தமிழகத்தில் விரைவில் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்படும் என அரசு கடந்த ஜுன் 5ம் தேதி அரசு அறிவித்தாலும், அதற்கான நடவடிக்கை வீரியத்துடன் செயல்படுத்தவில்லை. ஆனால், தற்போது, பிளாஸ்டிக் ஒழிப்பில் முழுவீச்சுடன் இறங்கியுள்ள தமிழக அரசு 1 ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதிலும் 10ஆயிரம் தனிப்படைகளை அமைத்து, ஒரு படைக்கு 5 வீதம் 50ஆயிரம் பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதுமட்டுமின்றி, அபராதமும் அதிகளவில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நவீன காலகட்டமான இருபதாம் நூற்றாண்டில் பிளாஸ்டிக்(நெகிழி) பைகளின் பயன்பாடு என்பது மக்களின் வாழ்வியல் முறைகளில் ஒன்றாக மாறிவிட்டது. தெருமுனைகளில் பார்க்கக்கூடிய பெட்டிகடைகள் முதல் பெரிய வணிகவளாகங்கள் வரை அனைத்து இடங்களிலும் பெரும் ராஜ்ஜியத்தை கொண்டுள்ளது இந்த பிளாஸ்டிக்குகள். இன்னும் சொல்லப்போனால் பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வந்தால் தான் நாகரீகம் என்னும் அளவிற்கு மக்கள் மத்தியில் பரவலாக பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளை அதிகம் விரும்பும் நாம், அவற்றின் பாதகம் அறிந்தே அவற்றை பயன்படுத்துவது தான் அபத்தம். பிளாஸ்டிக் பொருட்களினால் அப்படி என்ன தீங்கு? உண்மையில் என்ன பிரச்சனை? மக்களுக்கு போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி இருக்கிறதா? என்பதனைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்…

பிளாஸ்டிக் என்பவை செயற்கை மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டவை. இவை கிரேக்க மொழியில் “பிளாஸ்டிக் கோஸ்”என்று அழைக்கப்படுகிறது. பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும் போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் பிளாஸ்டிக் கிடைக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு நூறாண்டுகளுக்கு மேல் ஆவதால் மழைநீரை மண்ணுக்குள் செல்வதை தடுத்து நிறுத்துகிறது. இதனால், நிலத்தடி நீர் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, மண்ணின் திறன் அமைப்பிற்கும், சத்துக்களுக்கும்,பெரும் தீங்கினை ஏற்படுத்தி விடுகிறது.

காய்கறி, பால், துணிக் கடைகள்,மருந்து கடைகள்,மின்னணு சாதனங்கள்,மளிகை பொருட்கள்,தேனீர் கடைகள், உணவு விடுதிகள் என பெரும்பான்மையான இடங்களில் நாடு முழுவதும் இன்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த விலையில் பிளாஸ்டிக் பொருட்கள் கிடைப்பதாலும், பொருட்களை எடுத்துச்செல்ல வசதியாக இருப்பதாலும் மக்கள் இவற்றை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.

பிளாஸ்டிக் உரைகளால் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போது நமக்கு கேன்சர் கட்டிகள், அலர்ஜி கட்டிகள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்றவைகளும் உருவாகின்றன. எப்போது மனிதன் இயற்கையை மறந்து செயற்கைக்கு சென்றானோ அன்றே மனிதனின் அழிவு தொடங்கிவிட்டது. உதாரணமாக அன்றைய காலகட்டத்தில் வாழை இலைகள், சில்வர் டம்ளர்கள், சில்வர் தட்டுகள் என நம் முன்னோர் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இன்றோ பிளாஸ்டிக் இலைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், பிளாஸ்டிக் தட்டுகள் என மாறிவிட்டது. இந்த மாற்றம் தான் தற்போது மனிதர்களை ஆட்கொள்ளும் பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை அதன் திறனுக்கு ஏற்ப மாறுபடும். ஒரு பிளாஸ்டிக் பை மக்குவதற்கு நூறு முதல் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். டயபர், நாப்கின்கள் 500 ஆண்டுகள் முதல் 800 ஆண்டுகள் வரை மக்குவதற்கு காலத்தை எடுத்துக் கொள்கிறது. ஆனால், பஞ்சுக் கழிவுகள் ஒன்று முதல் ஐந்து மாதங்களும், காகிதம் 2 முதல் 5 மாதங்கள் வரையிலும், உல்லன் சாக்ஸ்கள் ஒன்று முதல் ஐந்தாண்டுகளும், தோல் காலணிகள் 25 ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரையில் மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. இதை பார்க்கும்போது நமக்கு பிளாஸ்டிக் பொருட்கள் எவ்வளவு தீங்கு ஏற்படுத்துகின்றன என்பது நன்கு  தெரிகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி, பசு, நாய் போன்ற கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு உணவுக் குழாய்களில் சிக்கி மாண்டு விடுகின்றன. எந்த அளவுக்கு மனிதனுக்கு பிளாஸ்டிக் தீங்கோ அதே அளவுக்கு கால்நடைகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றன. அதுமட்டுமின்றி, நாம் பயன்படுத்திவிட்டு சாலைகளில் வீசும் பிளாஸ்டிக்குகள் சாக்கடைகளில் அடைப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால், தேங்கி இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளினால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. இது மலேரியா, டெங்கு உள்ளிட்ட வைரல் நோய்களுக்கு வழிவகுக்கின்றன.

