அதிகரிக்கும் ‘‘ச்சீ’’ போஸ்டர்கள்

0 131

கல்யாணம், காதுகுத்து, பிறந்தநாள், அரசியல் போன்றவற்ற நிகழ்வின் போது போஸ்டர்கள் பெரும்பாலும் பப்ளிசிட்டிக்காக ஒட்டப்படும். ஆனால் சினிமா போஸ்டர்கள் பப்ளிசிட்டிதான் என்று முழுக்க கூறிவிட முடியாது. திரைப்படங்களில் அறிவிப்புகள், வெளியிடும் தேதி என்று சினிமா போஸ்டர்கள் மக்களுக்கு ஓர் அறிவிப்பு செய்தியாகவே இருந்தன.
திருட்டு சிடிகளின் வருகை, பைரசியின் கோரத்தாண்டவம், இவைகளினால் சினிமாக்களும், சினிமா பிரபலங்களும், ஏதேனும் பப்ளிசிட்டியை ஏற்படுத்தும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

 

நடிகர் விஜய் படம் என்றால் மக்களுக்கு ஒரு கிரேஸ் இருக்கும். அத்தகைய கிரேஸ் இருந்தும் கூட விஜய் படங்களின் இயக்குனர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி பப்ளிசிட்டி தேடிக் கொள்கிறார்கள் என ஒரு பொதுவான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தற்போது விஜய் படங்கள் மட்டுமின்றி ரஜினி முதல் சிவகார்த்திகேயன் படம் வரை இதே நிலைதான் என மக்கள் கருதுகின்றார்கள்.
2018ம் ஆண்டு அடல்ட் கதைகள், மதம் சார்ந்த கதைகள், பெண்களின் உரிமை பேசும் கதைகள் என பல்வேறு கருத்தினை மையமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாயின. அவற்றிற்கான பப்ளிசிட்டியை ஏற்படுத்தும் வகையில் அடிக்கப்பட்ட போஸ்டர்களும் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்டுத்தின. அந்த வகையில் இந்த வருடம் ஆடை என்ற படத்தில் கதாநாயகி புகைபிடிக்கும் ஒரு காட்சியினை அமைத்து அதனை போஸ்டர்கள் அடித்து திரைப்படங்கள் பப்ளிசிட்டியை தேடிக்கொள்கின்றன. இது மாதிரியான போஸ்டர்களை கொண்ட படங்கள்தான் மக்கள் அதிகம் ரசித்து வந்து பார்க்கிறார்கள் என்கின்றனர் திரையரங்க பணியாளர்கள்.

 

“பரியேறும் பெருமாள்”, “கனா”, “96” போன்ற வெற்றி படங்களின் வசூலைவிட “டார்ச்லைட்”, “ஹர ஹர மகாதேவி”, “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற திரைப்படங்களின் வசூலே அதிகம் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
சரி இப்ப இதற்கும், சர்ச்சை “ச்ச்சீ” போஸ்டர். என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம்? என்று நீங்கள் யோசிக்கலாம் சம்பந்தம் இருக்கிறது. முன்பெல்லாம் அடல்ட் திரைப்படம், திரைப்படத்தின் போஸ்டர்கள் பெரும்பாலும் மக்களின் கண்களில் படாது. இப்போது திரும்பும் இடமெல்லாம் இது போன்ற போஸ்டர்களே அதிகம் காணப்படுகின்றன. முன்பெல்லாம் ஆண்கள் கூட அடல்ட் திரைப்படங்களை திரையரங்கிற்குச் சென்று பார்க்க கூச்சப்படுவார்கள். ஆனால் இன்றோ நிலைமையே வேறு! பெண்களே தைரியமாக அடல்ட் திரைப்படங்களை பார்க்கின்றனர். ஆக இத்தகைய மாறுதலுக்கு யார் காரணம் திரைப்படத்தின் நடிகர் நடிகைகளா? அல்லது திரைப்படத்தின் இயக்குனர்களா?

 

தயாரிப்பாளர்களா? இல்லவே இல்லை. இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கான காரணம் மக்களின் ரசனையே! ஒரு இயக்குனர் தன் படத்தின் பப்ளிசிட்டிகாக சர்ச்சையான போஸ்டர்களையும், ஆபாச போஸ்டர்களையும் ஒட்டுகின்றார்கள். இதனால், நல்ல படங்களை, பாடல்களை, கதைகளை, தேடி தேடிச் சென்று பார்த்த சினிமா ரசிகர்கள். இன்று இது போன்ற ஆபாசமான படங்களை ரசிக்கும் நிலைக்கு சென்றுவிட்டனர்.

மேலும், இதனை மையமாக வைத்து தான் இன்றைய தமிழ் சினிமாக்களும்,சினிமா கலைஞர்களும்,இயங்கி வருகின்றார்கள். நல்ல படங்களை பார்க்க ஆட்கள் குறைவாகி விட்டார்கள். உணர்வுப்பூர்வமான கதை, திரைக்கதை, வசனங்கள் இல்லாமல், ஒரு அடல்ட் கன்டன்டுகளை ரெடி செய்தால் போதும் படம் வசூல் ரீதியில் ஹிட் அடித்துவிடும் என்ற அளவிற்கு நம் மக்களின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும், மார்க்கெட் இல்லாத நடிகைகள் கவர்ச்சியாக ஒரு புகைப்படத்தை சமூக வலைதளங்களில் உலாவ விட்டால் போதும் போன மார்க்கெட் திரும்பி வந்துவிடும். அந்த நடிகைகளை மீண்டும் இது போன்ற அடல்ட் கதைகளுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். திரைப்படத்தின் கதை நன்றாக இருக்கிறதா? என்று பார்க்காமல் ஒரு திரைப்படத்தின் கவர்ச்சி போஸ்டர்களையும், சர்ச்சையான போஸ்டர்களையும், பார்த்து திரையரங்கிற்கு கூட்டம் போவதை என்னவென்று கூறுவது? முதலில் நம் ரசனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவின் இயக்குனர்களும் சற்று பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் தன் படங்கள் ஓட வேண்டும் என்பதற்காக சர்ச்சைகளை ஏற்படுத்தி ஓடவைக்க முயற்சி செய்வது ஒரு நல்ல இயக்குநருக்கு அழகல்ல என்னதான் அடல்ட் திரைப்படங்களை சென்சார் அனுமதித்தாலும் முழுக்க முழுக்க அதனையே எடுக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு நல்ல தரமான சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை எடுக்க வேண்டும்.

 

ஜோல்னா ரெங்கா

Leave A Reply

Your email address will not be published.