கொரோனா கொடூரமா? சைக்கோ காமடியொ?

0 168

கொரோனா கொடூரமா? சைக்கோ காமடியொ?

காலையில் எழுந்ததும் துக்கச்செய்தி, மாமி தவறிவிட்டார். பெரிய சாவு..லோக்கலில்தான் வீடு. மாலை வாங்கிக்கொண்டு அவருடை வீட்டை அடைய எந்தபக்கம்போனாலும் வழியில்லை. அடைப்புகள். சாலையை மறித்து பூட்டப்பட்ட பிரமாண்ட கதவுகள்.. காஞ்சியில் பிறந்தவனே சுற்றி சுற்றி வருகிறேன்.

ஒரு மணிநேர அலைச்சலுக்கு பிறகு, எதோ ஒரு சந்து வழியாக வீட்டுக்குபோனால் உயிரற்ற மாமி.. கொஞ்ச நேரத்தில் எப்படியெப்படியோ நுழைந்து உறவினர்கள் வந்தபடி இருந்தனர். எல்லார் முகத்திலும் வழி கிடைக்காததின் சலிப்பு..

திரும்பும்போது, வழியில் காஞ்சியின் புகழ்பெற்ற சர்வதீர்த்த குளம். பித்ரு கடன்கள் செய்யப்படுகிறத ஒரு புண்ணியதலம்.. ஓரமாய் நின்று. ஒரு கணம் யோசித்து பார்த்தேன்..ஊரையே அடைத்து மக்களை நடைப்பிணங்களாக மாற்றிப்போட்டு விட்டிருக்கிறது கொரோனா என்ற பெயரிலான ஏற்பாடுகள்..

எப்படியெப்படியோ நடக்கவேண்டிய இறுதி ஊர்வலம், இந்த சூழலில் நடக்கும் விதத்தை பார்த்தால்,, என்ன கர்மம்டா இதெல்லாம் என்று தலையில் அடித்துகொள்ள தோன்றுகிறது..

நெய்வேலியில் உள்ள என் தயாரை பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது.. இவ்வளவுநாள் பார்க்காதிருப்பது வாழ்க்கையில் இதுதான் முதன்முறை. குறுக்கே நிற்பது, கொரோனா என்ற மர்மம். இதுபற்றி, யாருக்கு முழுதாக புரிந்தது என்றே தெரியவில்லை..

பூக்கடை சத்திரத்தையொட்டிய எங்கள் தெருவில் 50 நாட்களாக அடைக்கப்பட்டிருக்கிறோம். 99.9 சதவீத மக்களுக்கு உடல்நலக்குறைவு இல்லை. எங்கே எவனுக்கோ கொரோனா என்றால், ஆரோக்கியத்து டன் இருக்கும் எங்கள் எல்லார் தலையிலும் மாற்றி மாற்றி இடியை இறக்கியபடியே இருக்கிறார்கள்.
நானொன்றும் கடுமையான நோய்க்கொடுமையை சந்திக்காதவன் அல்ல.

சில ஆண்டுகளுக்குமுன் இதய அடைப்புகளுக்காக பைஃபாஸ் சர்ஜரியை கண்டவன். பத்து நாட்களுக்கு சித்ரவதையை அனுபவித்தவன். வயதான என் தாயாரால் பணிவிடை செய்ய முடியாதததால், பிரம்மச்சாரியான எனக்கு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு என் சகோதரியும் மைத்ததுனர்தான் எனக்கு கழுவிவிடுதல், குளிப்பாட்டுதல் எல்லாமே.. அடுத்தவருக்கு இப்படி பாரமாக இருக்கிறோமே, என மனதளவில் அதெல்லாம் நரகவேதனைகள்..

அப்படிப்பட்ட நான் இப்போது இந்த கொரோனாவை யும் அது தொடர்பான செய்திகளையும் அலசிப்பார்க்கிறேன்..

ஒருவனுக்கு நோய்த்தொற்று என்றவுடன் அவன் வசித்த ஏரியாவையே சீல் வைக்கிறார்கள். மற்றவர்கள் பல வாரங்களாக ஆரோக்கியத்துடன் இருந்தாலும் அந்த சீல் வளையத்துக்குள் அடிமைப்பெண் கூனன் எம்ஜிஆர் மாதிரி அனைவரும் உலாவர ஆரம்பித்திருக்கிறோம் இயல்பு வாழ்க்கையே மறந்துபோய்விட்டது. எதைக்கேட்டாலும் ஒற்றை வார்த்தை, கொரோனா என்று சொல்லி கேள்விகளை புதைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறது அரசாங்கத்தின் அதிகார வர்க்கம்..

இன்னொரு பக்கம் சீல் வளையத்தில் சிக்கியவர்கள் கொரோனா தொற்று ஆளையும் அவன் குடும்பத்தையும் வேண்டப்படாத ஜந்து மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி, தொற்று அறிகுறிக்கு உள்ளானவனின் தொடர்புடைய அத்தனை பேரும் அரசாங்க விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.. அவர்களும் கொரோனாகாரனை சபிக்கிறார்கள்..

