பாக்யா இதழின் திருட்டில் இருந்து திருட்டு தீர்ப்பு சொல்வாரா இயக்குநர் பாக்யராஜ் ?

பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு

0 241

பாiக்யா இதழின் நிஜ திருட்டுக்கு தீர்ப்பு சொல்வாரா இயக்குநர் பாக்யராஜ்?: ஒரு பகிரங்கக் கடிதம்

 

இயக்குநர் பாக்யராஜ் அவர்களுக்கு, வணக்கம்.

 

நான் டி.வி.எஸ். சோமு. கடந்த 24 வருடங்களாக பத்திரிகையாளராக இருக்கிறேன்.

மலைமலரில் வெளியானது

திரைத்துறையில் நடந்த கதைத் திருட்டுப் புகாருக்கு நல் தீர்ப்பு சொன்னவர் நீங்கள். ஆனால் தாங்கள் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளராக இருக்கும் பாக்யா இதழில் நடந்திருக்கும் நிஜ திருட்டை கண்டுகொள்ளவில்லை என்று தோன்றுகிறது.

 

தங்கள் திரைப்படங்களைப் போலவே பாக்யா வார இதழையும் மிக விரும்பும் ரசிக/ வாசகர்களில் நானும் ஒருவன். குறிப்பாக தங்களது “உங்கள் பாக்யராஜ் பதில்கள்” பகுதி மீது மிக ஈர்ப்பு உண்டு.

 

இந்த நிலையில், “பிப்ரவரி 8 -14” தேதியிட்ட பாக்யா இதழில் எனது வாழ்வில் நடந்து நான் எழுதிய கட்டுரை ஒன்று, மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக தவறுதலாக வெளியாகி உள்ளது.

டி.வி.எஸ். சோமு – பத்திரிகையாளர்

 

சென்னையில் தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் உதவி ஆசிரியராக நான் பணிபுரிந்தபோது, என் அப்பா அழகிரி விசுவநாதன் தஞ்சையில் இருந்து மணியார்டர் அனுப்பும்போது, son என்பதற்கு பதிலாக sin என்று தட்டச்சியிருந்ததையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் எழுதியிருந்த எனதுமுகநூல் பதிவு அது.

 

அது லட்சக்கணக்கில் வாட்ஸ்அப், முகநூல் ட்விட்டரில் பகிரப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் அது அப்படியே வெளியிடப்பட்டு எழுத்தாளர் சுஜாதா எழுதியதாக தங்களது பாக்யா இதழ் கேள்வி பதில் பகுதியில் வெளியிட்டிருக்கிறீர்கள். இதை நண்பர்கள் பலர் எனக்கு கூறினார்கள். பிறகு நானும் பார்த்தேன்.

 

அதற்கான ஆதாரத்தை இணைத்து இணைத்து தங்களது எண்ணுக்கு வாட்ஸ் அப் அனுப்பினேன். அதோடு தங்களுக்கும் அலை பேசினேன். தங்களது உதவியாளர் மணிகண்டன் என்பவர் பேசினார். தாங்கள் டிஸ்கசனில் இருப்பதாகவும் இது குறித்து தங்களிடம் சொல்வதாகவும் கூறினார். சில நாட்களாகியும் பதில் இல்லை . ஆகவே மீண்டும் தங்கள் எண்ணுக்கு அலைபேசினேன். அதே பதிலைச் சொன்னார். மீண்டும் மீண்டும் அப்படியே நடந்தது.

 

பிறகு, பாக்யா இதழின் உதவியாசிரியர் ஜெகதீஸ் என்பவரது எண்ணை அளித்தார். அவரிடமும் விவரத்தைச் சொன்னேன். அவர், தான் பணி புரியும் இதழில் இப்போடியோர் தவறு நடந்துவிட்டது என்பதற்கான பதட்டமே இன்றி, “அப்படியா.. பாக்யராஜ் சாரிடம் சொல்கிறேன்..” என்றார்.

 

மறுபடி மறுபடி நான் அலைபேசியபோதும் இதே பதில்தான்.

 

இதற்கு முன்பாக கடந்த (2019) மாலை மலர் பொங்கல் சிறப்பிதழில் தான் இந்தத் தவறு முதலில் நடந்தது. அதாவது முகநூலில் நான் எழுதிய எனது சொந்த அனுபவத்தை சுஜாதா எழுதியது போல வெளியிட்டது. மாலை மலர் இதழுக்கும் மெயில் அனுப்பி, உதவி ஆசிரியர்கள், ஆசிரியர் சந்திரமோகன் ஆகியோரிடம் பேசி.. எந்தப் பலனும் இல்லை.

 

அவர்களை (மாலைமலர்) பார்த்து தங்கள் இதழில் வெளியாகி இருக்கிறது. ஆனால் மாலை மலரில் இருந்து எடுக்கப்பட்டது என்பதுகூட தங்கள் இதழில் குறிப்பிடப்படவில்லை. அதாவது திருட்டில் இருந்து திருட்டு.

 

குறிப்பிட்ட சம்பவ கட்டுரையிலேயே எனது சொந்த ஊர் தஞ்சை என்பதும், நான் “தமிழன் எக்ஸ்பிரஸ்” இதழில் பணியாற்றியவன் என்பதும் வரும். எழுத்தாளர் சுஜாதா பிறந்தது ஸ்ரீரங்கத்தில். அவர் என்றுமே தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் பணியாற்றியதில்லை.

 

ஒருவரது சொந்த கட்டுரையை இன்னொருவர் பெயரில் வெளியிடுவது தவறு.. குற்றம். அதே நேரம் சுஜாதா மிகப்பெரிய எழுத்தாளர். அவரது பெயரில் அவர் எழுதாததை வெளியிடுவதும் தவறு.

 

மிகப்பெரிய இயக்குநரான தங்களை நெகிழ வைக்கும் அளவுக்கு எனது வாழ்க்கைச் சம்பவம் – எழுத்து இருந்தது குறித்து மகிழ்கிறேன். அதே நேரம் ஒகுவது கதையைத் திருடுவதே தவறென்று நினைக்கும் நீங்கள், ஒருவரது உணர்வுகளைத் திருடுதும் தவறு என்பதை உணர்வீர்கள் என நம்புகிறேன்.

 

இது குறித்த விளக்கத்தை தங்களது பாக்யா இதழில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

 

நன்றி.

 

தங்கள் உண்மையுள்ள, –

 

டி.வி.எஸ். சோமு, – பத்திரிகையாளர், – சென்னை – 91 –

 

( இணைப்பு:

 

அ. சுஜாதா எழுதியதாக தவறுதலாக பாக்யா இதழில் வெளியான பகுதி

 

ஆ. இரு வருடங்களுக்கு முன் 28 அக்டோபர், 2017 அன்று நான் எழுதிய முகநூல் பதிவு

 

இ. மாலை மலர் பொங்கல் மலரில் தவறுதலாக வெளியானது

 

ஈ. தங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பிய விளக்கம்

 

உ. பாக்யா உதவியாளர் ஜெகதீஸ் எண்ணுக்கு அனுப்பிய விளக்கம்)

பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு தன்னுடைய முகநூலில் பகிங்கர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.