சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் வாழ்வை மீட்டெடுக்க முயற்சிக்குமா அரசு?

0 263

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மொத்தம் 780 உள்ளதாகக் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலக இணையத் தளத்தில் தகவல் உள்ளது. (http://www.tndce.in/College_List_2016.htm) இதில் அரசு கல்லூரிகள் 89, அரசு உதவி பெறும் கல்லூரிகள் 139, சுயநிதி கல்லூரிகள் 513, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் 39.
கல்லூரி என்றால் வண்ணத்துப்பூச்சியாய்ச் சிறகடிக்கும் மாணவப் பருவம் மட்டுமல்ல அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் நல்ல மதிப்புமிக்க ஊதியம் கிடைத்து வருகிறது. ஒரு காலத்தில் நடுத்தர வர்க்கத்தில் (Middle Class) ஆசிரியர்களுக்குப் பெண் கொடுக்கச் சமூகத்தில் யாரும் முன்வரமாட்டார்கள். டாக்டர், இன்ஜினியர், வங்கியில் பணியாற்றுவோருக்குதான் பெண் கொடுப்பார்கள். கல்லூரி ஆசிரியர்கள் என்றால் பெண் கொடுக்க முன்வர இயலாத அளவிற்குக் குறைந்த ஊதியம் பெற்றுவந்தனர். அதுமட்டுமின்றி, அரசு கல்லூரி என்றால் ஆசிரியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் நடைபெறும். அரசு உதவி பெறும் கல்லூரி என்றால் ஆசிரியர்கள் ஒருவகை அடிமை மனோபாவத்துடன் இருப்பார்கள்.

1990களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியத்தைத் தமிழ்நாடு அரசு வழங்கியவுடன் கல்லூரி ஆசிரியர்களின் ஊதியம் கணிசமாக உயரத் தொடங்கியது. 2006ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட 6ஆவது ஊதியக் குழுவில் இந்திய ஆட்சி பணி (IAS) அதிகாரிகளின் ஊதியத்திற்கு நிகரான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்படி, அடிப்படை ஊதியம் ரூ.15,600 + கல்வித்தர ஊதியம் ரூ.9000 மொத்தம் 21,600 என இருந்தது. இதனால் சமூகத்தில் கல்லூரி ஆசிரியர்களின் மதிப்பு உயரத் தொடங்கியது.

மனநிறைவான ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் கல்லூரி ஆசிரியர்களில் மிகக்குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கும் கல்லூரி ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது. கல்லூரி ஆசிரியர்களில் எந்த ஆசிரியர் மிகக்குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அவர்களை இப்படி இனம் கண்டுகொள்ளலாம்.
அரசு கல்லூரிகளில் வருகை தரும் விரிவுரையாளர்கள்.(Guest Lecturers)
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சுயநிதிப் பாடப்பிரிவில்(Govt. Aided College Self Finance Course) பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள்.

சுயநிதி(Self Finance) கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள்.
பல்கலைக்கழக உறுப்பு (University Constitution College) கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியர்கள்.
இவர்கள் அரசு ஊதியம் என்னும் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஊதிய விகிதம் பெறும் ஆசிரியர்களின் கல்வித் தகுதியான எம்பில்+நெட் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவராக இருக்கிறார்களா? என்றால் 60% ஆசிரியர்கள் உரிய தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். 40% ஆசிரியர்கள் உரிய தகுதியைப் பெறாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

2006ஆம் ஆண்டிற்கான 6ஆவது ஊதியக்குழுவின் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பில், சுயநிதிப் பாடப்பிரிவு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் UGCயின் கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பு ஊதியமாக ரூ.25,000 வழங்கப்பட வேண்டும் என்று விதியை வகுத்திருந்தது. இந்த விதிகளை எல்லாக் கல்லூரிகளும் காற்றில் பறக்கவிட்டன என்பதே உண்மை.
அப்போது வழங்கப்பட்ட அதிகபட்ச மாதஊதியம் ஏறத்தாழ ரூ.10,000. தமிழ்நாட்டில் கட்டுரையாளர் அறிந்த நிலையில் திருச்சி ஸ்ரீமத் ஆண்டவர் என்னும் சுயநிதிக் கல்லூரி மட்டுமே UGCயின் விதியை மதித்துத் தகுதியுடைய ஆசிரியர்களுக்கு ரூ.25,000மும், முனைவர்

