வாங்காத பொங்கல் பரிசுக்கு வந்த எஸ்.எம்.எஸ்’ – அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்!

0 53

வாங்காத பொங்கல் பரிசுக்கு வந்த எஸ்.எம்.எஸ்’ – அதிர்ச்சியடைந்த குடும்பத்தார்!

தாம்பரம் பகுதியில் போலி ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி தமிழக அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் தொகையை அந்த ரேஷன் கடையின் ஊழியரே முறைகேடாகப் பணம் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாகப் பொங்கல் பொருள்கள் தொகுப்புடன் 1,000 ரூபாய் பணம் வழங்கப்படும் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். குடும்ப அட்டைதாரரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ அந்தந்த ரேஷன் கடைக்கு நேரில் சென்று பரிசுப் பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் தாம்பரம், கணபதிபுரம் பகுதியில் உள்ள காஞ்சி மக்கள் அங்காடி (KD 20) கடையில் போலி ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி அந்த கார்டில் உள்ளவரின் கையெழுத்துப்போட்டு 1,000 ரூபாய் எடுத்தது அம்பலமாகி இருக்கிறது.

இது குறித்து தாம்பரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜோதிகுமார், “கணபதிபுரம் மக்கள் அங்காடியில் சுமார் 1450 குடும்பத்தினர் பயன் பெறுகிறார்கள். முறைகேடுகள் இல்லாமல் அனைவருக்கும் பொங்கல் பரிசுடன் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் எனக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். என்னோட நண்பர் சைமன் என்பவர் அவங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் இரண்டு மாதத்துக்கு முன்பு கோயமுத்தூருக்குச் சென்றார். இன்றைக்கு காலையில போன் செய்து ‘நான் ஆயிரம் ரூபாய் வாங்குனதா எனக்கு எஸ்.எம்.எஸ் வந்திருக்கு. யாராவது என்னோடப் பணத்தை வாங்கினாங்களா’ன்னு கேட்டார். ‘நீங்க யாருகிட்டயாவது கார்டை கொடுத்துட்டு போய் இருப்பீங்க’ன்னு நான் சொன்னேன். அந்த ஸ்மார்ட் கார்டு என் கையில இருக்கு; பழைய கார்டும் என் கையிலதான் இருக்கு’ன்னு சொன்னார்.

அப்புறம் அவரிடம் இருந்த ஸ்மார்ட் கார்டையும் எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். நான் அந்த ரேஷன் கடைக்குப் போய் விசாரித்தேன். ‘ஸ்மார்ட் கார்டில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. தவறுதலாக அவருடைய செல்போன் எண்ணைக் கொடுத்து இருப்பாங்க. அது போல் வாங்கினால் எஸ்.எம்.எஸ். போகும்”ன்னு கடை ஊழியர் சொன்னார். பிறகு சைமன் ஸ்மார்ட் கார்டுஎண்ணைகொடுத்து பதிவேட்டில் உள்ள கையெழுத்தைப் பார்த்தேன். அவருடைய கையெழுத்து போலியாகப் போடப்பட்டு பணம் எடுத்திருப்பது தெரியவந்தது.

ஸ்மார்ட் கார்டு பாதுகாப்பானது எனச் சொல்கிறார்கள். வெளியூர் போயிருப்பவர்களின் பெயரில் போலியாக ஸ்மார்ட் கார்டு தயாரித்து வைத்து முறைகேடு செய்து வருகிறார்கள். இது குறித்து நான் கேட்டதும், அதிகாரிகள் இந்த விஷயத்தைப் பெரிதாக்க வேண்டாம் எனப் போனில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்காக ஒரு நாள் முழுவதும் கால் கடுக்க ஏழை மக்கள் காத்திருந்து பணத்தை வாங்கிச் செல்கிறார்கள். அந்த அன்றாடம் காய்ச்சிகளின் வயிற்றில் அரசு ஊழியர்கள் அடிக்கலாமா?” என ஆதங்கப்படுகிறார்.

Leave A Reply

Your email address will not be published.