பிளாஸ்டிக் பைகளில் சூடாக அல்லது குளிர்ச்சியான பானத்தை அருந்தும்போது நுரையீரல், கல்லீரல் பாதிப்பு மட்டுமின்றி புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, அதேபோல், பிளாஸ்டிக்குளை எரிக்கும் போது டையாக்சின் வாயு வெளிப்படுகிறது. இதன் மூலம் சுவாசப்பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மனிதனுக்கு ஆக்ஸிசன் கிடைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கும் கடலில் இன்று தீவுகள் போன்று தேங்கி உள்ளன பிளாஸ்டிக்குப்பைகள். இது போன்று எந்த வகையிலும் மனிதர்களுக்கு நம்மை விளைவிக்காத இந்த பிளாஸ்டிக் பொருள்களை ஒட்டுமொத்த மனித சமூகமும் ஊக்குவித்ததின் விளைவு, தற்போது மாற்றுவழிக்கு செல்லமுடியாமல் தவிக்கிறோம்.

மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம் என்றால், உலகளவில் உற்பத்தியாகும் பிளாஸ்டிக் பொருட்களில் 7% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படும் தன்மையைக்கொண்டுள்ளது. எனவே, பிளாஸ்டிக்கில் மறுசுழற்சி என்பது தோல்வியாகவே பார்க்கமுடிகிறது.

இதற்கு பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து ஆதரவு குரல் வந்தாலும், வணிகர்கள், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் என பிளாஸ்டிக் பொருள்களை நேரடியாக விநியோகம் செய்யக்கூடிய தொழிலாளர்கள் எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இதற்கு மாற்று வழி என்ன என்பதை தெளிவாக சொல்லாத அரசு, அதற்கான கால அவகாசத்தை மக்களுக்கு அளித்துள்ளதா என கேள்வி எழுப்புகின்றனர். இந்த கேள்வியும் விவாதத்திற்கு உரியதே! கடைக்கு சென்றால் மஞ்சள் பைகளையோ அல்லது துணிப்பைகளையோ எடுத்துச்செல்லும் பழக்கத்தை முற்றிலும் மறந்து போன மக்களிடம் இனி பிளாஸ்டிக் பைகள் கிடையாது என்றால், அதன் விளைவு இது போன்ற வியாபாரிகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும். இங்கு பிளாஸ்டிக் ஒழிப்பு தவறல்ல.

 

அதற்கு மாற்றை கூறாமல் இருப்பதும் அது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் இருப்பதுமே தவறு. விழிப்புணர்வு என்பது புழக்கத்தில் உள்ள ஒரு பொருளை ஊக்கப்படுத்தவும் அதைப்பற்றி மக்களிடம் கொண்டுசெல்வதுமேயாகும். ஆனால், ஜுன் மாதமே பிளாஸ்டிக் தடை குறித்து அறிவித்த அரசு எத்தனை துணி, சணல் பைகள் என பிளாஸ்டிக்கு மாற்றான எத்தனை தொழிற்சாலைகளுக்கு ஊக்கம் அளித்துள்ளன. அவற்றின் பெருக்கத்தை எந்த முறையில் மக்களிடம் கொண்டுசென்றுள்ளது. இதுவரை எவ்வளவு பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடியுள்ளது.

 

மாற்று தொழிற்சாலைகள் எத்தனை தொடங்கப்பட்டுள்ளன என்பது கேள்விக்குறியே. பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது நம் வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்யக்கூடிய கடமைகளில் ஒன்று. அதை மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ள நிச்சயம் அதற்கு மாற்றான துணிப்பை, சணல், பாக்கு மட்டை, கூடை உள்ளிட்ட இயற்கை முறை தொழில்களை அரசு ஊக்குவிக்கவேண்டும். புதிதாக தொடங்க மானிய விலைகளில் இயந்திரங்களை வழங்கி பயிற்சி வகுப்புகள் அளிக்கவேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்பும் பெருகும்.
நல்ல சிந்தனைக்கான முயற்சி, மாற்றத்திற்கான விதை, அது நிச்சயம் மரமாக மாறும்.

– ஜோல்னா ரங்கா

 

 

Leave A Reply

Your email address will not be published.