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பார்ட்டி என்னமோ, தேடிப்போய் வேண்டுமென்றே நோய்தொற்றை வாங்கி வந்தா மாதிரி அவனை எல்லோரும் ஏளனமாக பார்க்கும் அவலம்..இப்படியாக சித்திரிக்கும்போக்கு எங்கு போய் முடியும் என்றே தெரியவில்லை.

சரி போகட்டும் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அனைவரையும் பீதியில் பேதி ஆகட்டும் என்று சொல்லவைக்கிற கொரோனா என்ன, கொடிய வியாதியா? குணப்படுத்தவே முடியாதா ஒன்றா? இல்லை நோய் தொற்று வந்த கொஞ்ச நேரத்தில் உயிரை வாங்கிவிடுகிறதா?

நோய் தொற்று வந்துவிட்டவர்கள் அனைவரையும், வெண்டிலேட்டர் போன்ற சாதனங்கள் உதவியோடு தான் காப்பாற்றி அனுப்பியிருக்கிறார்களா?
நோய் தொற்றை வென்றவர்கள், காப்பாற்றப்பட் டவர்கள் என்றெல்லாம் சொல்லப்படுபவர்கள் தனிமைப்படுத்துதல் என்ற கொடுமையைத்தவிர மருத்துவ ரீதியாக என்ன கடுமையை எதிர்கொண்டார்கள்?

அரசாங்க மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப் பட்டு சிகிச்சை அளிக்கப்படுவர்களுக்கும், பூட்டப்பட்ட தெருக்களில், வருவாயே இல்லாமல் ஒன்றரை மாதங்களாக முடங்கிக்கிடப்பவர்களுக்கும் இடையே என்னென்ன வித்தியாசங்கள் ? விடையை தேடத்துடிக்கிறது பாழாய்ப்போன மனசு..

இங்கே இவ்வளவு பேருக்கு தொற்று, அங்கே அவ்வளவு பேருக்கு தொற்று என்று தினந்தோறும் புள்ளிவிபரங்கள் டமாரம் அடிக்கப்படுகின்றன. பீதிதான் மிஞ்சுகிறது

சரி, தொற்று என்றால் என்னென்ன அறிகுறிகள்? சளி, இருமல் காய்ச்சல், மூச்சுத்திணறல் தாண்டி வேறு என்ன அளவுகோல்களை வைத்து முடிவுக்கு வருகிறார்கள்?.இதையெல்லாம் யாரிடம் கேட்பது? யார் சொல்லப்போகிறார்கள்?

லாக் டவுன் ஆரம்பித்து 45 நாட்களுக்கு மேலாகிறது. இதுவரை இன்று மே 7-ந்தேதிவரை கொரோனா பலி தமிழகத்தில் எண்ணிக்கை 29 பேர். அதாவது தினம் ஒருவர் கூட அல்ல.. சராசரியாக மூன்று நாட்களுக்கு இருவர் என்ற அளவில் மரணம்.

கேட்டால், அமெரிக்கா, இத்தாலி மாதிரி இந்தியாவும் போய்விடக்கூடாது என்கிறார்கள்.. இங்கு, அதாவது பக்கத்தில் நடப்பதே எனக்கு ஒன்றும் புரியவில்லை.. வெளிநாடு வெவ்வேறு சூழல், தட்பவெப்பம் உடல்வாகு நோய் எதிர்ப்பு சக்தி மருத்துவ சிகிச்சை முறைகள் என ஏராளமான விஷயங்கள் உண்டு. எல்லாவற்றையும் ஒரே நேர்கோட்டிலும் அளவுகோலிலும் போட்டு குழப்பிக்கொள்ள மனம் மறுக்கிறது.

30 கிலோ மீட்டர் தொலைவில் இறந்துகிடக்கும் மகனின் உடலை பார்க்க, பெற்ற தாயே, நள்ளிரவில் நான்கு மணிநேரம் அதிகாரிகளிடம் போராடிய வேதனை கட்டத்தையும் இரு தினங்களுக்கு முன்புதான் அனுபவித்தேன்..

கொரோனா கொடுமைகளை அனுபவிப்பதைவிட, போய் சேர்ந்துவிடலாம் போலிருக்கிறது என்று பலரும் புலம்புவது காதில் விழுந்தவண்ணமாகவே உள்ளது..

வீட்டுக்கு உள்ளே இரு என்று சொல்வதைதவிர, வேறெதையும் அரசாங்கம் சொல்வதாக தெரியவில்லை..அரசு சொல்வதால் மதித்து கேட்கிறேன். குடிமகனாய் அதன் சட்ட திட்டங்க ளுக்கு கட்டுப்பட்டு இப்போதும் நடக்கிறேன். ஆனால் அரசாங்கம் அறிவோடும் தெளிவோடும்தான் பேசுகிறது என்ற அளவுக்கு என் புத்திக்கு தெளிவில்லை.

குறைந்தபட்சம் புத்தியை நன்றாக தெளிய வைப்பவர்களாவது தென்படுகிறார்களா என்று பார்த்தால், எங்கோ இருக்கும் டாஸ்மாக்கிற்கு செல்லும் நீண்ட வரிசைதான் தென்படுகிறது.

  • மூத்த பத்திரிகையாளர் – ஏழுமலை வெங்கடேஷன்-
Ezhumalai Venkatesan

 

Leave A Reply

Your email address will not be published.