இவர்களையா கொண்டாடினோம் !

0 1,094
  1. இவர்களையா கொண்டாடினோம்?

========================

கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் வந்து 100 நாள் ஆகப்போகிறது. ஒரு பக்கம் அது வேகமாகப் பரவுகிறது. இன்னொரு பக்கம் மத்திய, மாநில அரசுகள் வைரஸை கட்டுப்படுத்த தீவிரமாக உழைக்கிறது. அல்லது உழைக்கிற மாதிரி நடிக்கிறது. எதுவாக இருந்தாலும் அப்படியே இருக்கட்டும். நான் சினிமாக்காரன் என்பதால் அதுபற்றி பேசுவோம்..

அமிதாப்பச்சன் தள்ளாத வயதிலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை விமானம் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அடிக்கடி மக்களுக்கு அட்வைஸ் பண்ணுகிறார்.

இங்குள்ள ஹீரோக்கள் திரையில் அடித்து துவைத்த வில்லன் சோனுசூட் மும்பையில் தவித்த தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்தது உள்பட அத்தனை ஹீரோ வேலையும் செய்கிறார்.

இங்குள்ள ஹீரோக்கள் போன்று கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிற அக்ஷய்குமார் 30 கோடி வரை கொடுத்து விட்டும் களத்தில் நின்று வேலை செய்கிறார்.

நிஜ வாழ்க்கையில் வில்லனாக சித்தரிக்கப்படும் சல்மான்கான் நள்ளிரவில் நடுரோட்டில் நின்று மக்கள் பணியாற்றுகிறார்.

பக்கத்தில் உள்ள கர்நாடக மாநிலத்தில் தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்ட நடிகை பிரணதி, தமிழ் ஹீரோக்களால் திரையில் அடிக்கப்பட்ட வில்லன் பிரகாஷ்ராஜ் இருவரும் தங்கள் முதலீடுகளை விற்று களத்தில் நின்று பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

ஒரு படத்துக்கு 80 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி 50 லட்சம் கொடுத்தார்.

ஒரு படத்துக்கு 70 கோடி சம்பளம் வாங்கும் அஜீத் ஒண்ணேகால் கோடி கொடுத்தார்.

ஒரு படத்துக்கு 60 கோடி சம்பளம் வாங்கும் விஜய் ஒரு கோடியே 30 லட்சம் கொடுத்தார்.

மற்றவர்கள் 2 லட்சம் முதல் 20 லட்சம் வரை கொடுத்தார்கள்.

இன்னும் சிலர் அரிசி கொடுத்தோம், உப்பு, புளி, மிளகா கொடுத்தோம் என பி.ஆர்.ஓக்கள் மூலம் மலிவான விளம்பரம் தேடுகிறார்கள்.

பணக் கணக்கு என்பது பேச்சுக்குதானே தவிர இவர்களின் மனகணக்கு என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் நடிகர்கள் கொடுத்த பணம் எல்லாமே அவர்களின் பாக்கெட் மணி. அல்லது அவர்களின் ஒரு நாள் நட்சத்திர ஓட்டல் பில். அதை விட்டு விடலாம். அதைத்தாண்டி இவர்கள் என்ன கிழித்தார்கள்? ராகவா லாரன்ஸ் தவிர்த்த அத்தனை நடிகர்களும் இங்கு வியாபாரிகள், சுயநலவாதிகள்.

இவர்களின் படத்தை பார்க்க எதற்காக அதிகாலை 5 மணிக்கு ரசிகர்கள் ஷோ என்ற பெயரில் தியேட்டருக்கு செல்கிறீர்கள்?. கை தட்டுகிறீர்கள், விசில் அடிக்கிறீர்கள். முதல் நாள், முதல் ஷோ பார்க்க ஆயிரக் கணக்கில் பணம் செலவழிக்கிறீர்கள்?. மன்றம் அமைத்து கொடி பிடிக்கிறீர்கள்? இது உங்களுக்கான கேள்வி.

நடிகர்களுக்கான கேள்வி…

சமூகம் பற்றி, அரசியல் பற்றி பேச உங்கள் யாருக்கும் தகுதியில்லை. (கமல் அரசியல்வாதியாகி விட்டதால் அவருக்கு விதிவிலக்கு. அவரை அரசியல் களத்தில் விமர்சிக்கிறேன்)

தயவு செய்து இனி கேமராவை பார்த்து 120 ரூபாய் டிக்கெட் எடுத்து படம் பார்க்க வந்திருக்கிறவனுக்கு அறிவுரை சொல்லாதீர்கள்.

தயவு செய்து பன்ஞ் டயலாக் பேசாதீர்கள், தொடை தட்டாதீர்கள், மீசை முறுக்காதீர்கள், புழுதி பறக்க நடக்காதீர்கள். கேரக்டருக்குள் இயல்பாய் இருங்கள்.

முகநூலில் மீரான்..

Leave A Reply

Your email address will not be published.

error: Alert:Please Share the Link. Content is protected !!