உயர் வகுப்பினர்க்கு 10 % இட ஒதுக்கீடு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கு எதிரானது

0 87

உயர் வகுப்பினர்க்கு 10 % இட ஒதுக்கீடு என்கிற மத்திய அரசின் மசோதாவை காங்கிரஸ் ஆதரித்திருப்பது எனக்கு கடும் அதிருப்தியை அளிக்கிறது.. சமூகநீதிக்கான மையமான அளவுகோல் பொருளாதாரம் சார்ந்ததல்ல.. இதை காந்தியும் அம்பேத்கரும் நன்கு உணர்ந்திருந்தார்கள்.. நேருவிற்கு இதில் போதாமை இருந்தது..

காங்கிரஸின் ஆதரவிற்கு வேறு பலமாநிலங்களின் அரசியல் கணக்குகள் காரணமாக இருக்கலாம்.. அங்குள்ள சூழல்களில் அதற்கான நியாயங்களும் இருக்கலாம்.. ஆனால் தமிழகத்தின் சமூகநீதி அரசியலின் நீள அகலங்களில் பரிச்சயமுள்ளவனாக தமிழகத்தின் இட ஒதுக்கீட்டு கொள்கை பெருமளவு சமவாய்ப்பை அளிக்ககூடியது என்பது என் உறுதியான புரிதல்..

என் உடன் பள்ளியில் படித்த ஒரு மாணவன் பிராமணர்.. அவர்கள் குடும்பத்தின் நிர்வாகத்தில் ஒரு அரசு உதவிபெறும் பள்ளியே நடந்து வந்து. ஆனால் அவன் மிகவும் பிற்பட்டோர் பிரிவில் பொறியியல் நுழைவிற்கான ஒதுக்கீட்டை பெற்றான்.. அவனிடம் கேட்டே விட்டேன்.. தாங்கள் பிராமணர்களில் ஒரு பிரிவான சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ வகுப்பை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் எண்ணிக்கையில் மிகச்சிறுபான்மையினர் என்பதால் தாங்கள் மிகப்பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கப்பட்டதாகவும் அவன் சொன்னான்.. அவன் சொல்லாமல் நான் பின்னாளில் சமூகநீதி,மானிடவியல் தொடர்பாக வாசித்தறிந்தது அந்த பிரிவினர் பிராமணர்களில் படிநிலைகளில் கீழாக கருதப்பட்டனர் என்பதும், பெரியளவு வைதீக அதிகாரங்களற்ற பிரிவினர் என்பதும்..

து தமிழகத்தின் சமூகநீதி அரசியலின் நுட்பமான சமநிலையுணர்வை நான் கண்டறிந்த தருணமாக அமைந்தது..
தமிழகத்தின் பிராமணர்களில் ஸ்மார்த்தர் களும், ஐயங்கார்களும், வைசியர்களில் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மற்றும் ஆர்ய வைஸ்யர்களுமே பொதுப்பிரிவில் வரும் முக்கிய சமூகங்கள்.. இவர்களின் சமூக படிநிலை பொருளியல் சூழல் ஆகியவை எவ்விதத்திலும் தமிழகத்தின் இடைநிலைச்சாதிகளை விட மேம்பட்டவை.. எண்ணிக்கையில் மொத்தமாக 5% இருந்தால் அதிகம்.. எனவே தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் பொதுப்பிரிவிலேயே போட்டியிடும் வாய்ப்பும் சூழலும் பெற்றவர்களே.. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.. ஆனால் பொதுச்சூழல் இதுவே..

தமிழகம் ஒப்பீட்டளவில் இந்தியாவில் மேலான சமூக பொருளியல் அளவீடுகளுடன் உள்ளதற்கு 70 களின் பிற்பகுதியில் நிகழத்துவங்கிய இடைநிலைச்சாதிகளின் அதிகாரவர்க்க நுழைவும், 90 களின் உலகமயமாக்கல் சூழலுக்குகந்த வகையில் அவர்களின் பிள்ளைகள் உயர்கல்வி பெற்றதும், முக்கிய காரணிகள்.. இவையிரண்டும் தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே கட்சி பாகுபாடின்றி நிகழ்ந்த சமூகநீதி அரசியலின் கனிகள்..

எனவே இத்தகைய ஒரு விசயத்தில் மோடி அரசு மாநிலங்களின் நிலைப்பாடுகளை கோராமல் ஒரு மசோதாவை அவசரகதியில் இழிவான உள்நோக்கோடு கொண்டுவருவதும் பொது விவாதமின்றி நிறைவேற்ற முற்படுவதும் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கு முற்றிலும் எதிரானது.. இந்த கோணத்திலேனும் இது கடுமையாக எதிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நிகழவில்லை என்பது துரதிருஷ்டவசமானது..

பொதுவாக அதிகார வரிசையில் நான் நாடாளுமன்றத்தின் ஆதரவாளன்.. நீதிமன்றங்கள் நிர்வாக அதிகாரம் செலுத்த முற்படும் தருணங்களில் எவ்வளவு முரண்பாடுடையவர்கள் ஆண்டாலும் அரசின் தரப்பிற்கே என் ஆதரவு.. காரணம் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தின் பக்கம் நிற்காமல் நீதிமன்ற படிகளை பார்க்க நேர்ந்தது எனது தனிப்பட்ட அவலம் கூட..

எனவே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிலையோடு எனது முரண்பட்ட இந்த நிலைப்பாட்டை வெளிப்படையாக நேர்மையாக தெரிவித்தல் அவசியமானது..
எனவே இந்த விசயத்தில் தமிழகத்தின் அரசியல் பொதுக்குரலோடு இணைந்து நிற்கவே விரும்புகிறேன்.. அதுவே சமூகநீதியின் முகமாக திகழ்ந்த தமிழகத்தின் முன்னோடி காங்கிரஸ்
தலைவர்கள் ஓமந்தூரார் மற்றும் காமராஜர் ஆகியோருக்கு செய்யும் நியாயமாக இருக்க முடியும்..

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதைக்கடுமையாக எதிர்த்த மு.தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், கனிமொழி ஆகியோர்க்கு எனது பாராட்டுகள்..

– முருகானந்தம் ராமசாமி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
இளைஞர் பிரிவுச் செயலாளர்

 

Leave A Reply

Your email address will not be published.