22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது !

0 62

22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது !

சமீபகாலமாக கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தான் தைரியமாக கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையர்கள்.

மாதவரம், புழல் ஆகிய பகுதிகளில் 22 இடங்களில் கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 110 பவுன் நகைகள், 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

 

போலீசார் ரோந்து

சென்னையை அடுத்த மாதவரம் மாத்தூர் மஞ்சம்பாக்கம் ஜங்‌ஷன் அருகே மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்தும்படி போலீசார் கூறினர்.

 

அவர்கள் நிறுத்தாமல் சென்றதால் போலீசார் விரட்டிச்சென்று இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களை விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவந்து தீவிர விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் பிரபல கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.

 

22 இடங்களில் கொள்ளை

கடந்த சில மாதங்களாக மாதவரம், புழல், மாதவரம் பால்பண்ணை ஆகிய பகுதிகளில் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, கத்தியை காட்டி வழிப்பறி செய்வது, பெண்களிடம் செயின் பறிப்பது போன்ற 22 இடங்களில் கைவரிசை காட்டியவர்கள் என்பதும் தெரியவந்தது.

 

அவர்களிடம் மாதவரம் போலீஸ் துணை கமி‌ஷனர் ராஜேந்திரன், உதவி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், சங்கர் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் மேலும் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

 

5 பேர் கைது

செங்குன்றத்தை அடுத்த ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரை சேர்ந்த தோமையாராஜ் (வயது 49), மணலியை சேர்ந்த சதீஷ்குமார் (27), காஞ்சீபுரம் பாலுநகரை சேர்ந்த ராஜா என்கிற முருகேசன் (49), செங்குன்றம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சதீஷ் (31), செங்குன்றம் காந்திநகரை சேர்ந்த சிவக்குமார் (41) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

 

அவர்களிடமிருந்து 110 பவுன் நகைகள், 2 சொகுசு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரையும் போலீசார் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

 

இதில் தோமையாராஜ் பழைய குற்றவாளி. 3 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமிருந்து 175 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர் கொள்ளையடிப்பதற்காகவே சொகுசு கார்களை திருடி, காரின் நம்பர் பிளேட்டை மாற்றிவிட்டு கொள்ளையடிப்பதற்கு பயன்படுத்தி வந்தார்.

 

பிரபல கொள்ளையர்களை கைது செய்த போலீசாரை போலீஸ் உயர் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!