பட்டம் பெற்றிருந்தவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.2,000 சேர்த்து ரூ.27,000 வழங்கி வந்தது. (இந்த நடைமுறை அக்கல்லூரியில் தற்போது பின்பற்றப்படவில்லை என்ற செய்தியும் உள்ளது)
இந்தச் சுயநிதி ஆசிரியர்கள் கொடுத்த வந்த கோரிக்கைகளின் அடிப்படையிலும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு, அரசு கல்லூரிகளில் பணியாற்றும் வருகை தரும் விரிவுரையாளர்களுக்கு மாதத் தொகுப்பூதியத்தை ரூ.10,000லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தியுள்ளது. இதையொட்டிப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி ஆசிரியர்களும்
மாதத் தொகுப்பூதியமாக ரூ.15,000 பெற்று வருகிறார்கள். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உள்ள சுயநிதிப் பாடப்பிரிவுகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும், சுயநிதி கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் பணியில் சேரும்போது ரூ.15,000 வழங்கப்படுவதில்லை.

 

குறைந்தபட்சம் பெரு நகரங்களில் ரூ.10,000 வழங்கப்படுகின்றது. சென்னையில் ரூ.14,000 தொகுப்பூதியம் வழங்கப்படுகின்றது. நாகை மாவட்டத்தின் பொறையாறு வட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியமாக ரூ.4000 வழங்கப்படும் அதிர்ச்சிகரமான செய்திகளும் உண்டு.
பே ஸ்கேல்(Pay Scale) என்னும் மாத ஊதிய நிரக்கு என்பதில் அடிப்படை ஊதியம் + கல்வித்தர ஊதியம் + அகவிலைப்படி + வீட்டு வாடகைப்படி + மருத்துவப்படி + பெரும் நகரம் எனில் நகர ஈட்டுப்படி என்பதாகும். குறைந்த ஊதியம் பெறும் ஆசிரியர்களைக் கட்டுரையில் சுயநிதி ஆசிரியர்கள் என்று ஒரு வசதிக்காக அடையாளப்படுத்துகிறார்கள். இந்தச் சுயநிதி ஆசிரியர்களுக்குத் தொகுப்பூதியம் வழங்கப்படுகின்றது.

தொகுப்பூதியத்தில் அறிவிக்கப்படும் அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்படும். மற்றபடியான எந்தவிதமான படிகளும் வழங்கப்பட மாட்டது. தொகுப்பூதியத்தோடு சேர்த்து ஆண்டு ஊதிய உயர்வு என்ற அடிப்படையில் ரூ.500இலிருந்து ரூ.1000 வரை சில கல்வி நிறுவனங்கள் வழங்கும். ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கட்டாய விதிகள் கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்படவில்லை.

இந்நிலையில் கல்வி நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தைத்தான் இந்தச் சுயநிதி ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும். UGCயின் கல்வித்தகுதி பெறாத சுயநிதி ஆசிரியர்களுக்கு இன்னும் குறைவான ஊதியமே வழங்கப்படுகின்றது. UGCயின் கல்வித் தகுதி பெறாமல் உயர்கல்வி நிறுவனமான கல்லூரிகளில் பணியாற்றிட முடியுமா? என்றால் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
குறிப்பாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணையத் தளத்தில் 2014ஆம் ஆண்டில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 68% சுயநிதி ஆசிரியர்கள் தகுதி பெறாமல் பணியாற்றி வருகிறார்கள்.

ஊதியக்குழுவின் படி சுயநிதி ஆசிரியர்களுக்கும், அரசு ஆசிரியர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

-ஆசைத்தம்பி

Leave A Reply

Your email address will not be published.